

ம
க்கள் குடியிருக்கும் எல்லா கிராமங்களுக்கும் மின் இணைப்பு கிடைத்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்தது நாட்டின் வளர்ச்சியில் முக்கியமான மைல்கல். கடந்துவந்த 70 ஆண்டுகளில் அடுத்தடுத்து வந்த எல்லா அரசுகளும் சேர்ந்து முடித்திருக்கும் பணி இது என்றாலும், இறுதிக்கட்ட பணியைத் தொய்வில்லாமல் முடுக்கிவிட்டதில் மோடியின் நிர்வாகம் பாராட்டுக்குரியது. அதேசமயம், உண்மையான இலக்கு இன்னும் நிறைவடையவில்லை. இணைப்பு பெற்ற கிராமங்கள் அனைத்திலும் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு கிடைத்துவிடவில்லை. இணைப்பு வழங்கப்பட்டிருந்தாலும் நம்பத்தக்க அளவில் மின்சாரம் கிடைப்பது மிகச் சில மணி நேரங்களுக்கு மட்டுமே. இவ்விஷயத்திலும் அரசு இன்னும் முனைப்பு காட்டினால்தான் நிலைமை மேம்படும்.
2015 ஏப்ரல் முதல் தேதி கணக்கெடுப்பின்படி மின் இணைப்பு பெறாத கிராமங்களின் எண்ணிக்கை 18,452. ஒரு கிராமத்தில் உள்ள வீடுகளில் 10% எண்ணிக்கையிலான வீடுகளுக்கும் பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்துகள், சுகாதார மையங்கள் ஆகியவற்றுக்கும் மின்இணைப்பு கிடைத்தாலே அக்கிராமம் மின்இணைப்பு பெற்ற கிராமமாக அங்கீகரிக்கப்பட்டுவிடுகிறது. 2018 ஜனவரி நிலவரப்படி, கிராமங்களில் ஒரு நாளைக்கு மின்சாரம் கிடைக்கும் நேரம் மிசோரத்தில் 11.5 மணியாகவும், ஹரியாணாவில் 14.91 ஆகவும், உத்தர பிரதேசத்தில் 17.72 ஆகவும், கேரளம், தமிழ்நாடு, குஜராத் தில் 24 மணி நேரமாகவும் இருக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வு களுக்குக் கட்டமைப்பில் நிலவும் பற்றாக்குறை, நிர்வாகத் திறமையின்மை ஆகியவை காரணம்.
2001 முதல் 2011 வரையிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது திரட்டப்பட்ட தரவுகளின்படி கிராமப்புறங்களில் மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீடுகளின் எண்ணிக்கை 55.3% ஆக அதிகரித்திருக்கிறது. நகர்ப்புறங்களில் அதிகரித்து 92.7% ஆகியுள்ளது. நபர்வாரி மின் பயன்பாட்டு அளவிலும் கிராமத்துக்கும் நகரத்துக்கும் மிகப் பெரிய வேறுபாடு நிலவுகிறது. இந்நிலையில், மின் இணைப்பு கிடைப்பதை உறுதிப்படுத்துவதுடன் நின்றுவிடாமல், அதில் சமத்துவம் நிலவுவதையும் அரசு கவனிக்க வேண்டும்.
நகர்ப்புறங்களில் வீட்டுக் கூரைகள் மீது சூரியஒளி மின்உற்பத்திப் பிரிவுகளை ஏற்படுத்த ஊக்குவித்து மின்உற்பத்தியைப் பெருக்கலாம். புதுப்பிக்கத்தக்க மின்னாற்றலை வழங்கும் சாதனங்களுக்கு வரிவிலக்கு, மானியம் போன்றவற்றை அளித்து, மக்கள் அவற்றைப் பெருமளவில் பயன் படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்திலிருந்து 12-வது ஐந்தாண்டுத் திட்ட காலம் வரை வீடுகளுக்கு மின்இணைப்பு வழங்குவதில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், குறைந்த விலையில் மின்சாரம் ஒவ்வொரு வீட்டுக்கும் கிடைப்பதற்கு அரசின் கொள்கை தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும். அப்போது தான் இந்தியா உண்மையாகவே ஒளிரும்!