மாணவிகளின் பாதுகாப்பு: பொறுப்பேற்க வேண்டியது யார்?

மாணவிகளின் பாதுகாப்பு: பொறுப்பேற்க வேண்டியது யார்?
Updated on
2 min read

போலியாக நடத்தப்பட்ட தேசிய மாணவர் படை (என்சிசி) முகாமில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. கல்வி வளாகங்களில் நிகழக்கூடிய பாலியல் அத்துமீறல்களைத் தடுப்பதில் நிலவும் இடைவெளிகளை இந்த நிகழ்வு அம்பலப்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த என்சிசி முகாமில் பங்கேற்ற 17 மாணவியர் பள்ளி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்போது 12 வயது மாணவி ஒருவரை, என்சிசி பயிற்சியாளராகச் செயல்பட்டுவந்த சிவராமன் பாலியல் வன்முறை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி அந்தத் தகவலை வெளியில் சொன்னபோது பள்ளி நிர்வாகம் அதை மூடி மறைத்துள்ளது. பெற்றோரிடம் சொல்லக் கூடாது என்றும் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் அறிவுறுத்தியுள்ளது. சில நாள்களுக்குப் பின் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து, சிறுமி தனது பெற்றோரிடம் உண்மையைக் கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்ட பள்ளியில் நடத்தப்பட்ட முகாம் என்சிசியின் அங்கீகாரத்துடன் நடைபெறவில்லை என்பதையும் சிவராமனுக்கும் என்சிசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் என்சிசி நிர்வாகிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். உரிய சான்றிதழ்களைக்கூட சரிபார்க்காமல் சிவராமனை என்சிசி முகாம் நடத்தப் பள்ளி நிர்வாகம் அனுமதித்துள்ளது. வேறு சில பள்ளிகளிலும் சிவராமன் என்சிசி முகாம்களை நடத்தியுள்ளார் என்பது மேலும் அதிர்ச்சியளிக்கிறது.

இந்த வழக்கில் பள்ளி முதல்வர், தாளாளர், இரண்டு ஆசிரியர்கள் உள்பட மொத்தம் 11 பேரைக் காவல் துறை கைது செய்துள்ளது. மருத்துவச் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவராமன் உயிரிழந்தார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு விஷம் அருந்தியிருந்ததாகக் காவல் துறை விளக்கம் அளித்திருக்கிறது.

மேலும், சில சிறுமியர் சிவராமனால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், இந்த வழக்கின் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரிப்பதற்குக் காவல் துறை ஐஜி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவைத் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. மேலும், பள்ளிகளில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கு அரசு சமூக நலத் துறை அதிகாரியின் தலைமையில் எட்டு நபர்கள் கொண்ட குழுவையும் அமைத்துள்ளது. அரசு தன்னிச்சையாக எடுத்துள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

தனியார் பள்ளிகள் மீதான கண்காணிப்பும் கட்டுப்பாடுகளும் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை இதுபோன்ற நிகழ்வுகள் உணர்த்துகின்றன. கல்வி நிலையங்களில் நிகழக்கூடிய பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டங்களும் திட்டங்களும் அமலில் இருக்கின்றன.

ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள இடைவெளிகள் களையப்படுவதில்லை. அவப்பெயருக்கு அஞ்சி இதுபோன்ற குற்றச்சாட்டுகளைப் பள்ளி நிர்வாகங்கள் மூடி மறைக்கும் போக்கினைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

மாணவப் பருவத்தில் என்சிசியில் பங்கேற்பது காவல் துறை, ராணுவம் போன்ற பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கான பயிற்சியாகக் கருதப்படுகிறது. இவற்றில் பெண்களின் பங்கேற்பைத் தடுக்கக்கூடிய குற்றங்களை வேருடன் களைவது அவசியம்.

கல்வி நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும் வீடுகளுக்குள்ளும் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாகும் சிறுமிகள் அவற்றை வெளியே சொல்வதற்கான தயக்கங்கள் முற்றிலும் அகல வேண்டும். தனிநபர்கள், குடும்பங்கள், நிறுவனங்கள் எனச் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் இதை உறுதிசெய்வதற்கான பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பாலியல் குற்றங்களைத் தடுக்க முடியும்!\

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in