

சென்னை மாநிலக் கல்லூரியின் மாணவர் சுந்தர், பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த சில மாணவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி, மரணமடைந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கல்லூரி மாணவர்கள் இடையே தங்களுக்குள் யார் பெரியவர் என்கிற மோதல்கள் அடிக்கடி நடக்கின்றன. ஒரு மாணவர் உயிரிழக்கும் அளவுக்குப் பிரச்சினை முற்றியிருப்பது, இந்த விவகாரத்தை அரசு மிகத் தீவிரமாக அணுக வேண்டியதை உணர்த்துகிறது.
மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர் சுந்தர் அக்டோபர் 4 அன்று மாலை வகுப்பை முடித்துவிட்டு, திருத்தணியில் உள்ள வீட்டுக்குத் திரும்புவதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தபோது, பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த சில மாணவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்.
இதில் காயமடைந்த சுந்தர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அக்டோபர் 9 அன்று மரணமடைந்தார். இந்த வழக்கில் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தற்போது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு மாணவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களை பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. நிரந்தரமாக நீக்கப்படவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இந்தக் கொலைக்கு ‘ரூட்டு தல’ பிரச்சினையே முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், காவல் துறை அதை மறுக்கிறது. என்றாலும் புறநகர் ரயில்கள், பேருந்துகளில் மாநிலக் கல்லூரி - பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே நீண்ட காலமாகவே மோதல்கள் நடப்பதை மறுப்பதற்கில்லை. இரண்டுமே வரலாற்றுப் புகழ்பெற்ற பாரம்பரியமான கல்லூரிகள்.
ஆனால், இந்தக் கல்லூரி மாணவர்களிடையே நீடிக்கும் மோதல் பிரச்சினையால், கல்லூரிக்கு வெளியே கல்லூரி அடையாள அட்டையைக்கூட அணிவதற்கு மாணவர்கள் அச்சப்படும் சூழல் நிலவுவது அவலமானது. கல்லூரி அடையாள அட்டையை அணிந்திருந்ததாலேயே சுந்தர் தாக்குதலுக்கு உள்ளானதாக அவருடைய உறவினர்கள் சொல்வது, இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது.
தலைநகர் சென்னையில் மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே மட்டும் ‘யார் பெரியவர்’ என்கிற மோதல்கள் இல்லை. வேறு சில கல்லூரி மாணவர்களும் இத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகளில் ஈடுபடவே செய்கிறார்கள். இதில் சம்பந்தப்படாத மாணவர்களும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். ரயில், பேருந்துகளில் அத்துமீறும் மாணவர்களின் செயல்களால் மக்களும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பெரும்பாலும் இந்தப் பிரச்சினையில் ஈடுபடுவதும், பாதிக்கப்படுவதும் எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவும் முதல் தலைமுறையாகக் கல்லூரிக்கு வந்துள்ளவர்களாகவும் இருப்பது பெரிதும் கவலைக்குரியது.
இவ்விஷயத்தில் காவல் துறை உரிய நடவடிக்கைகளை அவ்வப்போது எடுக்கவே செய்கிறது. மாணவர்களின் எதிர்காலம் கருதி கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதில் காவல் துறையினருக்கு சில அழுத்தங்கள் இருக்கக்கூடும். கல்லூரிக்கு வெளியே அநாகரிகமாகவும் விரும்பத்தகாத முறையிலும் நடந்துகொள்ளும் மாணவர்களைக் காவல் துறையினர் எப்போதும் கண்காணிப்பதும் இயலாத காரியம். இவை மாணவர்களின் சுய ஒழுக்கம் சார்ந்தவை.
பொதுவெளியில் மற்றவர்களுக்குத் தொந்தரவையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்துவது சமூக விரோதச் செயல் என்று மாணவர்களுக்கு அழுத்தமாக உணர்த்தப்பட வேண்டும். அதற்கு அரசின் உறுதியான, தீர்க்கமான தலையீடும் தேவை. பொதுவெளியில் பிரச்சினைகளில் ஈடுபடும் ஒழுக்கமில்லாத மாணவர்கள் மீது பாரபட்சமில்லாத நடவடிக்கையை மேற்கொள்வது மிகவும் அவசியம்.
இதுபோன்ற போக்கைக் கொண்ட மாணவர்களுக்கு உளவியல் ரீதியிலான அறிவுரைகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். பிரச்சினைக்குரிய கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் காவல் துறையினர் முன்னிலையில் கலந்துரையாடலில் அடிக்கடி ஈடுபடுவதை நடைமுறைப்படுத்த வேண்டும். இவை கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான மோதல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும்.