

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழகத்தில் தொடர்ந்து மேற்கொண்டுவரும் ஆய்வுப் பயணங்கள் அரசியல் கட்சிகளை மட்டுமின்றி சட்டத் துறையைச் சேர்ந்தவர்களிடமும் தீவிரமான விவாதங்களை எழுப்பிவருகிறது. ஆளுநர் அவ்வாறு ஆய்வுப் பணிகளை நடத்தக் கூடாது என்று எந்தச் சட்டத்திலும் சொல்லப்படவில்லை என்று அவருக்கு ஆதரவாக சொல்லப்படும் கருத்து, தர்க்கரீதியான பதிலாகவே இருக்க முடியும். தர்க்கங்கள் உண்மையை அறிவதற்கான ஒரு வழிமுறைதானேயொழிய, தர்க்கமே உண்மையாகிவிடுவதில்லை.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு ஆளுநர் இருக்க வேண்டும் என்கிறது இந்திய அரசியல் சட்டம். அரசின் தலைவராக ஆளுநர் இருப்பார். அவரின் அழைப்பின்பெயரிலேயே அமைச்சரவை அமைக்கப்படும். சட்ட மன்றங்களில் பெரும்பான்மையோடு இயற்றப்படுகிற சட்டங்கள் ஆளுநரின் கையெழுத்துக்குப் பிறகே, சட்ட அந்தஸ்தைப் பெறும். இதன் காரணமாக, அரசை நடத்தும் முழு அதிகாரமும் ஆளுநரின் கையிலேயே இருக்கிறது என்று அர்த்தமாகிவிடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, அது பெற்றிருக்கும் பெரும்பான்மையின் காரணமாகவே மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கிவிடக் கூடாது என்ற தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையிலேயே இத்தகைய அரசியல் கூறுகள் அரசியல் சட்டத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
சட்ட மன்றம், நிர்வாகம், நீதித் துறை என அரசின் முக்கியமான மூன்று முக்கிய அங்கங்களும் ஒன்றுசேர்ந்து இயங்கும்பட்சத்தில் அங்கு சர்வாதிகாரம் தலையெடுத்துவிட வாய்ப்பிருக்கிறது, எனவே அவை மூன்றும் தனித்தனியாக இயங்க வேண்டும் என்கிற அதிகாரப் பிரிவினைக் கோட்பாட்டை அடியொற்றித்தான் இந்திய அரசியல் சட்டம் எழுதப்பட்டிருக்கிறது. மத்திய அரசிலும், குடியரசுத் தலைவர்தான் அரசின் தலைவர். ஆனால், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அவரால் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. இதை ஏற்றுக்கொள்ளும் தேசியக் கட்சிகள் மாநில அளவில் மட்டும் முரண்படுகின்றன என்றால், கூட்டாட்சிக் கோட்பாடுகளைத் துச்சமாக அவை அணுகுகின்றன என்பதைத் தாண்டி என்ன காரணம் இருக்க முடியும்?
ஆளுநருக்கான அதிகாரம் அளவில்லாதது என வாதிடுவதன் பின்னாலிருக்கும் காரணம், இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, மாநிலங்களின் கூட்டாட்சிக்கு நாடு தயாராகியிருக்கவில்லை. 70 ஆண்டுகளுக்குப் பிந்தைய சூழலில், இன்றைக்கு நாம் நிறைய மாற்றங்களுக்குத் தயாராக வேண்டியிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் காட்டிலும் மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநருக்குக் கூடுதல் அதிகாரம் இருக்க முடியாது என்பதே மக்களாட்சியின் நெறிமுறையாக இருக்க முடியும். அதை அனுசரித்தே இதுவரையிலான ஆளுநர்கள் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான நல்லெண்ணத் தூதுவர்களாகப் பணியாற்றி பதவிக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். அவர்கள் சட்டத்தின் துணையை நாடவில்லை. அரசியல் சட்டத்தின் அடிப்படையையும் நோக்கத்தையும் கருத்தில்கொண்டு மரபுகளை உருவாக்கிச் சென்றிருக்கிறார்கள். இதுவரை நடைமுறையில் இருந்துவரும் ஆளுநருக்கான மரபுகள் இனியும் தொடர வேண்டும்!