

அ
மெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் சிங்கப்பூரில் சந்தித் துப் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. ராணுவ பலம் அல்ல, ராஜீய நடவடிக்கைகளே அமைதியை ஏற்படுத்தும் என்பதை உலகுக்கே உணர்த்தியிருக்கும் சந்திப்பு இது. இரு தலைவர்களும் சமரச முயற்சிகளுக்கு இசைந்து, சந்தித்துப் பேசியது தெற்காசியாவுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கே சற்று நிம்மதியைத் தந்திருக்கிறது. 1972-ல் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன், சீனாவுடனான உறவைச் சுமுக நிலைக்குக் கொண்டுவந்ததற்கும், அந்நாட்டுக்கே சென்று அதிபர் மா சே துங்குடன் பேசியதற்கும் இணையான நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.
வட கொரியா தன்னிச்சையாக அணு ஆயுதங்களைச் சோதனை நடத்தியதுடன், சமீப காலமாக அதிக சக்திவாய்ந்த ஏவுகணைகளையும் ஏவி சோதனை நடத்தி உலகின் பெரிய நாடுகளையெல்லாம் அச்சுறுத்தியது. இதனால், தென் கொரியா, ஜப்பான் மட்டுமல்லாமல் அமெரிக்காவும் உள்ளூர அஞ்சியது. அமெரிக்க அதிபர் டிரம்பை மனநலம் சரியில்லாதவர் என்றுகூட கிம் ஜோங் உன் வசைபாடினார். அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதாக இரு தலைவர்களும் பரஸ்பரம் மிரட்டிக்கொண்டதையும் உலகம் அச்சத்துடன் பார்த்தது.
இந்நிலையில், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் முன்னெடுத்த சமரச முயற்சிகள் இன்றைய சுமுகச் சூழலுக்கு வித்திட்டிருக்கின்றன. மூன் ஜே இன் முன்னெடுப்பைத் தொடர்ந்து, தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு விளையாட்டு வீரர்களை அனுப்பி வைத்தார் கிம் ஜோங் உன். இரு கொரியாக்களிடமும் உறவு மேம்பட்டு வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்புக்கே அழைப்புவிடுத்தார் கிம். இருவரும் சந்தித்துப் பேசுவார்களா என்பது நிச்சயமில்லாமல் இருந்த நிலையில், இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.
இரு தலைவர்களும் வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையில், கொரிய தீபகற்பத்திலிருந்தே அணு ஆயுதங்களை முற்றாக நீக்குவதுதான் தன்னுடைய லட்சியம் என்று கிம் வலியுறுத்தி யிருக்கிறார். அணு ஆயுதங்களை அழித்துவிட்டால், வட கொரியாவை யாரும் தாக்காதபடிக்குப் பாதுகாப்பு அளிக்க அமெரிக்கா தயார் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார் டிரம்ப். வட கொரியா ஏற்படுத்திவைத்துள்ள அணு ஆயுதக் கட்டுமானங்கள் பிரித்து அகற்றப்படும் என்கிறது கூட்டறிக்கை. இது எப்படி, எப்போது செய்யப்படும் என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. இறுதி நாள் என்று எந்தக் கெடுவும் இல்லை. கூட்டறிக்கையில் சீனாவின் பெயர் ஓரிடத்திலும் இடம்பெறவில்லை. டிரம்ப், கிம் இருவருடைய அரசுகளிலும் இவர்களைவிடத் தீவிரமான தேசியவாதிகள் முக்கிய இடங்களில் இருக்கின்றனர். அவர்களும் முழுமையாக ஒத்துழைத்தால்தான் இந்த முயற்சி வெற்றி அடையும். எனினும், உலகின் பதற்றத்தைத் தணிக்க வழிசெய்திருக்கும் இம்முயற்சி வரவேற்கத்தக்கது!