வங்கதேச விவகாரம்: கவனமான அணுகுமுறை அவசியம்!

வங்கதேச விவகாரம்: கவனமான அணுகுமுறை அவசியம்!
Updated on
2 min read

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான அச்சுறுத்தல்கள் அதிகரித்திருக்கும் சூழலில், இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி அந்நாட்டுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது சற்றே நம்பிக்கை அளிக்கிறது. அதேவேளையில், இரட்டை வேடம் போடும் வங்கதேசத்தைக் கூடுதல் கவனத்துடன் அணுகுவது அவசியமாகிறது. வங்கதேச விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என வெளியான அறிவிப்புக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் கவிழ்ந்தது.

அவர் இந்தியாவில் தஞ்சமடைந்த நிலையில், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது. புதிய ஆட்சியில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது கவலை அளிக்கிறது. இஸ்கான் அமைப்பின் தலைவர் சின்மயி கிருஷ்ண தாஸ் கைதுசெய்யப்பட்டது, சிட்டகாங் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள், இந்து மத வழிபாட்டிடங்கள் மீதான தாக்குதல்கள் போன்றவை இந்தக் கவலையை அதிகரித்திருக்கின்றன.

வங்கதேசப் பிரிவினைப் போராட்டத்தை எதிர்த்ததுடன், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இன்றுவரை செயல்பட்டுவரும் ஜமாத் - இ - இஸ்லாமி கட்சியினரும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் முகமது யூனுஸின் அரசில் அங்கம் வகிக்கிறார்கள். 1905இல் - வங்கப் பிரிவினைக் காலத்தில் - இஸ்லாமிய ஆட்சியை நிறுவ மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், 1971இல் வங்கதேச விடுதலைக்குப் பின்னர் சற்றே தணிந்திருந்தாலும் சமீபகாலமாக மீண்டும் வலுப்பெற்றுவருகின்றன. புதிய அரசுடன் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ நெருக்கம் காட்டுவதும் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.

இந்தச் சூழலில், டிசம்பர் 9 அன்று வங்கதேசம் சென்ற விக்ரம் மிஸ்ரி அந்நாட்டின் வெளியுறவுச் செயலர் ஜஷீம் உதீன், வெளியுறவு ஆலோசகர் தவ்ஹித் ஹுசைன் ஆகியோரையும், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்த முயற்சிகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேசத்தில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளும் தீவிரமடைந்துவருகின்றன. உருளைக்கிழங்கு முதல் பாலியெஸ்டர் இழை வரை பல இறக்குமதிப் பொருள்களுக்கு இந்தியாவையே வங்கதேசம் சார்ந்திருக்கிறது. இத்தகைய சூழலில், இந்தியாவைப் பகைத்துக்கொள்வது வங்கதேசத்துக்குத்தான் பெரும் இழப்பை ஏற்படுத்தும்.

அதேவேளையில், உணவுப்பொருள் இறக்குமதிக்கு இந்தியாவைச் சார்ந்திருக்காமல், பாகிஸ்தான் அல்லது துருக்கியை அணுக வேண்டும் என்றும் வங்கதேச அரசைச் சேர்ந்த பலர் பேசிவருகின்றனர். இன்னொரு புறம், வங்கதேசம் தொடர்பாக இந்திய அரசியல் தலைவர்கள் சிலர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிவருவதும் நிலைமையைச் சிக்கலுக்கு உள்ளாக்குகிறது.

அகர்தலாவில் வங்கதேச விசா அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போன்றவை சிக்கலை மேலும் அதிகரித்திருக்கின்றன. தங்கள் நாட்டில் அனைத்து மதத்தினரும் சுதந்திரமாக இருப்பதாகவும், இது தங்கள் உள்நாட்டு விவகாரம் என்றும் வங்கதேச வெளியுறவுச் செயலர் ஜஷீம் உதீன் கூறியிருப்பதும் கவனத்துக்குரியது. இந்தியாவில் தங்கியிருக்கும் ஷேக் ஹசீனா திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்றும் வங்கதேச ஆட்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

எல்லாவற்றையும் தாண்டி, பெரும்பாலான வங்கதேச மக்கள் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே தொடர்கின்றனர். இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, இந்தியா மிகுந்த கவனத்துடன் காய்நகர்த்த வேண்டியது அவசியம். இவ்விவகாரத்தில் சர்வதேசச் சமூகத்தின் ஆதரவைப் பெறுவது, வங்கதேசத்தில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய புதிய அரசு அமைய வழிவகுப்பது, வங்கதேசத்தின் பொருளாதாரச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டி நிபந்தனைகளை விதிப்பது என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றை ஆழமாகப் பரிசீலித்து உறுதியான, தீர்க்கமான நகர்வுகளை இந்தியா மேற்கொள்வது தீர்வுக்கு வழிவகுக்கும்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in