பாஜக கூட்டணிக்குள் அதிர்வுகளை ஏற்படுத்தும் நிதீஷ்!

பாஜக கூட்டணிக்குள் அதிர்வுகளை ஏற்படுத்தும் நிதீஷ்!
Updated on
1 min read

க்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், பிஹாரில் பாஜக கூட்டணியில் புதிய சலசலப்பு உருவாகியிருக்கிறது. தொகுதி உடன்பாட்டை இப்போதே பேசித் தீர்மானிப்பது நல்லது என்று பாஜகவின் தோழமைக் கட்சித் தலைவர்களான நிதீஷ்குமாரும் ராம்விலாஸ் பாஸ்வானும் கருதுகிறார்கள். 2014 மக்களவைத் தேர்தலில், பிஹாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 22-ல் வென்ற பாஜக, குறைந்த தொகுதிகளில் போட்டியிட முன்வந்தால்தான் கூட்டணிக் கட்சிகளைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற நிலை உருவாகியிருக்கிறது.

2014 தேர்தலில் வென்ற ஆறு தொகுதிகளை இந்தத் தேர்தலில் விட்டுத்தர ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி விரும்பவில்லை. அந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளில் வென்ற ஐக்கிய ஜனதா தளம், தற்போது பாஜக கூட்டணியில் இருக்கிறது. ஆனாலும், அவ்வப்போது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் நடந்துகொள்கிறது. கூட்டணியில் தொடரும்பட்சத்தில் கணிசமான தொகுதிகள் வேண்டும் என்று நிதீஷ் குமார் விரும்புகிறார். 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக கூட்டணியிலிருந்து நிதீஷ் குமார் வெளியேறிவிட்டார். அந்தத் தேர்தலில் பிஹார் உள்பட பல வட மாநிலங்களில் பாஜக கூட்டணிக்கு அமோக ஆதரவு கிடைத்ததையடுத்து, 2015 பிஹார் சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து மகாகட்பந்தன் என்ற பெருங்கூட்டணியை நிதீஷ் குமார் ஏற்படுத்தினார். அதில் வெற்றி பெற்று முதலமைச்சரான அவர், பிறகு ஊழல் வழக்கைக் காரணம் காட்டி ஆர்ஜேடி, காங்கிரஸுடனான கூட்டணி அரசிலிருந்து வெளியேறி மீண்டும் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியமைத்தார்.

இப்போது பாஜகவுடன் அதிருப்தியில் இருக்கிறார் நிதீஷ். அதை வெளிப்படுத்தும் விதமாக இந்த மாதம் நடந்த யோகாசன தின நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. உண்மையில், அடிக்கடி அணி மாறியதால் நிதீஷ் குமாருக்கு மக்களிடையே அரசியல் நம்பகத்தன்மை குறைந்துவிட்டது. தொகுதிப் பங்கீடு விஷயத்தில் இறங்கிவராவிட்டால் மீண்டுமொருமுறை அரசியல் களத்தில் தனித்து விடப்படும் நிலையே அவருக்கு ஏற்படும். நிதீஷ் குமாரை மீண்டும் சேர்க்க மாட்டோம் என்று ஆர்ஜேடி தலைவர்கள் வெளிப்படையாகவே அறிவித்துவிட்டனர். இது பாஜகவுடன் தொகுதிப் பங்கீட்டில் பேரம் பேசுவதில் நிதீஷ் குமாரின் பலத்தைக் கணிசமாகக் குறைத்திருக்கிறது.

மக்களவைத் தேர்தல் நெருங்க நெருங்க பாஜகவின் கை வலுப்படும் என்றே கருதப்படுகிறது. எனவே, பாஜக ஒதுக்கும் தொகுதிகளை ஏற்பதைத் தவிர ஐக்கிய ஜனதா தளத்துக்கு வேறு வாய்ப்பு இல்லாமல் போகும். இல்லையென்றால் பிஹாரில் மும்முனைப் போட்டி ஏற்படும். ஐக்கிய ஜனதா தளத்தைத் தனியாக விடுவது பாஜகவுக்குத் தேர்தலில் பின்னடைவையே ஏற்படுத்தும். இந்நிலையில், நிதீஷ் குமாரின் அடுத்தடுத்த நகர்வுகள் புதிய திருப்பங்களுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கலாம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in