குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் சுணக்கம் கூடாது

குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் சுணக்கம் கூடாது
Updated on
2 min read

தமிழ்நாடு மாநிலக் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்படாத நிலையில் இருப்பதாகக் குழந்தைகள் நலச் செயல்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், மிகுந்த கவலையையும் ஏமாற்றத்தையும் அளிக்கும் தகவல் இது.

தமிழ்நாடு காவல் துறை வெளியிட்ட தகவல்களின்படி போக்சோ சட்டத்தின்கீழ் 2021இல் 4,465 வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில், 2022இல் 4,968 வழக்குகளும் 2023இல் 4,589 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறிய அளவில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் போகப்போக இந்த வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும் என்று செயல்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நாங்குநேரி சம்பவம்போல் சாதிய வன்முறைக்குக் குழந்தைகள் ஆளாவதும் அதிகரித்துள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் சரியாக நடத்தப்படுவதையும் விரைவாக நீதி கிடைப்பதையும் கண்காணிப்பது ஆணையத்தின் முக்கியமான பணி. 18 வயதுக்கு உள்பட்ட குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கான சிறார் நீதிச் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்படும் வழக்குகளைக் கண்காணிப்பதும், தேவைப்பட்டால் இடையீடு செய்வதும் இந்த ஆணையத்தின் பொறுப்பு. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் சிறார் குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் அதிகரிப்பதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை அரசுக்கு வழங்குவதும் இந்த ஆணையத்தின் பணிகளில் ஒன்று.

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்கள் சட்டம் 2005இல் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது தேசிய அளவிலும் மாநிலங்களிலும் மத்திய ஆட்சிப் பகுதிகளிலும் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்களை நிறுவுவதற்கு வழிவகுக்கிறது. தமிழ்நாட்டில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை நிறுவுவதற்கான விதிகள் 2012இல் வெளியிடப்பட்டன. 2013இல் மாநிலக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஆணையத்தின் தலைவரும் ஆறு உறுப்பினர்களும் புதிதாக நியமிக்கப்படுவார்கள்.

2012இல் வெளியிடப்பட்ட விதிகள் ஆணைய உறுப்பினர்களுக்குப் போதுமான அதிகாரம் அளிக்கவில்லை என்றும் ஆணையத்துக்கு வலுவூட்டும் வகையில் விதிகள் மாற்றப்பட வேண்டும் என்றும் செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர். ஆளும்கட்சிக்கு ஆதரவான நபர்களையே ஆணையத்துக்கு நியமிக்கும் போக்கையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக நிபுணத்துவம் பெற்றவர்களே இந்த ஆணையத்துக்கு நியமிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

தமிழ்நாட்டில் இந்த ஆணையத்துக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம்வரை மட்டுமே நிதி ஒதுக்கப்படுவதாகவும் கேரளத்தில் இந்த ஆணையம் ரூ.6 கோடி முதல் 8 கோடி வரையிலான நிதியுடன் இயங்குவதாகவும் செயல்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தமிழ்நாட்டிலும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

2021 ஜனவரியில் அன்றைய அதிமுக அரசு நியமித்த ஆணையத்தை அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த திமுக அரசு மாற்றி அமைக்கப்போவதாக 2022இல் அறிவித்தது. ஆணையத்தின் மூன்று ஆண்டு பதவிக் காலம் நிறைவடைவதற்குள், இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டதற்கு எதிராக உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதிமுக அரசால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடைந்துவிட்டது. ஆனாலும் வழக்கு நிலுவையில் இருப்பதால் புதிய உறுப்பினர்களை நியமிக்க இயலவில்லை என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் களைவதும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதும் அரசின் தலையாய கடமைகளில் ஒன்று. இதற்கென்று உருவாக்கப்பட்ட ஆணையம் நீதிமன்ற வழக்கின் காரணமாக முறையாகச் செயல்படாமல் இருக்கும் சூழல் ஏற்கத்தக்கதல்ல. குழந்தைகளின் உரிமைகள் சார்ந்த செயல்பாட்டாளர்களின் பரிந்துரைகளைக் கவனத்துடன் பரிசீலித்து குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை வலுப்படுத்துவதற்கும் அதன் சீரான செயல்பாட்டை உறுதிப்படுத்துவதற்கும் அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in