சாத்தியமாகட்டும் பதற்றமில்லாச் சாலைப் பயணம்!

சாத்தியமாகட்டும் பதற்றமில்லாச் சாலைப் பயணம்!
Updated on
2 min read

தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் சாலை விபத்து மரணங்கள், உயிரிழப்பை விளைவிக்கக்கூடிய சாலை விபத்துகள் ஆகியவற்றின் எண்ணிக்கை, கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் 5% குறைந்திருப்பதாகத் தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால் கூறியிருக்கிறார். சற்றே நம்பிக்கை அளிக்கும் தகவல் இது.

காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட தரவுகளின்படி, 2024 ஜூலை மாதம் வரை பதிவான - உயிரிழப்புகளை ஏற்படுத்திய சாலை விபத்துகளின் எண்ணிக்கை 10,066. இதில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 10,546. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 10,589 விபத்துகளும், 11,106 மரணங்களும் பதிவாகியிருந்தன.

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத் தரவுகளின்படி, தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்து மரணங்கள் அதிகரித்துவருகின்றன. 2023இல் 18,074 பேர் இறந்தனர். 2022இல் 17,884 பேர் உயிரிழந்தனர். கவலைக்குரிய இந்தப் பின்னணியில் டிஜிபி வெளியிட்டுள்ள தரவு, இந்த ஆண்டு சாலை விபத்து மரணங்களின் எண்ணிக்கை சிறிய அளவிலேனும் குறையும் என்கிற நம்பிக்கையை அளிக்கிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு வகையான சாலை விதிமீறல்களுக்கான அபராதத் தொகை 2022இல் கணிசமாக அதிகரிக்கப்பட்டது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், பைக் ரேஸிங் என்னும் பெயரில் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், கைபேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றுக்கான அபராதத் தொகை ஐந்து முதல் பத்து மடங்குவரை அதிகரிக்கப்பட்டது.

விதிகளை நடைமுறைப்படுத்துவதிலும் விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை விதிப்பதிலும் காவல் துறை தீவிரக் கவனம் செலுத்துகிறது. இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை, மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளை மீறியது தொடர்பாக 76 லட்சத்துக்கு மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு உடனடியாக அபராதத்துக்கான ரசீது வழங்கும் நடைமுறை, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோரைப் பிடிப்பதற்கான கண்காணிப்புப் பணிகள் போன்றவை தீவிரப்படுத்தப்பட்டிருப்பது, நெடுஞ்சாலைகளில் சாலை விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கான ரோந்து வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பது, அடிக்கடி விபத்து நிகழக்கூடிய இடங்களை (accident hotspots) அடையாளம் கண்டு பிரச்சினைகளைச் சரிசெய்தது ஆகியவையே சாலை விபத்து மரணங்கள் குறைந்திருப்பதற்குப் பங்களித்துள்ள காரணிகளாகக் கூறப்படுகின்றன.

மறுபுறம் போக்குவரத்துக் காவல் துறை கவனம் செலுத்த வேண்டிய வேறு பல பிரச்சினைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகின்றன. சென்னையில் பல முக்கியச் சாலைகளில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகளால் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்துகள், வேன்கள் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் உள்புறச் சாலைகளில் பயணிக்க வேண்டியுள்ளது.

மேலும், மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காகச் சாலைகளில் பெரும் பள்ளங்கள் தோண்டப்படுகின்றன. வரிசையில் முந்துவது, ஒருவழிப் போக்குவரத்து மட்டுமே அனுமதிக்கப்பட்ட சாலைகளில் இரண்டு பக்கங்களிலும் வாகனங்களை ஓட்டுவது போன்ற விதிமீறல்கள் தினமும் நிகழ்கின்றன.

இது போன்ற விதிமீறல்களால் மிகுந்த பதற்றத்துடன் சாலைகளில் பயணிக்க வேண்டியுள்ளது. வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் சிறிய காயங்கள், வாகனங்களுக்கான குறைந்த அளவிலான சேதாரம் போன்றவை கணக்கிலேயே வருவதில்லை. உள்புறச் சாலைகளில் மிக அரிதாகவே போக்குவரத்துக் காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

இதுபோன்ற பிரச்சினைகளைக் களைவதற்கான நடவடிக்கைகளுக்கும் காவல் துறை முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விதிகளை முறையாகப் பின்பற்றுவதன் மூலம் வாகன ஓட்டிகளும் ஒத்துழைக்க வேண்டும். விபத்தில்லாத நிம்மதியான பயணத்தை அனைவருக்கும் உறுதிப்படுத்த வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in