

க
ச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை சர்வதேசச் சந்தைகளில் கடந்த சில வாரங்களாக உயர்ந்துகொண்டே இருக்கிறது. எனினும், கடந்த இரண்டு வாரங்களாக அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசின் கண் ஜாடைக்குக் கட்டுப்பட்டு, பெட்ரோல்-டீசல் விற்பனை விலையை உயர்த்தாமல் மவுனம் காக்கின்றன. மே 12-ல் நடைபெறவிருக்கும் கர்நாடக சட்ட மன்றத் தேர்தல்தான் இதற்குக் காரணம் என்பதைக் குழந்தைகள்கூட ஊகிக்க முடியும். தேர்தலை மனதில் வைத்து அரசு எடுத்திருக்கும் இந்த முடிவால், எண்ணெய் நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் குறையத்தொடங்கியிருக்கின்றன. அரசு எண்ணெய் நிறுவனங்கள் வருவாய் இழப்பைத் தாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும் அபாயம் இருக்கிறது.
பிரிட்டனின் வட கடல் பகுதியில் எடுக்கப்பட்டு லண்டன் சந்தையில் நிர்ணயிக்கப்படும் ‘பிரென்ட் குரூட்’ விலை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரு பீப்பாய் 75 டாலர்கள் என்ற உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சர்வதேசச் சந்தையில் அன்றாடம் கச்சா எண்ணெய் விலை மாறுவதற்கேற்ப இந்தியாவிலும் விலையை மாற்றிக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது மத்திய அரசு. அதன்படி, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை விலையை உயர்த்தும் நடைமுறை கைவிடப்பட்டு, கடந்த ஆண்டு ஜூன் முதல் அன்றாடம் விலையை மாற்றும் நடைமுறை பின்பற்றப்பட்டுவந்தது. இப்போது விலையை உயர்த்தாமல் அப்படியே பராமரிப்பதற்குக் காரணமும் அதே மத்திய அரசுதான். விலையை உயர்த்த வேண்டாம் என்று எண்ணெய் நிறுவனங்களுக்குக் கூறப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த மாதம் கூறினார். ஏன் என்ற காரணத்தைக் கூறவில்லை.
பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலை என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் அம்சங்களில் ஒன்று. மத்திய அரசு தன்னுடைய உற்பத்தி வரியையும், மாநிலங்கள் விற்பனை வரியையும் குறைக்க வேண்டும் என்பதே பரஸ்பர ஆலோசனைகளாக இருக்கும். அத்துடன் இவற்றின் மீது விதிக்கப்படும் உற்பத்தி வரியையும் (கலால்) மத்திய அரசு குறைத்து நுகர்வோர்களின் தலையில் சுமையை ஏற்றாமல் தடுக்க வேண்டும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த கடந்த மூன்று ஆண்டுகளில் அதற்கான பலனை நுகர்வோருக்கு வழங்காத நிலையில், இப்போதாவது இறங்கி வர வேண்டும். பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து அமல்படுத்துவோம் என்று கூறும் மத்திய அரசு, இதையெல்லாம் கவனத்தில்கொள்ள வேண்டும். தேர்தல் நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையேற்றம் விவாதப் பொருளாகிவிடுமோ என்பதற்காக அதைத் தள்ளிப்போடுவது மோசமான அரசியல் உத்தி!