சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது?

சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது?
Updated on
2 min read

சட்டவிரோதமாகச் செயல்படும் மணல் குவாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் தரவுகளையும் சமர்ப்பிக்கும்படி, தமிழ்நாடு உள்பட ஐந்து மாநிலங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். சட்டவிரோத மணல் கொள்ளை விவகாரம் சுற்றுச்சூழலுக்குச் சவாலானதாக மாறிவரும் சூழலில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீவிரம் காட்டத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாடு, ஆந்திரம், மகாராஷ்டிரம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கட்டாயச் சுற்றுச்சூழல் அனுமதி எதுவும் பெறாமலேயே ஆறுகள், கடற்கரைகளில் சட்டவிரோத மணல் குவாரிகள் செயல்பட்டுவருவதாகவும், இதனால் மிகப் பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும் இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவின் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில்தான் தமிழ்நாடு உள்பட ஐந்து மாநிலங்கள் சட்டவிரோத மணல் குவாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த புள்ளிவிவரங்களையும் தரவுகளையும் சமர்ப்பிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சட்டவிரோத மணல் குவாரிகள் குறித்த பிரச்சினை நீண்ட காலமாகவே பேசப்பட்டுவருகிறது. மணல் கொள்ளையை முறைப்படுத்துவதாகக் கூறி, 2003இல் மணல் குவாரிகளை அரசே ஏற்ற பிறகு மாட்டுவண்டி, டிராக்டர்களைக் கொண்டு ஆங்காங்கே நடைபெற்ற மணல் கொள்ளை இரவு, பகல் பாராமல் ஆயிரக்கணக்கான லாரிகளில் மணலை ஏற்றிச் செல்லும் அளவுக்குப் பெருந்தொழிலாகிவிட்டது.

அனுமதிக்கப்பட்ட அளவைவிட மணலை அள்ளும் போக்கும் தொடர்கிறது. குறைந்த விலைக்கு மணலைப் பெற்று அதிக லாபத்தில் விற்பதன் மூலம் அரசுக்குச் செல்ல வேண்டிய வருவாய் தனியாருக்குச் சென்று, அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது என்பதை மறுக்க முடியாது.

திமுக, அதிமுக என எந்த ஆட்சி வந்தாலும் குவாரிகளை எடுத்து நடத்துபவர்கள் மாறுகிறார்களே தவிர, இதுபோன்ற காட்சிகள் மாறுவதில்லை என்கிற புகார்களும் தொடர்கின்றன. சட்டத்துக்குப் புறம்பாக மணல் எடுப்பவர்கள் எந்த எல்லைக்கும் செல்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளையர்களால், 2023இல் அவரது அலுவலகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தது.

இது ஒருபுறம் இருக்க, கண்மூடித்தனமாக எடுக்கப்படும் மணலால் பள்ளங்கள் உருவாகி, ஆற்றின் போக்கிலும் மாறுதல்கள் ஏற்படுகின்றன; நிலத்தடி நீர்மட்டத்தில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்வைக்கும் கருத்துகளும் புறந்தள்ள முடியாதவை.

தமிழ்நாட்டில் நடைபெற்றதாகக் கூறப்படும் மணல் குவாரி முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஐந்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆஜரானது, இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது. சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பான குற்றங்களைக் களைவதில் ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் ஏன் தீவிரம் காட்டுவதில்லை என்கிற கேள்விகளும் இயல்பாகவே எழுகின்றன. மணல் குவாரிகளை எடுத்து நடத்துபவர்கள் பெரும்பாலும் அரசியல் பின்புலம் கொண்டவர்களாக இருப்பதும் கவனிக்கத்தக்கது.

“சட்டவிரோத மணல் குவாரிகள் செயல்படுவது மிகத் தீவிரமான விஷயம். அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்ற அமர்வு கருத்துத் தெரிவித்துள்ளது. இனியாவது, சட்டவிரோத மணல் குவாரிகளையும் மணல் விற்பனையையும் தடுப்பது, மணல் குவாரிகள் அனுமதிக்குச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (இஐஏ) பெறுவது போன்ற வழிகாட்டல்களை உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு வழங்கும் என்று நம்பலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in