

டெல்லியில் இயங்கிவரும் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், ஜூலை 27 அன்று மழைவெள்ளம் புகுந்ததில் மூன்று இளம் பட்டதாரிகள் நீரில் மூழ்கி இறந்திருப்பது, நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையும் இந்தச் சம்பவம் பட்டவர்த்தனமாக்கியிருக்கிறது.
டெல்லியில் உள்ள ராஜேந்திர நகர் என்னும் பகுதியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் இயங்கிவருகின்றன. இத்தேர்வுகளுக்குப் பயிற்சி அளிப்பதில் நீண்ட கால அனுபவம் கொண்ட ‘ராவ் ஐஏஎஸ் ஸ்டடி சர்க்கிள்’ என்னும் பயிற்சி மையத்தில்தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. டெல்லியில் மீண்டும் தொடங்கிய கனமழையால், ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள தெருக்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
அதில் இப்பயிற்சி மையம் செயல்பட்டுவந்த கட்டிடத்தின் அடித்தளம் மூழ்கத் தொடங்கியது. அடித்தளத்தில் இருந்த பயிற்சி மையத்துக்குச் சொந்தமான நூலகத்தில் ஏறக்குறைய 35 மாணவர்கள் இருந்துள்ளனர். குறுகிய கால அவகாசத்தில் அனைவராலும் அங்கிருந்து உடனே வெளியேற இயலவில்லை. இதனால் ஷ்ரேயா யாதவ், தானியா சோனி, நவின் டால்வின் ஆகியோர் நீரில் மூழ்கி இறந்தனர்.
இந்நிகழ்வு, பல மட்டங்களில் விதிமீறல்கள் நடந்திருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ‘ராவ் ஐஏஎஸ் ஸ்டடி சர்க்கிள்’ நிர்வாகம், அடித்தளத்தைப் பொருள்களை வைப்பதற்கான அறையாகப் பயன்படுத்த நகராட்சியிடம் அனுமதி பெற்றிருக்கிறது. ஆனால், விதிகளுக்கு மாறாக அங்கு நூலகம் இயங்கி வந்துள்ளது. அன்று மாலையில் மழை பெய்ததையடுத்து நூலகத்துக்கு மாணவர்கள் சென்றுள்ளனர்.
மழை தீவிரமடைந்த நிலையில் நிர்வாகம், மாணவர்களை வீட்டுக்குச் செல்லும்படி மிகத் தாமதமாகவே அறிவுறுத்தியதாகச் செய்திகள் கூறுகின்றன. மழை நேரத்தில் ஏற்பட்ட குறைந்த மின்னழுத்தப் பிரச்சினை காரணமாக, நூலகத்தின் கதவு உடனடியாகத் திறக்க முடியாதபடி மூடிக்கொண்டது என்பதும் ஒரு காரணமாக முன்வைக்கப்படுகிறது.
நகரத்தின் மையப் பகுதியில் இருக்கும் ஒரு பயிற்சி மையம் மழைவெள்ளத்தில் மூழ்க நேர்வதும், அதில் இளைஞர்கள் இறப்பதும் ஏற்றுக்கொள்ளவே முடியாதவை. நேர்மையான, சீர்மிகு நிர்வாகத்தை அளித்து விதிமீறல்களைத் தடுக்கக் கூடிய நிர்வாகப் பதவிகளுக்காக மாணவர்களைப் பயிற்றுவிக்கும் ஒரு நிறுவனமே, இத்தகைய விதிமீறலுக்கு இடம் கொடுத்து, மாணவர்களின் உயிர் பறிபோகக் காரணமாகிவிட்ட கொடுமையை என்னவென்று சொல்வது!
இந்த விபத்தை அடுத்து டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். ராவ் ஸ்டடி சர்க்கிளின் உரிமையாளர், கட்டிட அடித்தளப் பகுதியின் உரிமையாளர் உள்பட இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், அந்தப் பகுதியில் விதிமீறல்களுடன் செயல்பட்டுவந்த 13 பயிற்சி மையங்களை மூடவும் நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள தெருக்களில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு சரியாகப் பராமரிக்கப்படவில்லை எனவும் தெரிகிறது.
டெல்லி அரசு நிர்வாகம் மட்டுமல்ல, டெல்லி மாநகராட்சியும் ஆம் ஆத்மி கட்சியின் ஆளுகையில் இருக்கும் நிலையில், நிர்வாகத்தைக் கவனிப்பதில் அக்கட்சியினர் தோல்வி அடைந்திருப்பதாக பாஜகவினர் விமர்சித்துவருகிறார்கள்.
மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு, டெல்லி ஆட்சியாளர்களை விமர்சிப்பதுடன் நின்றுகொள்ளாமல், பெருமழை போன்ற நெருக்கடிகளின்போது அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சமூகப் பொறுப்பை அதிகமாகக் கோரும் பணியில் அமர விரும்பிய மூன்று இளைஞர்களின் உயிர் மிக அநியாயமாகப் பறிக்கப்பட்டுள்ளது. இப்படியான அவலங்கள் தொடராமல் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்!