

உ
ச்ச நீதிமன்ற நீதிபதியாக கே.எம்.ஜோசப் நியமிக்கப்பட வேண்டும் என்று அவர் பெயரை மீண்டும் பரிந்துரைத்திருக்கிறது நீதிபதிகள் தெரிவுக் குழு. மத்திய அரசு அவரது பெயரை மறுபரிசீலனைக்குத் திருப்பி அனுப்பிய உடனேயே, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி கள் அவருடைய பெயரை மீண்டும் வலியுறுத்தாமல், இத்தனை நாட்கள் தாமதித்தது ஏன் என்று தெரியவில்லை. எனினும், தாமதமாகவேனும் இந்த முடிவை எடுத்திருப்பது நல்ல விஷயம்.
உத்தராகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசைப் பதவியிலிருந்து அகற்றிவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு 2016-ல் கொண்டுவந்தது. அந்த வழக்கை விசாரித்த உத்தராகண்ட் மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப், அது செல்லாது என்று தீர்ப்பளித்தார். அந்தக் காரணத்துக்காகத்தான் அவருடைய பெயரை உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு மத்திய அரசு தேர்வுசெய்யவில்லை எனும் சந்தேகம் எழுந்தது. மிகச் சிறிய உயர் நீதிமன்றமான கேரளத்துக்கு உச்ச நீதிமன்றத் தில் கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்றாலும், அவரைவிட பணி மூப்பு அதிகம் உள்ள பிற மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு வாய்ப்பு குறையும் என்றும் மத்திய அரசு விளக்கம் கூறியது.
பிற மாநிலங்களில் கே.எம்.ஜோசப்பைவிட பணி மூப்பு உள்ளவர்கள் உச்ச நீதிமன்ற நியமனத்துக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் கூறியது. இப்போது நீதிபதி கள் தெரிவுக் குழு ஜோசப்பின் பெயரை மீண்டும் பரிந்துரைத்துள்ளதால், இது தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வருவது நல்லது. தெரிவுக் குழு அனுப்பும் பட்டியலில், மத்திய அரசு அதில் ஓரிருவரின் பெயரை மட்டும் நிறுத்திவைப்பது முறையா எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது. பரிந்துரைக்கப்பட்டவர்களில் சிலரை ஏற்கும் மத்திய அரசின் உரிமை கேள்விக்கு அப்பாற்பட்டது. எனினும், ஒரு தொகுப்பில் ஒருவரை மட்டும் முதலில் தேர்வுசெய்து மற்றவர்களைத் திருப்பி அனுப்புவது, பின்பு பணி மூப்பில் எதிரொலிக்கும். அதனால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிப் பதவி, மூத்த நீதிபதிகள் தெரிவுக் குழுவில் இடம்பெறுவது ஆகியவையும் பாதிக்கப்படலாம். நீதிபதிகளே சக நீதிபதிகளைத் தெரிவுசெய்யும் இந்திய முறையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஆனால், இருதரப்பும் இந்த வேறுபாடுகளை விரைவாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும். பரந்துபட்ட இந்திய ஜனநாயகத்துக்கு இப்போதுள்ள தெரிவுமுறை அவ்வளவு ஏற்றது இல்லை என்றாலும், இதிலும் அரசுத் தரப்பு பிடிவாதம் பிடிக்கிறது என்ற நிலை தொடரக் கூடாது.