

ப
ல்லாயிரக்கணக்கான தமிழ் வாசகர்களின் வாசிப்புலகுக்கு நுழைவாயிலாக இருந்த பாலகுமாரனின் மறைவு, தமிழ் வாசகப் பரப்புக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. ஒரு வாசகரின் முதல் புத்தக வாசிப்பு என்பது எப்போதும் பேருவகை தரக்கூடியது. அங்கிருந்து தொடங்கும் அவரது முடிவிலாப் பயணத்துக்கு ஆரம்பப் புள்ளியைச் சொல்ல முடியும், முடிவைச் சொல்லிவிட முடியாது என்பதாலேயே அதற்குத் தனித்துவமும் இருக்கிறது. அந்த வகையில், பாலகுமாரனின் எழுத்துகள் வாசிப்புலகின் புதிய பக்கங்களைத் திறந்துவைத்தவை. குறிப்பாக பெண்களுக்கு. ஆண் - பெண் உறவுகளின் சிக்கல்களை நுணுக்கமாக அலசி யிருக்கும் பாலகுமாரனின் புனைவுகளில் பெண் பாத்திர வார்ப்பு குறிப்பிடத்தக்கது.
பாலகுமாரன் எழுதிய காலகட்டத்தின் சமூகச் சூழலையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும். ஒழுக்கம், சமூகக் கட்டுப்பாடு, கலாச்சாரம் போன்ற பெயரில் பெண்கள் மீது ஏற்றிவைத்திருந்த பெரும் சுமைகளைக் களைந்ததற்கு பாலகுமார னின் எழுத்துக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. குடும்பம் எனும் சிறிய வட்டத்தில் உழன்றுகொண்டிருக்கும் பெண்களின் மனதை விஸ்தரிக்கும் சக்தி பாலகுமாரனின் எழுத்துக்கு இருந்தது.
தனது வாழ்நாளின் பெரும் பகுதியினை வாசிப்புக்கும் எழுத்துக்கும் அர்ப்பணித்திருக்கிறார் பாலகுமாரன். ‘இரும்பு குதிரைகள்’, ‘மெர்க்குரிப் பூக்கள்’, ‘அப்பம் வடை தயிர்சாதம்’, ‘உடையார்’, ‘தலையணைப்பூக்கள்’, ‘கரையோர முதலைகள்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ உள்ளிட்ட 276 புத்தகங்களை எழுதிக் குவித்திருக்கும் அவரது எழுத்து வேட்கை அவரது கடைசிக் காலம் வரை தணியாமலிருந்தது. 21 திரைப்படங்களுக்குப் பங்களித்திருக்கிறார். குடும்பம், ஆன்மிகம், வரலாறு, தொழில்நுட்பம் என அவர் பயணித்திருக்கும் திசைகள் பரந்துபட்டவை. அதனாலேயே, அவருக்கான வாசகர் வட்டமும் விசாலமானது. சோழர்கள் மீது தீராக் காதல் கொண்ட பாலகுமாரன், சோழர்கள் குறித்து சேகரித்த தகவல்கள் அரிய ஆவணங்கள். பல்வேறு தொழிற்புலங்களை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடத்தக்க படைப்புகளைத் தந்தார். அத்தகைய களங்களும், அந்தக் களங்களில் ஊடாடும் உதிரி மாந்தர்களும் அக்காலத்திய நம் சமூகத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன.
தன்னைக் கண்டடைந்த வாசகர்களை அடுத்த கட்டத்துக்கு இட்டுச்செல்லும் பெரும் பணியையும் ஒரு கடமையாகச் செய்தவர் பாலகுமாரன். தனது கட்டுரைகள், படைப்புகள், நேர்காணல்கள் வழியே, பிறரது புத்தகங்களையும் பரிந்துரைத்தார். அவர் வெளியிட்ட துறை வாரியான புத்தகப் பட்டியல்கள் பலருக்கும் பல ஜன்னல்களைத் திறந்துகாட்டியிருக்கின்றன. சுஜாதாவின் மறைவுக்குப் பின்பாக உருவான வெற்றிடம் என்பது சுஜாதாவின் எழுத்து நடைக்கானது மட்டுமல்ல; வாசகர்களைப் பிற படைப்பாளிகளை நோக்கி வழிநடத்தியதற்கும் பொருந்தும். இப்போது பாலகுமாரனின் மறைவு அந்த வெற்றிடத்தை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது!