சிரியாவில் ஆட்சி மாற்றம்: இந்தியாவுக்குக் கவனம் தேவை!

சிரியாவில் ஆட்சி மாற்றம்: இந்தியாவுக்குக் கவனம் தேவை!
Updated on
2 min read

சிரியாவில் கடந்த 24 ஆண்டுகளாக நீடித்த அதிபர் பஷார் அல்-அசாதின் சர்வாதிகார ஆட்சி ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. பெரும்பாலான சிரிய மக்கள் இதைக் கொண்டாடி வருகிறார்கள். எனினும், சிரியாவின் எதிர்காலம் அவ்வளவு எளிதாகச் சுமுக நிலையை அடைந்துவிடுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. தவிர, இந்த ஆட்சி மாற்றம் இந்தியா மீதும் தாக்கம் செலுத்தும் என்பதால், மிகுந்த உன்னிப்புடன் நாம் காய்நகர்த்த வேண்டிய தேவையும் எழுந்திருக்கிறது.

1970இல் பஷார் அல்-அசாதின் தந்தை ஹஃபீஸ் அல்-அசாத் ராணுவ சதி மூலம் ஆட்சியைப் பிடித்தார். அரசியல் உறுதித்தன்மையின்மை நிலவிய சிரியாவில், மிக இறுக்கமான ஆட்சியைக் கொண்டுவந்தார். பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையில் பிளவு ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் அதில் அடக்கம்.

2000இல் ஹஃபீஸின் மகன் பஷார் ஆட்சிக்கு வந்த நிலையில், ஆரம்பத்தில் அவரது சீர்திருத்த நடவடிக்கைகள் வரவேற்பைப் பெற்றன. எனினும், காலப்போக்கில் சர்வாதிகார ஆட்சியாக அது மாறியது. எதிர்க்கட்சிகள் அடக்குமுறைக்கு ஆளாகின. தவறான நிதிக் கொள்கை, ஊழல் அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை, வறுமை எனப் பல்வேறு இடர்ப்பாடுகளில் சிரிய மக்கள் சிக்கித் தவித்தனர்.

இந்தச் சூழலில் 2011இல் அரபு நாடுகளில் தொடங்கிய ‘அரபு வசந்தம்’ போராட்டத்தின் ஒருபகுதியாக, சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியது. பஷார் அரசுக்கு எதிராகப் பல்வேறு ஆயுதக் குழுக்கள் போராடின. ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் பஷார் அரசுக்கு ஆதரவளித்துவந்தன.

அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் பஷார் அரசுக்கு எதிராகச் செயல்பட்டுவந்தன. குறிப்பாக, அமெரிக்க ஆதரவுடன் செயல்பட்டுவந்த குர்து படைகள் ஒருபுறம், எல்லைப் பகுதிச் சச்சரவு காரணமாக இஸ்ரேல் படைகள் மறுபுறம் எனப் பல முனைகளிலிருந்தும் தாக்குதல்கள் நடந்துவந்தன. உள்நாட்டுப் போரால் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்தச் சூழலில், ஹயாத் தாஹ்ரிர் அல்-ஷாம் (ஹெச்.டி.எஸ்.) அமைப்பு கடந்த சில நாள்களாக நடத்திவந்த தாக்குதலின் உச்சமாக பஷார் அரசு வீழ்த்தப்பட்டிருக்கிறது. அரசு எதிர்ப்புப் படைகளை ஒருங்கிணைத்து பஷாரின் ஆட்சிக்கு முடிவுகட்டியிருக்கிறது ஹெச்.டி.எஸ். அமைப்பு.

துருக்கி, லெபனானில் தஞ்சம் அடைந்திருந்த சிரிய மக்கள், புதிய நம்பிக்கையுடன் மீண்டும் தாய்நாட்டுக்குத் திரும்பத் தொடங்கியிருக்கின்றனர். இடைக்காலப் பிரதமராக முகமது அல் பஷீர் பொறுப்பேற்றிருக்கிறார். சிறுபான்மையினர் உள்பட அனைத்துத் தரப்பினரும் சுமுகமாக வாழ வழிவகை செய்யப்படும் என ஹெச்.டி.எஸ். தலைவர் அபு முகமது அல்-கோலானி உறுதியளித்திருக்கிறார்.

எனினும், இனம், மதம் உள்ளிட்ட வேறுபாடுகள் நிறைந்த சிரியாவை நிர்வாகம் செய்வது புதிய ஆட்சியாளர்களுக்கு ஒரு சவால் என்பதில் சந்தேகமில்லை. ஹெச்.டி.எஸ். அமைப்பு ஒரு காலத்தில் அல்-கொய்தா அமைப்புடன் தொடர்பில் இருந்தது. இன்றைக்கும் பல நாடுகள் இதைப் பயங்கரவாத அமைப்பாகவே கருதுகின்றன. வன்முறை, போர் போன்றவற்றால் ஆட்சி மாற்றங்களைக் கண்ட லிபியா, இராக் போன்ற நாடுகளில் இன்றுவரை சுமுக நிலை திரும்பிவிடவில்லை.

தவிர, வளைகுடா நாடுகள், மேற்கு ஆசியப் பிராந்தியங்களில் நடக்கும் பிரச்சினைகள் இந்தியா மீது பல்வேறு விதங்களில் தாக்கம் செலுத்தக்கூடியவை. எனவே, இந்த விவகாரத்தை இந்தியா மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். ஹஃபீஸ், பஷார் ஆகியோரின் அரசுகளுடன் நல்லுறவையே இந்தியா பேணிவந்திருக்கிறது.

இஸ்ரேல், ஈரான் போன்ற நாடுகளிடமும் இந்தியா தொடர்ந்து நட்பு பாராட்டிவருகிறது. சிரியாவிலிருந்து இந்தியர்களைத் திரும்ப அழைத்துவரும் நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. சிரியாவில் சுமுக நிலை முழுவதுமாகத் திரும்பும்வரை இந்தியா தனது ராஜதந்திர நகர்வுகளை மிகக் கவனமாக எடுத்துவைக்க வேண்டும்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in