

அ
ச்சுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் வேகமும் தமிழ்ப் பதிப்புலகுக்கு மிகப்பெரும் நன்மைகளை அளித்திருக்கிறது. கணினியிலேயே தட்டச்சு செய்து, பக்கங்களை வடிவமைத்துவிடக்கூடிய வாய்ப்புகளால் அச்சுக்கோப்பதற்கும் பிழைகளைச் சரிசெய்வதற்குமான கால விரயம் தவிர்க்கப்பட்டுவிட்டது. ஏற்கெனவே வெளிவந்த புத்தகங்களை மறுபதிப்பு செய்வதும்கூட எளிதாகிவிட்டது. இந்நிலையில், தேவைக்கேற்பப் புத்தகங்களை அச்சடித்துக்கொள்ளும் ‘பிரிண்ட் ஆன் டிமாண்ட்’ முறை தமிழில் தற்போது பரவலாகிவருகிறது. பெரும் பொருட்செலவில் அதிகளவிலான புத்தகங்களை அச்சிட்டு விற்பனை செய்ய முடியாத சிறு பதிப்பகங்கள் பலவும் இம்முறையைப் பின்பற்றத் தொடங்கியிருக்கின்றன. இந்த முறையைப் பின்பற்றுவது பொருளாதார இழப்பைக் குறைக்க உதவலாம். அதேநேரத்தில், இத்தகைய பதிப்பு முயற்சிகள் கால ஓட்டத்தையும் தாங்கி நிற்க வேண்டும்.
தமிழில் நவீன இலக்கியம் மற்றும் அரசியல் கோட்பாடுகள் சார்ந்த புத்தகங்களைப் பெரும்பாலும் சிறிய அளவிலான பதிப்பகங்களே வெளியிட்டுவருகின்றன. எழுத்தாளர்களே தங்களது புத்தகங்களை வெளியிட்டுக்கொள்வதும்கூடத் தொடர்கிறது. அச்சடிக்கப்பட்ட புத்தகங்களை விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி விற்பனை செய்யும் தொழில்ரீதியான முயற்சிகளைப் பெரும்பாலான சிறு பதிப்பாளர்களால் மேற்கொள்ள முடிவதில்லை. ஆண்டுக்கு ஒன்றோ இரண்டோ புத்தகங்களை வெளியிடும் அவர்களால் அப்படித் தொழில்ரீதியாகச் செயல்படவும் இயலாது. எனவே, தற்போது பரவலாகிவரும் குறும்பதிப்புகளை நோக்கி அவர்கள் நகர ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஒரு புத்தகத்தை ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சடித்து விநியோகித்தால், அவை எப்படியாவது அடுத்த தலைமுறைக்கு கைமாற்றப்பட்டுவிடும் என்று நம்பலாம். சில நூறு பிரதிகளை மட்டும் வெளியிடும்போது அந்தப் புத்தகங்களை முறையாக ஆவணப்படுத்திவைக்க வேண்டிய கடமையும் பதிப்பாளர்களுக்கு இருக்கிறது. பொதுவாக, அச்சடிக்கப்படும் புத்தகங்களை கொல்கத்தா தேசிய நூலகத்துக்கும் சென்னை கன்னிமாரா நூலகத்துக்கும் அனுப்பிவைக்க வேண்டும் என்பது நடைமுறை. தேசிய நூலகங்களுக்குப் பிரதிகள் அனுப்பிவைத்ததற்கான சான்றினைக் காட்டித்தான் முன்பு நூலக ஆணைகள் வழங்கப்பட்டன. தற்போது அந்த விதிமுறை உறுதியாகப் பின்பற்றப்படுவதாகத் தெரியவில்லை. அது முறையாகப் பின்பற்றப்பட்டால், வருங்காலத்தில் புத்தகங்களின் பிரதிகளை நூலகங்களிலோ அல்லது தனியார் சேகரிப்பிலிருந்தோ பெற முடியாத நிலையில், தேசிய நூலகங்களின் ஆவணக் காப்பிலிருந்து அவற்றைக் கண்டடையவும் மறுபதிப்பு செய்துகொள்ளவும் வாய்ப்பிருக்கும்.
தற்போது பிரபலமாகிவரும் குறும்பதிப்பு முறையிலும் புத்தகப் பிரதிகளைத் தேசிய நூலகங்களுக்கு அனுப்பிவைக்கும் முறையைக் கைவிட்டுவிடக் கூடாது. வாழும் சமூகத்திலிருந்து பெற்றுக்கொண்ட அறிவை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கையளிக்க வேண்டியது அறிவுத் துறையின் கடமை. ஆவணக் காப்பகங்களைப் பொறுத்தவரை, கொல்கத்தா தேசிய நூலகமும் கன்னிமாரா நூலகமும் இன்னும் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்!