சாலை விபத்துகள்: கவலைக்குரிய இடத்தில் இந்தியா!

சாலை விபத்துகள்: கவலைக்குரிய இடத்தில் இந்தியா!
Updated on
2 min read

இந்தியாவில் சாலை விபத்துகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன என்னும் நிலை, அயர்ச்சியையும் வேதனையையும் ஒருசேர ஏற்படுத்துகிறது. டிசம்பர் 13இல் மக்களவையின் குளிர்காலக் கூட்டத்தொடரின்போது, ஒரு கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய மத்திய தரைவழிப் போக்குவரத்து-நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, 2024இல் நிகழ்ந்த சாலை விபத்துகள் குறித்துத் தெரிவித்த தகவல்கள் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருப்பதை உணர்த்துகின்றன. சாலை விபத்துகள் அதிக எண்ணிக்கையில் நிகழும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதும் கூடுதல் கவலை அளிக்கிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 1,78,000 பேர் சாலை விபத்துகளில் பலியாகின்றனர். இவர்களில் 60 சதவீதத்தினர் 18-34 வயதுக்கு உள்பட்டவர்கள். இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கும் நிதின் கட்கரி, “சர்வதேச மாநாடுகளில் சாலைப் பாதுகாப்பு குறித்துக் கேட்கப்படும் கேள்விகளுக்கு என்னால் பதில் அளிக்க முடிவதில்லை.

நான் இத்துறைக்குப் பொறுப்பேற்றபோது 2024 இறுதிக்குள் விபத்துகள், உயிரிழப்புகள் ஆகியவற்றின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், விபத்துகளைக் குறைப்பதைப் பற்றியெல்லாம் யோசிக்கும் அளவுக்கு நிலைமை இல்லை. மாறாக, விபத்துகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் மட்டும்

எங்கள் துறை நினைத்ததைச் சாதிக்க முடியவில்லை” என மனம் திறந்து பேசியுள்ளார். விபத்துக்கான முதன்மைக் காரணிகள் குறித்துக் குறிப்பிட்ட அவர், எத்தனை உயிரிழப்புகள் நடந்தாலும், சாலைவிதிகள் தொடர்ந்து மீறப்படுவதாகவும் சட்டம் குறித்த பயம் மக்களிடையே குறைந்துவிட்டதாகவும் கவலை தெரிவித்துள்ளார். பேருந்துகள் விபத்துக்குள்ளாவது அதிகம் நிகழும் நிலையில், பேருந்துகளின் கட்டுமானம் சர்வதேச விதிமுறைகளுக்கு உள்பட்டதாக அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சரக்குவாகனங்களைச் சாலையோரம் நிறுத்திவிட்டுச் செல்வது விபத்துகளுக்கு மிக முக்கியமான காரணியாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய நிதின் கட்கரிக்கு, அது தொடர்பான நேரடி அனுபவமும் உண்டு. 2001இல் நாக்பூர் அருகில் குடும்பத்தினருடன் அவர் சென்றுகொண்டிருந்த கார், சாலையோரம் இடைஞ்சலாக நிறுத்தப்பட்டிருந்த சரக்குவாகனம் மீது மோதியது. இதில் நிதின் கட்கரி, அவரது மனைவி, மகன், மகள், பணியாளர், ஓட்டுநர் ஆகியோர் காயமடைந்தனர். நீண்ட ஓய்வுக்குப் பிறகே அவர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடிந்தது.

விபத்துகளால் ஏற்படும் பேரிழப்புகளை அனுபவச்செறிவோடு பேசியுள்ள அமைச்சரின் வார்த்தைகள் வெறும் அறிக்கை வாசிப்பாகக் கடந்து செல்ல முடியாதவை. எனினும் தனிமனிதரைப் போல அமைச்சகம் கையறுநிலையில் நிற்க இயலாது. தனிமனிதர் வாழ்விலும் நாட்டின் மனித வளத்திலும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தும் சாலை விபத்துகளைக் குறைக்க, நடப்பில் உள்ள சட்டங்களை உறுதியாக அமல்படுத்துவதோடு, தேவைப்படும் சூழலில் புதிய விதிமுறைகளைக் கொண்டுவரவும் அரசு தயங்கக் கூடாது.

அதிக எண்ணிக்கையில் விபத்து நிகழ்வதில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. 2021 முதல் ‘இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48’ என்னும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு முன்னெடுத்துவருகிறது. அதேவேளையில், வேகக் கட்டுப்பாட்டைச் செயல்படுத்துவதில் கூடுதல் கவனம் அவசியம். கேரளத்தில், வாகனங்களின் வகைகளுக்கு ஏற்றவாறு வேகக் கட்டுப்பாட்டு நிபந்தனைகள் 2023 முதல் புதுப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டிருக்கின்றன.

வாகனங்களின் வேகத்தைக் கண்காணிக்க ஏஐ தொழில்நுட்பம் கொண்ட கேமராக்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதைத் தமிழகமும் பின்பற்றலாம். பெரும்பாலான விபத்துகள் இரவு நேரங்களில் நடக்கின்றன. வெளிச்சக் குறைவும், குண்டும்குழியுமான சாலைகளும்கூட விபத்துக்கு வழிவகுக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக மது போதையில் வாகனம் செலுத்துபவர்களால் நிறைய விபத்துகள் நிகழ்கின்றன. எனவே, விபத்துகளைத் தவிர்க்க அரசு நிர்வாகமும் பொதுமக்களும் இணைந்தே தீர்வுகளைக் காண வேண்டும்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in