சமூக விரோதிகளை ஒடுக்குவதில் அலட்சியம் கூடாது

சமூக விரோதிகளை ஒடுக்குவதில் அலட்சியம் கூடாது
Updated on
2 min read

தலைநகர் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும் வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இந்தக் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு குறித்த பெரும் விவாதங்கள் எழுந்துள்ளன.

ஜூலை 5 அன்று, சென்னை பெரம்பூரில் செம்பியம் காவல் நிலையத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் ஆம்ஸ்ட்ராங் புதிதாகக் கட்டிவரும் வீட்டின் அருகே கூலிப் படையினர் 6 பேர் சேர்ந்து அவரை வெட்டிக் கொலை செய்தனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உள்பட 11 பேரை அடுத்த சில மணி நேரத்தில் கைது செய்துவிட்டதாகக் காவல் துறை அறிவித்துள்ளது.

சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், இந்தச் சம்பவம் காவல் துறை மற்றும் அரசின் மீது எதிர்மறையான விமர்சனங்களுக்கு வழிவகுத்திருப்பதை மறுக்க முடியாது.

தொழில் போட்டி, முன் விரோதம், அரசியல் பகை போன்றவற்றை மையப்படுத்தி, திட்டமிட்டு நடைபெறும் தொழில்முறைப் படுகொலைகள் எல்லா இடங்களிலும் நடப்பவைதான். இவற்றைக் காவல் துறை கண்காணித்துத் தடுப்பதும் சவாலானதுதான். இதை வைத்துச் சட்டம் - ஒழுங்கை அளவிடவும் முடியாது.

ஆனால், முக்கியப் பிரமுகர்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால், அதைக் கண்காணித்துத் தடுப்பதற்குத்தான் உளவுப் பிரிவுகள் உள்ளன. வழக்கமாக, கட்சித் தலைவர்களின் நகர்வுகளைக் கண்காணிப்பது என்பது காவல் துறையின் முக்கியமான பணிகளில் ஒன்று.

அப்படியிருக்க, ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரைக் கூலிப்படையினர் பல நாள்களாகக் கண்காணித்துக் கொலை செய்திருப்பது, காவல் துறை செயல்பாட்டின் போதாமையை உணர்த்துகிறது. எனவே, காவல் துறையின் அலட்சியம் இந்தக் கொலைக்குக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதைக் குறைசொல்ல முடியாது.

காவல் துறையைக் கட்டுப்படுத்தும் உள்துறை அமைச்சகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் பொறுப்பில் வைத்திருக்கும் நிலையில், அரசின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களும் இந்த விமர்சனங்களுக்கு முகம்கொடுத்து, இனி இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

ஆம்ஸ்ட்ராங் சடலத்தை அடக்கம் செய்யும் இடத்தைத் தேர்வு செய்வதில் அரசின் செயல்பாடுகளை ஒரு தரப்பினர் விமர்சிக்கவும் செய்கின்றனர். இதில் இணக்கமான ஒரு முடிவை அரசு எட்ட முயலாமல், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துத் தீர்வு பெற வேண்டிவந்தது துரதிர்ஷ்டவசமானது.

மேலும், கடந்த இரண்டு மாதங்களில் முக்கியப் பிரமுகர்களின் மரணங்கள் நிகழ்வது தொடர்கதையாகி உள்ளது. திருநெல்வேலியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தனசிங் சடலமாக மீட்கப்பட்டார். அதே ஊரில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் தீபக் ராஜா வெட்டிக் கொல்லப்பட்டார். சேலத்தில் அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை செய்யப்பட்டார்... இதுபோன்ற முக்கியப் பிரமுகர்களின் படுகொலைகள் மக்கள் மத்தியில் அரசு மீதான எதிர்மறைத் தாக்கத்தையே உருவாக்கும்.

ஆம்ஸ்ட்ராங் கொலையை அடுத்து கூலிப் படையினர், ரெளடிகளை ஒடுக்குவது குறித்த விவாதங்களும் எழுந்துள்ளன. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதில் காவல் துறையும் அரசும் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்.

குறிப்பாக, சமூக விரோதிகளுக்குக் கிடைக்கும் அரசியல், அதிகார மட்டத்தின் உதவிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அரிவாள் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூலிப் படையினர், சமூக விரோதிகள் மீது காவல் துறை பாரபட்சமில்லாத நடவடிக்கைகள் எடுப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in