நீர் மாசுபாடு பிரச்சினையில் அலட்சியம் கூடாது!

நீர் மாசுபாடு பிரச்சினையில் அலட்சியம் கூடாது!
Updated on
1 min read

ந்தியாவின் 70% நீர் வளங்கள் மாசுபட்டிருப்பதாக, அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது நிதி ஆயோக் தயாரித்த கூட்டு நீர் மேலாண்மை அறிக்கை. மாசுபட்ட நீரை அருந்துவது என்பது தண்ணீர்ப் பற்றாக்குறை யைக் காட்டிலும் பன்மடங்கு மோசமான பிரச்சினை. இதனால் 60 கோடி மக்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் இப்பிரச்சினைக்கு அரசு உடனடியாக முகங்கொடுக்க வேண்டும்.

நிதி ஆயோக் தயாரித்த கூட்டு நீர் மேலாண்மை ஆய்வில், நீர் வளங்களையும் அணைகளையும் மேம்படுத்துவது, கிராமம் மற்றும் நகர்ப்புறங்களுக்குக் குடிநீர் வழங்குவது, சிறந்த வகையில் நீர் வளங்களைப் பயன்படுத்தும் விவசாய முறைகளை ஊக்குவிப்பது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு மாநிலங்களும் மதிப்பிடப்படுகின்றன. குஜராத், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரம், பஞ்சாப், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் சிறப்பான முறையில் நீர்ப் பயன்பாட்டுக்கான சீர்திருத்தங்களை முன்னெடுத்திருப்பது ஆரம்பகட்ட மதிப்பீடுகளில் தெரியவந்திருக்கிறது. அதிக மக்கள்தொகை கொண்ட உத்தர பிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்கள் தண்ணீர்ப் பிரச்சினையைச் சமாளிக்கத் தவறிவிட்டன. நீர் வளங்களை மேம்படுத்துவதில் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்பட்டிருந் தாலும், விவசாயிகளுக்குத் தேவையான நீரை நிலையாக வழங்குவதில் படுமோசமான நிலையில் உள்ளது.

மாசுக் கட்டுப்பாட்டை அமலாக்குவதும், நீர்த்தேக்கங்களை அதிகரிப்பதும்தான் உடனடியாகக் கவனிக்க வேண்டிய விஷயங்கள். இதை அடிப்படையாகக் கொண்டு, நீர் வளக் கொள்கை நிபுணர் மிஹிர் ஷா தலைமையில் மத்திய நீர் வள ஆணைய மறுசீரமைக்கும் குழுவும், மத்திய நிலத்தடி நீர் வாரியமும் கூடி விவாதித்தன. பயனாளிகளை மையப்படுத்தி அணுகும் நீர் மேலாண்மை முறை குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. இதன்படி, சிறப்பாகச் செயலாற்றும் மாநிலங்களுக்குத் தேசிய நீர்ப்பாசன மேலாண்மை நிதியிலிருந்து அதிக நிதி வழங்கப்படும். இது பயனுள்ளதாக இருந்தாலும்கூட இத்தகைய அணுகுமுறைகள் மட்டும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் சர்ச்சைகளுக்குத் தீர்வாக இருக்க முடியாது. காவிரிப் பிரச்சினையை எடுத்துக்கொண்டால், மக்களின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்பதற்காகத் தங்களுக்குள் சுமுகமான முறையில் பகிர்ந்துகொள்வதை மாநில அரசுகள் விரும்பாது. மாறாக, நீதிமன்றத்தை அணுகத் தான் ஆட்சியாளர்கள் விரும்புவார்கள்.

நகர்மயமாதல் அதிகரித்துவரும் இன்றைய சூழலில், சுத்தமான குடிநீர் வளங்களை அதிகரிப்பதும், கழிவுகளைச் சுத்திகரிப்பதன் மூலம் மறுபயன்பாட்டை ஊக்குவிப்பதும் அவசியம். முறையான அபராதங்கள் விதிப்பதன் மூலம் மாசுபாட்டையும் கட்டுப்படுத்த முடியும். இத்தகைய முன்னெடுப்புகளைச் சட்டங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் அரசுகள் பொறுப்புணர்வுடன் செயல்படுவதை உறுதிசெய்ய முடியும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in