தலைசிறந்த அமெரிக்க நாவலாசிரியர் ஃபிலிப் ராத் மறைந்தார்!

தலைசிறந்த அமெரிக்க நாவலாசிரியர் ஃபிலிப் ராத் மறைந்தார்!
Updated on
1 min read

போ

ருக்குப் பிந்தைய இலக்கியப் பங்களிப்பில் தவிர்க்க முடியாத மிக முக்கியமான படைப்பாளி ஃபிலிப் ராத், கடந்த செவ்வாய் இரவு தன்னுடைய 85-வது வயதில் உயிர் துறந்தார். 20-ம் நூற்றாண்டு இலக்கியத்தில் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். அமெரிக்காவின் சிறந்த, மோசமான இரண்டு பக்கங்களையும் எவ்விதச் சார்புமின்றி உள்ளபடி படைப்பாக்கியவர். சால் பெல்லோ, ஜான் அப்டிக்குடன் ஃபிலிப் ராத்தும் 20-ம் நூற்றாண்டு அமெரிக்காவைத் தயக்கமும் பயமும் இன்றி எதிர்கொண்டவர். அமெரிக்க வரலாற்றையும், வட்டார மொழியையும் பேரார்வத்தோடு கற்றுத் தேர்ந்தவர்.

ஃபிலிப் ராத்தின் இரண்டு படைப்புகள் புனைவுக்கான தேசிய விருதையும், நான்கு படைப்புகள் தேசிய விருதுக்கான இறுதிப் பட்டியலிலும் இடம்பெற்றிருக்கின்றன. இரண்டு முறை தேசிய விமர்சகர் வட்ட விருதை வென்றிருக்கிறார். ‘அமெரிக்கன் பாஸ்டொரல்’ நாவலுக்காக 1997-ல் புலிட்சர் விருதையும் வென்றிருக்கிறார். இந்நாவல், அமெரிக்கக் கனவுகளில் வாழும் நேர்மையான மனிதனைப் பற்றியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் இந்தப் பாத்திரத்தை முன்வைத்து, அப்போதைய கலாச்சாரத்தையும் அரசியலையும் விமர்சித்தார். 2011-ல், வாழ்நாள் சாதனைக்கான புக்கர் பரிசைப் பெற்றார். அவர் தலைமுறையில் அதிக அளவில் விருதுகள் வாங்கிக் குவித்தவர்களில் ஃப்லிப் ராத்தும் ஒருவர். நோபல் பரிசு வெல்வார் எனவும் பலமுறை எதிர்பார்க்கப்பட்டது.

துரோகம், காதல், இழப்பு, அரசியல் சரித்தன்மைக்கும் ஆசை அபிலாஷைகளுக்கும் இடையேயான போராட்டம் போன்றவை இவரது படைப்புகளின் மைய இழை. இக்கட்டான சூழ்நிலையில் ஒருவர் நடந்துகொள்ளும் விதம் குறித்து எழுதுவது ஃப்லிப் ராத்துக்கு கைவந்த கலை. ஃபிலிப் ராத் ஒரு நாத்திகவாதி; “இந்த உலகமே கடவுள் நம்பிக்கையற்றுப்போகும்போது, இவ்வுலகம் அருமையானதாக இருக்கும்” என்று ஒருமுறை குறிப்பிட்டார்.

அவரது ஒன்பது நாவல்களின் புனைவுப் பாத்திரமான நாதன் ஸக்கர்மேன் (‘தி கோஸ்ட் ரைட்டர்’, ‘ஸக்கர்மேன் அன்பவுண்ட்’, ‘எக்ஸிட் கோஸ்ட்’), ஒரு யூதராக, எழுத்தாளராக, சாமானியராக ஃப்லிப் ராத்தின் பலவிதமான முகங்களையும் பிரதிபலித்தது. அவரது 8 படைப்புகள் திரைப்படங்களாகியிருக்கின்றன. ஃப்லிப் ராத்தின் முதல் கதையான ‘தி கைண்ட் ஆஃப் பெர்சன் ஐ அம்’, 1958-ல் வெளியானது. 50 வருடங்களுக்கும் மேலான தனது எழுத்து வாழ்க்கையிலிருந்து ஓய்வுபெறுவதாக 2012-ல் அறிவித்தார். விருப்பமான எழுத்தாளர்களான தஸ்தயேவ்ஸ்கி, கான்ராத், ஹெமிங்வே, பெல்லோ மற்றும் தனது படைப்புகளை மறுவாசிக்கப்போவதாகக் குறிப்பிட்டார். காலம் அவரது படைப்புகளை மறுவாசிக்கும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in