தனியாரின் வளங்களும் பொதுநலனும் முரணானவையா?

தனியாரின் வளங்களும் பொதுநலனும் முரணானவையா?
Updated on
2 min read

அனைத்துத் தனியார் சொத்துக்களையும் பொதுநலனுக்காகக் கையகப்படுத்த அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. பொதுநலனுக்கும் தனிநபர் உரிமைகளுக்கும் இடையிலான சமநிலையைப் பேணும் முயற்சியாக இந்தத் தீர்ப்பைக் கருதலாம்.

இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 39 (பி), “சமூகத்தின் பொருள் வளத்தின் (material resource of community) மீதான உரிமையும் கட்டுப்பாடும் பொதுநலனை முன்னெடுக்கும் வகையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்” என்கிறது. “பொதுநலனுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் தனியாரிடம் செல்வமும் உற்பத்திச் சாதனங்களும் குவிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்” என்று கூறு 39(சி) வரையறுக்கிறது. இவ்விரு கூறுகளின்படி தனியார் வசம் உள்ள சொத்துக்கள் உள்ளிட்ட வளங்களைப் பொதுநலனுக்காகக் கையகப்படுத்தும் அதிகாரம் அரசுகளுக்கு உள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், 1986இல் தனியார் சொத்துக்கள் சிலவற்றைக் கையகப்படுத்தும் வகையில், மகாராஷ்டிர அரசு வீட்டு வசதித் திட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது. இதை எதிர்த்துச் சொத்துரிமையாளர்கள் சிலர் தொடர்ந்த வழக்கை 1996இல் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. முன்னதாக 1977இல் ‘ரங்கநாத ரெட்டி எதிர் கர்நாடக அரசு’ வழக்கில் ஏழு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வில் நீதிபதி கிருஷ்ணய்யர் வழங்கிய தீர்ப்பில், தனியாருக்குச் சொந்தமான வளங்களும் சமூகத்தின் பொருள் வளங்கள் என்றே கருதப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

அவரது இந்தக் கூற்றின் அடிப்படையில், 1982இலும் 1997இலும் இருவேறு வழக்குகளில் உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வுகள் தீர்ப்புகளை வழங்கியிருந்தன. எனவே, மகாராஷ்டிர சொத்துரிமையாளர்களின் வழக்கு ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வுக்கு 2002இல் மாற்றப்பட்டது.

இந்த வழக்கில், தனியாருக்குச் சொந்தமான அனைத்து வளங்களையும் பொதுநலனுக்காக அரசு கையகப்படுத்தத் தகுந்த ‘சமூகத்தின் பொருள் வளங்கள்’ எனக் கருத முடியாது என்று ஒன்பது நீதிபதிகளை உள்ளடக்கிய அமர்வு 8:1 என்கிற பெரும்பான்மைத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஏழு நீதிபதிகளின் சார்பில் பெரும்பான்மைத் தீர்ப்பை எழுதிய அன்றைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அனைத்துத் தனியார் வளங்களும் சமூகத்தின் வளங்களே என்று கருதுவது சோஷலிஸக் கோட்பாடு சார்ந்த இறுக்கமான பார்வையை வெளிப்படுத்துவதாகக் கூறியுள்ளார். இந்தியப் பொருளாதாரத்தில் பல்வேறு சந்தைச் சீர்திருத்தங்களின் காரணமாகத் தனியார் முதலீடுகள் அதிகரித்துவிட்ட சூழலில், இந்தப் பார்வை பொருந்தாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ள நீதிபதி சுதான்ஷு தூலியாவின் கருத்துகள் ஆழ்ந்த பரிசீலனைக்கு உரியவை. இந்தியாவில் பொருளாதார, சமூக ஏற்றத்தாழ்வுகள் இன்றும் தொடர்வதைச் சுட்டிக்காட்டியுள்ள தூலியா, பொதுநலனுக்காகக் கையகப்படுத்தப்படக்கூடிய ‘பொருள் வளங்கள்’ என்பதன் எல்லையைச் சுருக்கும் வகையிலான பெரும்பான்மைத் தீர்ப்பைக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரம் சட்டமியற்றும் அவைகளிடமே விடப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், சோஷலிஸம் இறுக்கமான கோட்பாடு அல்ல; இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில் சோஷலிஸம் என்பது மக்கள்நலப் பொருளாதாரமே என்று குறிப்பிட்டிருக்கிறார்.

2023இல் இந்தியாவில் மிகப் பெரும்பணக்காரர்களாக இருக்கும் ஒரு சதவீதத்தினரிடம் நாட்டின் 40.1% செல்வம் குவிந்துள்ளதாக உலக சமத்துவமின்மை ஆராய்ச்சி மைய அறிக்கை தெரிவிக்கிறது. இந்தப் பின்னணியில் நீதிபதி தூலியாவின் கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

தனியாரின் சொத்து வைத்துக்கொள்ளும் உரிமையைப் பாதுகாப்பதும் மாறிவரும் சூழலுக்கு ஏற்பப் பொருளாதாரக் கோட்பாடுகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதும் அவசியம்தான். அதே நேரம், சமூகத்தின் மிகச் சிறிய சதவீதத்தினரிடம் மேலும் மேலும் வளங்கள் குவிவதால் விளையும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் களையப்பட வேண்டும். இதை உறுதிசெய்வது அரசுகள், நீதிமன்றத்தின் கடமை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in