

த
ரமான புத்தகத் தயாரிப்பில் உள்ள சிக்கல் களுக்குத் தமிழ் எழுத்துருக்களில் இருக்கும் போதாமையும் மிக முக்கியக் காரணம். ஆங்கில மொழியின் அபரிமிதமான வளர்ச்சிக்கு நிகராக ஆங்கிலப் புத்தகங்களின் பதிப்புத்துறை பன்மடங்கு முன்னேறிச் சென்றிருக்கிறது. இதற்கு எழுத்துருக்கள் மற்றும் மொழி சார்ந்த மென்பொருள்களின் வளர்ச்சியும் துணைநிற்கின்றன. ஒரு எழுத்தின் ஒவ்வொரு கோடுகளும் எந்தெந்த அளவுகளில் இருக்க வேண்டுமென மெனக்கெட்டு எழுத்துருக்கள் உருவாக்கப்படுகின்றன. தமிழில் எண்ணற்ற பெயர்களில் எழுத்துருக்கள் வடிவமைக்கப்பட்டபோதும் அவற்றுக் கிடையே பெரிதாக வித்தியாசங்கள் ஏதும் இருப்பதில்லை. தவிரவும், ஒரு முழுமையான தமிழ் எழுத்துருத் தொகுப்பு இன்னும் தமிழில் உருவாக்கப் படவில்லை.
தமிழில் சில நேரங்களில் ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டிய சூழல் இருக்கிறது. எனவே, ஒரு தமிழ் எழுத்துரு உருவாக்கும்போது ஆங்கில எழுத்து களையும் மனதில்கொள்ள வேண்டியது அவசியம். தமிழ் எழுத்துரு லேசாக சாய்ந்து இருக்குபடி வடிவமைத்தோமால் அதே சாய்வோடு ஆங்கில எழுத்துருக்களும் உருவாக்கப்படும்போதே அழகியலோடு புத்தகங்களைப் பதிப்பிக்க முடியும். எண்கள், குறியீடுகள் என இன்ன பிற விஷயங்களையும் கணக்கில்கொள்ள வேண்டும்.
தமிழ் எழுத்துருக்களில் இருக்கும் இன்னுமொரு மிக முக்கியப் பிரச்சினை ‘ஹைபனேஷன்’. ஆங்கிலத்தில் இதன் மூலம் வார்த்தைகளுக்கு இடையேயான இடைவெளிகளை சீராக வடிவமைக்க முடியும். தமிழில் இது சாத்தியமே இல்லை. ஊடகங்களில் பயன்படுத்தப்படும் சில மென்பொருட்களில் இது பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சில வார்த்தைகளை உடைக்கும்போது தவறான இடங்களில் பிரித்துவிடுகிறது. இன்னொருமுறை சரிபார்க்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளு கிறது. இத்தகைய மென்பொருட்களை வடிவமைக்கும் போது மொழி சார்ந்த பிரக்ஞையோடு வடிவமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
ஆங்கில மொழியில், வார்த்தைப் பிழைகளை அடையாளம் காட்டி சரியாக்குவதிலிருந்து இப்போது இலக்கணப் பிழைகளை சரியாக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இப்படியான வளர்ச்சிகளின் பட்டியல் இன்னும் ஏராளம். இதனால்தான் பிழையற்ற கலாபூர்வமான புத்தக வடிவமைப்பை சாத்தியப்படுத்த முடிகிறது. தமிழ் எழுத்துரு வடிவமைப்பில் இன்னும் பல தூரங்களைத் தமிழ் மொழி கடக்க வேண்டியிருக்கிறது. கணினி யுகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் பார்வை இந்தப் பக்கமும் விழ வேண்டும். பதிப்புச் சூழல் மட்டுமின்றி, தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தும் பல்வேறு அரசு துறைகளுக்கும் மிகப் பெரும் உதவியாக இருக்கும். மொழி வளர்ச்சித் துறை தமிழ் எழுத்துருக்களை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு தமிழ்ப் பதிப்பாளர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும்.