ஹாத்ரஸ் மரணங்கள்: கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!

ஹாத்ரஸ் மரணங்கள்: கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!
Updated on
2 min read

உத்தரப் பிரதேசத்தில் ஒரு வழிபாட்டு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. இதற்கு வித்திட்ட மனிதத் தவறுகளும் விழிப்புணர்வின்மையும் இந்த வேதனையை இன்னும் அதிகரிக்கின்றன.

ஜூலை 2 அன்று உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தின் சிக்கந்தராவ் நகர் அருகே உள்ள புல்ராய் முகல்கடி என்னும் கிராமத்தில், போலே பாபா என்னும் ஆன்மிகச் சொற்பொழிவாளர் நடத்திய நிகழ்வில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்ச்சி முடிந்ததும், போலே பாபாவைத் தரிசிக்கவும் அவரது காலடி மண்ணை எடுக்கவும் பக்தர்கள் முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெரும்பாலானோர் நெஞ்சில் காயம், மூச்சுத் திணறல், விலா எலும்பு முறிவு போன்றவற்றால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அதிகமான எண்ணிக்கையில் மக்கள் கூடும் இடங்களில் அரசுத் தரப்பில் கூடுதல் கவனம் அவசியம். எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்ந்தால் அவற்றை எதிர்கொள்ள மீட்பு, மருத்துவ சிகிச்சை, சட்டம் ஒழுங்கு தொடர்பான எல்லா அமைப்புகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஆனால், இவை அனைத்திலும் இருந்த சுணக்கம்தான் ஹாத்ரஸ் சம்பவத்தில் இத்தனை பேர் மரணமடையக் காரணமாகியிருக்கிறது.

ஹாத்ரஸ் மாவட்டத்தில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை என்பதால் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்ல வேண்டியிருந்தது. அரசு மருத்துவமனையில் போதிய இடம் இல்லாததால் தனியார் மருத்துவமனைகளிலும் பலர் சேர்க்கப்பட்டுள்ளனர். பல மருத்துவமனைகளில் போதிய ஆம்புலன்ஸ் வசதியும், ஆக்சிஜன் சிகிச்சை வசதியும் இல்லை என்பது இன்னும் கொடுமை.

முதல்வர் யோகி ஆதித்யநாத் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வுசெய்ததுடன் நீதி விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கிறார். எனினும், முதல் தகவல் அறிக்கையில் போலே பாபாவின் பெயர் இதுவரை சேர்க்கப்படாதது பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்திருக்கிறது.

சூரஜ் பால், போலே பாபா, நாராயண் சாகர் விஸ்வஹரி எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் அந்த நபர் தற்போது தலைமறைவாக இருக்கிறார்; போதாக்குறைக்கு இந்தச் சம்பவத்தின் பின்னணியில் சமூக விரோதிகள் இருக்கலாம் எனச் சந்தேகமும் எழுப்பியிருக்கிறார்.

ஆனால், பக்தர்களை அவரது ஆள்கள் விரட்டியடித்ததால்தான் இந்தக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்றும். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களுக்கு உதவாமல் அவரும் அவரது ஆதரவாளர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றனர் என்றும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. சாட்சியங்களை மறைக்கவும் முயற்சி நடந்திருக்கிறது.

இப்படியான போலி ஆன்மிகவாதிகளைத் தடை செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே முன்வைத்த கருத்துகளை அரசு பரிசீலிக்க வேண்டும். அரசியல் தொடர்புகள் இல்லாமல் இப்படியானவர்கள் வளர்ச்சியடைய வாய்ப்புகளே இல்லை.

போலே பாபாவின் தனிப்பட்ட பாதுகாப்புக் குழுவில், உள்ளூர் போலீஸாரும் அவ்வப்போது பங்கேற்றுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதும் வழக்கம் என்று செய்திகள் வெளியாகின்றன. இது இப்படிப்பட்ட நபர்களின் தனிப்பட்ட செல்வாக்கை உணர்த்துகிறது.

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்ற மத வழிபாட்டு நிகழ்வுகளின்போது ஏற்பட்ட விபத்துகளால் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்குக் கடும் தண்டனை விதிக்கப்பட்ட முன்னுதாரணமும் நம்மிடையே இல்லை.

இந்தப் படிப்பினைகளிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். கூடவே, ஆன்மிகத்துக்கும் போலியான ஆன்மிகவாதிகளுக்கும் இடையிலான வேறுபாடு குறித்த விழிப்புணர்வையும் மக்களிடையே உருவாக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற அவல மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in