அரசு மருத்துவர்களுக்கான 50% இடஒதுக்கீடு தொடர வேண்டும்!

அரசு மருத்துவர்களுக்கான 50% இடஒதுக்கீடு தொடர வேண்டும்!
Updated on
2 min read

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், எம்டி, எம்எஸ் ஆகிய முதுகலைப் படிப்புகளில் சேர வழங்கப்பட்டுவந்த 50 சதவீத இடஒதுக்கீடு 2024-2025இல் குறிப்பிட்ட சில துறைகளுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாகத் தமிழக மக்கள் நல்வாழ்வு - குடும்பநலத் துறை ஜூலை 1 அன்று அறிவித்தது. இந்த அறிவிப்பு அரசு மருத்துவர்களை அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் எம்டி, எம்எஸ் ஆகிய முதுகலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், தமிழக அரசுக்கான ஒதுக்கீட்டில் 50 சதவீத இடஒதுக்கீடு, அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் பயிலும் மாணவர்கள், கட்டாய அரசு மருத்துவப் பணியில் இருப்பதையும் பொது மருத்துவப் பணிகளைப் பரந்த அளவில் கொண்டு செல்வதற்கு அரசுக்கு உறுதுணையாக இருப்பதையும் கருத்தில்கொண்டு, அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்வகையில் இந்த இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டுவருகிறது.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆட்சியில் இதில் தனிக் கவனம் செலுத்தப்பட்டது. நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள இந்த இடஒதுக்கீட்டுக்கு, நீட் தேர்வு அறிமுகமான பின்னர், மத்திய அரசு பிறப்பித்த ஆணை உள்ளிட்ட பல தடைகள் ஏற்பட்டன. வெவ்வேறு வழக்குகளில், சட்டப் போராட்டங்கள் மூலம் உச்ச நீதிமன்றத்தாலும் சென்னை உயர் நீதிமன்றத்தாலும் அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு தக்கவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை நல மருத்துவம், மகளிர் - மகப்பேறு மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மயக்கவியல், நெஞ்சக மருத்துவம் போன்றவை தவிர, மீதமுள்ள துறைகளில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டு முறை இந்த ஆண்டு பின்பற்றப்படப்போவதில்லை எனவும் ஒவ்வோர் ஆண்டும் அப்போதைய தேவைக்கேற்ப இடஒதுக்கீட்டின் அளவு நிர்ணயிக்கப்படும் எனவும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூறியுள்ளது.

அதன்படி காது, மூக்கு, தொண்டை நலம், கண் நலம், நீரிழிவு சிகிச்சை, தோல் நலம், மனநலம், அவசர மருத்துவம் போன்றவற்றுக்கான மருத்துவப் படிப்புகள் இடஒதுக்கீட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்தத் துறைகளில் போதுமான எண்ணிக்கையில் அரசு மருத்துவர்கள் இருப்பதாக அரசுத் தரப்பில் காரணம் கூறப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறை நிலவுவதையும் ஏற்கெனவே பணியில் இருக்கும் மருத்துவர்கள் பணிச்சுமைக்கு உள்ளாவதையும் அவ்வப்போது நிகழும் ஆர்ப்பாட்டங்கள் உணர்த்துகின்றன. சிறப்புத் துறைகளில் போதுமான எண்ணிக்கையில் மருத்துவர்கள் இல்லை; அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படுகிறது.

அங்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என அரசு மருத்துவர் உரிமைகளுக்கான பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகளை முன்வைத்துவரும் நிலையில், அரசு மருத்துவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் விதத்தில் அரசு இப்படி அறிவித்திருப்பது கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. திமுகவின் முந்தைய ஆட்சியில் அக்கறையுடன் பாதுகாக்கப்பட்ட இந்த உரிமை, தற்போதைய திமுக ஆட்சியில் பறிக்கப்பட்டதாக ஆகிவிடக் கூடாது எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தமிழகம் பொது சுகாதாரக் கட்டமைப்பில் சிறந்து விளங்குவதற்கு இளம் அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்பும் முக்கியக் காரணமாகும். கரோனா தொற்று உள்ளிட்ட நெருக்கடிகளின்போது அதைச் சமூகம் கண்கூடாகக் கண்டது. முதுகலைப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டைப் பாதிக்கும் வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை எந்த முடிவும் எடுக்காது என அத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அண்மையில் கூறியுள்ளார். அவை சம்பிரதாய வார்த்தைகளாகப் போய்விடக் கூடாது!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in