தாமிரபரணியில் கழிவுநீர்: தடுப்பது யார் பொறுப்பு?

தாமிரபரணியில் கழிவுநீர்: தடுப்பது யார் பொறுப்பு?
Updated on
2 min read

திருநெல்வேலி மாவட்டத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் விடுத்துள்ள எச்சரிக்கை, தமிழ்நாட்டில் நீர்நிலைகளின் பராமரிப்பு எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு நீராதாரமாக தாமிரபரணி ஆறு உள்ளது. குடிநீர், விவசாயம், வழிபாடு ஆகியவற்றுக்கு மக்கள் சார்ந்துள்ள தாமிரபரணியில், அதற்கு நேர்மாறாகக் கழிவுநீர் கலக்கப்படுவதும், கரைகளில் குப்பை கொட்டப்படுவதும் ஓர் அவலமான வாடிக்கை.

‘வீடுகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் கழிவுநீரை ஆற்றில் விடுவதைச் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் தடுக்க வேண்டும்; ஆற்றின் கரையை உயர்த்த வேண்டும்’ என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் உள்ளிட்டோர் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.

2018இல், முத்தாலங்குறிச்சி காமராசு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும் எனவும் கரையில் உள்ள மண்டபங்களையும் படித்துறைகளையும் முறையாகப் பராமரிக்க வேண்டும் எனவும் கூறி வழக்குத் தொடுத்திருந்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் அப்போதே கூறியிருந்தது.

இவ்வழக்கு அண்மையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திருநெல்வேலி மாநகராட்சியில் மட்டும் 17 இடங்களில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதாக மாநகராட்சி, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறினர். மிகத் தீவிரமான மாசுபாடு தொடர்ந்தாலும், நிர்வாகத்தின் போக்கு மாறாததைக் கண்டு அதிர்ச்சிக்கு உள்ளான நீதிபதிகள், “உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா? உங்கள் வீடுகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்தால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?” என்று கோபத்துடன் கேட்டனர். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.

தாமிரபரணியில் நாளொன்றுக்கு 60 ஆயிரம் லிட்டர் அளவுக்கு மட்டுமே கழிவுநீர் கலப்பதாக 2016இல் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இப்போது உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தினமும் ஏறக்குறைய 44.313 மில்லியன் லிட்டர் கழிவுநீர் கலப்பதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதில் 31.91 மில்லியன் லிட்டர் திருநெல்வேலி மாநகராட்சியிலிருந்து வெளியேற்றப்படுகிறது. தாமிரபரணி நீரில் குளிப்பவர்களுக்கு அரிப்பு, தலைமுடி நிறம் மாறுதல் போன்ற கோளாறுகள் வருவதாகவும் கூறப்படுகிறது.

2021இல் ஆற்றை ஒட்டி, பாப்பான்குளத்திலிருந்து ஆறுமுகநேரி வரைக்கும் 80 கி.மீ. தொலைவுக்கு மாசுபாடு அடைந்துள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. கடந்த ஆண்டு ஒரு தனியார் ஊடக நிறுவனம், தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் புன்னைக்காயலில் நீரைச் சோதனைக்கு உட்படுத்தி, அது குடிக்கத் தகுந்ததல்ல எனக் கூறியது. கள நிலவரத்துக்கு அழுத்தம் கொடுப்பதுபோல நீதிமன்றமும் தற்போது அபாயமணியை ஒலித்துள்ளது.

மழைநீர் ஆற்றில் கலப்பதற்காக அமைக்கப்பட்ட வடிகாலில், கரையோரம் உள்ள உள்ளாட்சி அமைப்புகளால் கழிவுநீர் வெளியேற்றப்படுவதாகவும் பாதாளச் சாக்கடைத் திட்டக் கட்டுமானப் பணிகள் விரைவில் முடிவதையொட்டி இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிட்டும் என்றும் திருநெல்வேலி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

மக்கள் அன்றாடத் தேவைகளுக்காகவும் பரிகாரங்களுக்காகவும் ஆற்றை மாசுபடுத்துவது, தங்கள் எதிர்காலத்துக்குத் தாங்களே நெருப்பு வைத்துக்கொள்வதற்கு ஒப்பானது என்றே சொல்லலாம். தமிழக அரசு தாமிரபரணியை மீட்க எடுக்கும் நடவடிக்கைகள், இதே நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள பிற நீராதாரங்களைக் காக்கும் பணிகளுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in