நீதிபதிகள் நியமனத்தில் அலட்சியம் கூடாது

நீதிபதிகள் நியமனத்தில் அலட்சியம் கூடாது
Updated on
2 min read

இந்திய உயர் நீதிமன்றங்களில் மொத்தம் உள்ள 1,122 நீதிபதிப் பணியிடங்களில் 757 மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 32% பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன என்பதும் உயர் நீதிமன்றங்களில் 61 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்பதும் இந்தியா போன்ற மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் நீதி பெறுவதற்காகச் சாமானிய மக்கள் எந்த அளவுக்குக் காத்திருக்க வேண்டும் என்பதைப் பட்டவர்த்தனம் ஆக்கியுள்ளன.

இந்திய உயர் நீதிமன்றங்களில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள், நிரப்பப்படாத நீதிபதிப் பணியிடங்கள் குறித்துமதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய சட்டம் - நீதித் துறை அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பினார்.

அந்தக் கேள்விக்குப் பதில் அளித்த மத்திய சட்ட இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால், 25 இந்திய உயர் நீதிமன்றங்களில் மிகச் சிறிய மாநிலங்களான மேகாலயம் (4), திரிபுரா (5), சிக்கிம் (3) ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே நீதிபதிப் பணியிடங்கள் முழுவதுமாக நிரப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். சில உயர் நீதிமன்றங்களில் 50%க்கும் குறைவான நீதிபதிகளே பணியில் இருக்கின்றனர்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 160 நீதிபதிப் பணியிடங்களில் 81 மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. அங்கு 10 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. குஜராத்தில் 52 பணியிடங்களில் 32 நீதிபதிகள் மட்டுமே பணி அமர்த்தப்பட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் 9 நீதிபதிப் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் 5 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

உச்ச நீதிமன்றத்தில் 19,569 வழக்குகளும் உயர் நீதிமன்றங்களில் 27,31,298 வழக்குகளும் மாவட்ட - சார்பு நீதிமன்றங்களில் 1,15,96,339 வழக்குகளும் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. நாடு முழுவதும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளே ஒன்றரைக் கோடியைத் தொடுகிற நிலையில் இருக்க, நிலுவையில் இருக்கும் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

போதுமான சாட்சியங்களும் ஆவணங்களும் இல்லாதது, தொடர் விடுமுறைகள், வழக்கறிஞர்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வழக்குகளின் தீர்ப்புகள் தள்ளிப்போகின்றன. ஆனால், நீதிபதிகள் இல்லாததால் தீர்ப்புகள் தள்ளிப்போவது என்பது அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட அடிப்படை நோக்கத்துக்கே எதிரானது.

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்போது மக்கள்தொகையின் சமீபத்திய கணக்கெடுப்பைக் கணக்கில்கொள்ளும் மத்திய அரசு, நீதிபதிகளின் எண்ணிக்கையிலும் நியமனங்களிலும் அதைக் கவனத்தில்கொள்வது அவசியம்.

மாவட்ட நீதிமன்றங்கள் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை அனைத்து நீதிமன்றங்களிலும் இருக்கும் காலியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, அதற்கேற்ப நீதிமன்ற உள்கட்டமைப்பையும் மேம்படுத்த வேண்டும்.

வழக்குகளை விரைவாக முடிக்கும் வகையில் நவீனத் தொழில்நுட்ப வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும். நீதிமன்றங்களில் எல்லா நிலைகளிலும் இருக்கும் ஊழியர்களின் பணிச்சுமையும் வழக்குகளின் தேக்கத்துக்குக் காரணமாகிறது. அதைக் கருத்தில்கொண்டு பணியாளர் நியமனங்களின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்தும் அரசு முடிவெடுக்க வேண்டும்.

பாதிக்கப்படும் மக்களின் கடைசிப் புகலிடமாக நீதிமன்றங்களே இருக்கின்றன. நாட்டின் அரசமைப்பையும் தேசத்தின் இறையாண்மையையும் காக்கும் நீதிமன்றங்களிலேயே போதுமான எண்ணிக்கையில் நீதிபதிகள் இல்லாதது, நீதிமன்றங்கள் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை நீர்த்துப்போகச் செய்துவிடும்.

தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பார்கள். போதுமான நீதிபதிகள் இல்லாததால் சாமானியர் ஒருவருக்கு நீதி கிடைப்பதில் ஏற்படுகிற தாமதமும் நீதி மறுக்கப்படுவதற்கு நிகரானதுதான் என்பதை அரசு உணர வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in