

ம
லேசிய நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, 92 வயதில் பிரதமராகி சாதனை படைத் திருக்கிறார் மகாதிர் முகம்மது. தெற்காசியாவில் மேலும் சில நாடுகளில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், மகாதிர் அடைந்துள்ள வெற்றி மற்றவர்களுக்கும் உற்சாகத்தை அளித்திருக்கிறது. 222 இடங்களைக் கொண்ட மலேசிய நாடாளுமன்றத்தில், மகாதிர் தலைமையிலான ‘நம்பிக்கைக் கூட்டணி' (பகாடன் ஹரப்பன்) 113 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக் கிறது. இதன்மூலம், பத்தாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிரதமர் பதவிக்குத் திரும்பியிருக்கிறார் மகாதிர்.
இதுவரை ஆண்ட நஜீப் ரசாக் தலைமையிலான ‘பரிசான் நேஷனல்’ (தேசிய முன்னணி) கூட்டணியின் பொருளாதாரக் கொள்கைகளால் வெறுத்துப்போன மக்கள், அதைப் பதவியிலிருந்து தூக்கியெறிந்துள்ளனர். பரிசான் நேஷனல் என்ற முன்னணியின் முக்கியக் கட்சி ‘ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு’ (யுஎம்என்ஓ) ஆகும். இதன் நிறுவனர்களில் ஒருவர் மகாதிர் முகம்மது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்சி ஆட்சியை இழந்திருப்பது இதுவே முதல் முறை. இக்கட்சி சார்பில்தான் 1981 முதல் 2003 வரையில் பிரதமராக இருந்தார் மகாதிர் முகம்மது. நஜீப் ரசாக்கைப் பிரதமராக்கியதும் மகாதிர்தான். தேசிய செல்வ நிதியத்தில் நஜீப் ரசாக் கையாடல் செய்துவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே, மக்களுடைய கோபம் அக்கட்சி மீதும் ரசாக் மீதும் திரும்பியது. ரசாக்கும் அவருடைய மனைவியும் வெளிநாடு செல்ல இப்போது தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
பதவியைக் காப்பாற்றிக்கொள்ள நஜீப் ரசாக் எத்தனையோ தந்திரங்களைக் கையாண்டார். ஊடகங்களின் சுதந்திரங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்தார், தொகுதிகளை மறுசீரமைப்பு என்ற பெயரில் மாற்றிப் பார்த்தார், நிறைய சலுகைகளை அறிவித்தார். ஆனால், மக்கள் இதற்கெல்லாம் மயங்கவில்லை. நம்பிக்கைக் கூட்டணியின் தலைவரான அன்வர் இப்ராஹிம் இப்போது சிறையில் இருக்கிறார். தன்பாலின உறவு கொண்டார் எனும் புகாரின் பேரில் அன்வர் கைதுசெய்யப்பட்டார். அவருடைய குற்றத்தை மன்னர் மன்னித்துவிட்டார். அவர் ஓரிரு நாட்களில் விடுதலை ஆவார் என்று தெரிகிறது. 1980, 1990-களில் மகாதிர் முகம்மது மிகப்பெரிய அரசியல் சக்தியாகத் திகழ்ந்தார். அந்தக் காலகட்டத்தில், தனிமனித உரிமைகளை மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தின, மகாதிரோ சமூக நலனே முக்கியம் என்ற ஆசியக் கலாச்சாரத்தின் பக்கம் நின்றார்.
“எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அன்வரைச் சிறை யிலிருந்து விடுவிப்போம், அவரிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு நான் பதவியிலிருந்து இறங்கிவிடுவேன்” என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது மகாதிர் முகம்மது கூறியிருந்தார். அதை நிறைவேற்றுகிறாரா என்று பார்க்க வேண்டும்!