கர்நாடக முதல்வர் மீது ஊழல் புகார்: உண்மை வெளிவர வேண்டும்!

கர்நாடக முதல்வர் மீது ஊழல் புகார்: உண்மை வெளிவர வேண்டும்!
Updated on
2 min read

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பி.எம்.பார்வதிக்கு மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (முடா) மனைகள் வழங்கியதாகப் புகார்கள் எழுந்த நிலையில், இவ்விவகாரத்தில் முதல்வர் மீது வழக்குத் தொடுக்க ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மைசூருவின் விஜயநகர் பகுதியில் 38,284 சதுர அடி (0.88 ஏக்கர்) கொண்ட 14 மனைகளை 2021இல் ‘முடா’ ஒதுக்கியது. பார்வதியிடமிருந்து கையகப்படுத்திய 1,48,104 சதுர அடி (3.16 ஏக்கர்) நிலத்துக்கு ஈடாகவே மாற்று நிலம் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், முடா கையகப்படுத்திய நிலத்தைவிட வழங்கிய நிலத்தின் மதிப்பு அதிகம் என்பதுதான் குற்றச்சாட்டு. இதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் குற்றஞ்சாட்டிவரும் எதிர்க்கட்சிகள், சித்தராமையா பதவி விலகவும் வலியுறுத்திவருகின்றன.

குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சித்தராமையா, பாஜக ஆட்சியில் இருந்தபோது தனது மனைவிக்கு இழப்பீடு வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கிடையே முதல்வர் மீது வழக்குத் தொடர அனுமதி கோரி ஜூலை 26இல் சமூக ஆர்வலர்கள் மனு அளித்தனர். மனுவுக்குப் பதிலளிக்கும்படி அன்றைய நாளே முதல்வருக்கு ஆளுநர் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், சித்தராமையா இடம் பெறாத அமைச்சரவைக் குழுக் கூட்டம், அந்த நோட்டீஸைத் திரும்பப்பெறும்படி ஆகஸ்ட் 1இல் ஆளுநருக்கு அறிவுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றியது.

அதைப் புறந்தள்ளிய ஆளுநர், முதல்வர் மீது வழக்குத் தொடுக்க ஆகஸ்ட் 17இல் அனுமதி வழங்கினார். அதற்கு முன்பே முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெங்களூருவில் மக்கள் பிரதிநிதிகள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திலும் சமூக ஆர்வலர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இந்தச் சூழலில் சித்தராமையா தொடர்ந்த வழக்கில், அவர் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை நீதிமன்றத்துக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

முறைகேட்டுப் புகாருக்கு ஆளாகும் அரசு ஊழியர்கள் மீது உரிய அனுமதியுடன் வழக்குத் தொடுப்பது வழக்கமான நடைமுறைதான். முதல்வர் மீது வழக்குத் தொடர ஆளுநரின் அனுமதி அவசியம். இந்த விவகாரத்தில் ஆளுநர் அனுமதி வழங்கியதை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள், மத்தியில் ஆளும் கட்சியின் நலன்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகப் புகார்கள் நீடிக்கும் நிலையில், ஆளுநரின் நடவடிக்கை கேள்விக்கு உள்ளாவதைத் தவிர்க்க முடியாது. இந்த விவகாரத்தில் அவசரமாக ஆளுநர் அனுமதி வழங்கியிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தப் புகாரை அமைச்சரவைக் குழுவும், ஒருசார்பாகவே கையாண்டிருக்கும் என்கிற சந்தேகத்தையும் ஒதுக்கிவிட முடியாது.

அமைச்சரவைக் குழுவின் ஆலோசனைக்கு மாறாக, பதவியில் இருக்கும் முதல்வருக்கு எதிராக வழக்குத் தொடர, ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த முடியுமா என்பது இந்த வழக்கின் முதன்மையான கேள்வி. இதை உயர் நீதிமன்றத்திலும் முதல்வர் தரப்பு எழுப்பியிருக்கிறது. அமைச்சரவையின் ஆலோசனையின்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்று நீதிமன்றங்கள் பல்வேறு வழக்குகளில் கூறியுள்ளன. அதே நேரம் குறிப்பிட்ட சூழ்நிலைகள், உண்மைகளின் அடிப்படையில் சுயாதீனமாக ஆளுநர் செயல்பட முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, இவ்விவகாரம் நீதிமன்றத்தின் ஆலோசனைக்கு உட்பட்டது.

அரசியல் ரீதியிலான வாதப் பிரதிவாதங்களைத் தவிர்த்து, இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு உண்டு. அதை இரு தரப்பும் உணர்ந்துகொண்டு இவ்விவகாரத்தில் சட்டத்தை மதித்து வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in