இலங்கை: புதிய அதிபரும் பொறுப்புகளும்

இலங்கை: புதிய அதிபரும் பொறுப்புகளும்
Updated on
2 min read

இலங்கையின் புதிய அதிபராக ஜாதிக ஜன பலவேகய கூட்டணி வேட்பாளரும் ஜனதா விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னணி - ஜேவிபி) என்கிற இடதுசாரிக் கட்சியின் தலைவருமான அனுரகுமார திசாநாயக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசியல் வரலாற்றில், அதிபர் தேர்தலில் ஓர் இடதுசாரிக் கட்சி வெற்றிபெறுவது இதுவே முதன்முறை. அதேபோல், அக்கட்சியைச் சேர்ந்த ஹரிணி அமரசூரிய புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் அந்நாட்டின் மூன்றாவது பெண் பிரதமர் என்கிற பெருமை அவருக்குக் கிடைத்திருக்கிறது. இந்த நகர்வுகள் நம்பிக்கை அளிப்பதுடன், பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கும் வித்திட்டிருக்கின்றன.

இலங்கையில் 2009 இறுதிக்கட்டப் போருக்குப் பிறகு, அங்கு உறுதியில்லாப் பொருளாதார நிலை நீடித்துவருகிறது. கரோனா பொதுமுடக்கம், ராஜபக்ச குடும்ப ஆட்சியின் மோசமான நிர்வாகம், சிங்கள பெளத்த தேசியவாதம் எனப் பல்வேறு காரணிகளால் இலங்கை பெரும் பின்னடைவைச் சந்தித்தது சமகால வரலாறு. அந்தக் காலக்கட்டத்தில் நடந்த மக்கள் போராட்டம் அதிபர் மாளிகையின் கதவுகளைத் தகர்த்து எறிவதுவரை சென்றது. இந்தப் போராட்டங்களை முன்னெடுத்ததில் அனுரகுமார திசாநாயக்கவின் பங்கு மிக முக்கியமானது.

இலங்கையின் வளர்ச்சித் திட்டங்களில் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பங்கு அதிகமாக இருந்தது. இது ஒருவகையில் தெற்காசியப் பிராந்தியத்தின் ஆளுமைப் போட்டியின் ஒரு பகுதியாகச் சர்வதேச அரங்கில் பார்க்கப்பட்டது. அதேபோல், தள்ளாடிக்கொண்டிருந்த இலங்கைப் பொருளாதாரத்தை மீட்பதில் இந்தியா கணிசமான உதவியை நல்கியது.

இந்தச் சூழலில், புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள அனுரகுமாரவின் இந்தியாவுடனான உறவு எப்படி இருக்கும் என்பது கேள்விக்கு உரியதாக இருக்கிறது. விடுதலைப் புலிகள் விவகாரத்தில் ஜேவிபி இந்தியாவைச் சந்தேகித்ததாகச் சொல்லப்படுகிறது. அதுபோல் சுனாமிக்குப் பிறகான பாதிப்புகளைச் சரிசெய்ய சந்திரிகா குமாரதுங்க அரசு முடிவெடுத்தபோது, அதன் கூட்டணிக் கட்சியாக இருந்த ஜேவிபி அதை எதிர்த்தது. அப்போது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அனுரகுமார உள்ளிட்ட பலர் அதற்காகப் பதவி விலகினர். அதுபோல் அதிகாரப் பகிர்வு விஷயத்திலும் எதிரான நிலைப்பாட்டையே அவர் கொண்டிருக்கிறார். மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கு எதிராகவே ஜேவிபி செயல்பட்டதும் மறுக்க முடியாதது.

இந்திய நிறுவனமான அதானி குழும முதலீட்டில் காற்றாலை மின் திட்டத்தை அனுரகுமாரவின் ஜேவிபி எதிர்த்து வருவதும் அது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது எனப் பிரச்சாரம் செய்வதும் கவனிக்கத்தக்கது. ஆனால், அனுரகுமார விஷயத்தில் இந்தியா இணக்கமாகவே இருக்க முயல்கிறது. அனுரகுமாரவின் இந்தியப் பயணத்தில் இந்திய அரசால் கெளரவமாக அவர் உபசரிக்கப்பட்டார். அதிபரான பிறகு இலங்கைக்கான இந்தியத் தூதர் அனுரகுமாரவுக்கு நேரில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதுபோல் பிரதமர் மோடியும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இடதுசாரிக் கட்சி என்கிற நிலையில் சீனாவுடனே உறவைப் பேணக்கூடும் என்கிற பேச்சு நிலவினாலும், அதிபர் என்கிற முறையில் இந்தியாவுடன் சுமுகமான உறவையே எதிர்காலத்தில் அனுரகுமார மேற்கொள்வார் என்றே சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். பிராந்திய அளவில் ஒரு சுமுக உறவையே பேண விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது, பொருளாதாரச் சரிவை மீட்டெடுப்பது, தெற்காசியப் பிராந்தியத்தின் சர்வதேச அரசியலைக் கையாள்வது என்பன உள்ளிட்ட பொறுப்புகள் அனுரகுமாரவுக்குக் காத்திருக்கின்றன. கூடவே, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்னும் எதிர்பார்ப்பும் இந்தியத் தரப்பிலிருந்து எழுந்திருக்கிறது. இவற்றை அவர் கையாள்வதில்தான் இலங்கையின் எதிர்காலம் இருக்கிறது எனலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in