ஆணவக் குற்றங்களுக்குத்தனிச் சட்டம் அவசியம்

ஆணவக் குற்றங்களுக்குத்தனிச் சட்டம் அவசியம்
Updated on
2 min read

தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகள் தொடர்கதை ஆகிவிட்ட நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான தனிச் சட்டம் அவசியமல்ல என்கிறரீதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது ஏமாற்றமளிக்கிறது.

சமீபத்தில், திருநெல்வேலியில் பட்டியல் சாதியைச் சேர்ந்த இளைஞர் மதன், ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த உதயதாட்சாயிணி ஆகியோர் திருமணப் பதிவு செய்து கொள்ள மார்க்சிஸ்ட் கட்சியினர் உதவினர். இதனால், அப்பெண்ணின் உறவினர்கள் அக்கட்சி அலுவலகத்தில் தாக்குதல் நடத்தினர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக கீழ்வேளூர் தொகுதி உறுப்பினர் நாகை மாலி சட்டமன்றக் கூட்டத் தொடரில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சாதி ஆணவப் படுகொலைகளுக்குத் தனிச் சட்டம் அவசியமல்ல என்கிற பொருள்படப் பேசியுள்ளார். இருக்கும் சட்டங்களின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஆணவப் படுகொலைகளைச் சமூகரீதியிலான முயற்சிகளால் கட்டுப்படுத்த முடியவில்லை என்னும் நிலையில், இதற்கெனத் தனிச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று சமூகச் செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். தொடர்ந்து நிகழ்த்தப்படும் ஆணவப் படுகொலைகள் இந்த வாதத்துக்கு வலுச்சேர்க்கின்றன.

மிகச் சமீபமாக, அருப்புக்கோட்டை அருகேயுள்ள கோவிலாங்குளத்தைச் சேர்ந்த அழகேந்திரன், அதே ஊரைச் சேர்ந்த ருத்ரப்ரியாவைக் காதலித்துவந்த நிலையில், அப்பெண்ணின் உறவினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இருவரும் வெவ்வேறு பட்டியல் சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. என்றாலும் இந்தப் படுகொலை ஆணவப் படுகொலையாகவே பார்க்கப்பட வேண்டும்.

ஆணவப் படுகொலைச் சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்கள் பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியைச் சேர்ந்தவராக இருந்தால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டமே பயன்படுத்தப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றால், இந்திய தண்டனைச் சட்டத்தின்படி சாதாரணப் பிரிவுகளிலேயே வழக்குப் பதிவுசெய்யப்படும்.

அதன்படி பார்த்தால், ஆணவக் கொலை மரணங்கள் ஆவணங்களில் உள்ளதைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கும். உடுமலை சங்கர் உள்ளிட்ட ஆணவக் கொலை வழக்குகளில் கொலையாளிகள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளார்கள்; கொலைக்குத் திட்டமிட்டோர் யாரும் தண்டிக்கப்படவில்லை. இந்நிலையில், திராவிட மாடல் அரசு என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் திமுக அரசு, ஆணவக் கொலைகளைத் தண்டிப்பதற்குத் தனிச் சட்டம் இயற்ற ஏன் தயங்குகிறது என்னும் கேள்வி எழுகிறது.

அரசு, நீதி அமைப்பைச் சேர்ந்தவர்களே சட்டம் வலியுறுத்தும் திருமண உரிமைக்கு எதிராக இருப்பதாக விமர்சனங்கள் உண்டு. திருமணம் செய்துகொள்ளும் உரிமை குறித்த ‘சக்தி வாகினி எதிர் இந்திய ஒன்றியம்’ வழக்கில், உச்ச நீதிமன்றம் ஆணவக் கொலைகளை ஒரு தீவிரமான பிரச்சினையாக அங்கீகரித்துள்ளது கவனம் கொள்ளத்தக்கது. எனவே, இந்தப் பிரச்சினைக்குத் தனிச் சட்டம் அவசியம் என்பது தெளிவானது.

தனியாகச் சட்டம் இல்லாததால், பெரும்பாலான ஆணவக் கொலைகள் பொதுவான கொலை வழக்குகளாக இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்படுகின்றன. தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை 2020இன்படி இந்தியாவில் 25 பேர் ஆணவப் படுகொலையால் கொல்லப்பட்டுள்ளனர். தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் 2014க்கு முன்பு வரை ஆணவக் கொலை மரணங்களை வழக்கமான கொலைக் குற்றப் பிரிவின் கீழ்தான் ஆவணப்படுத்திவந்தது.

இத்தகைய சூழலில், ஆணவப் படுகொலைகளைத் தண்டிப்பதற்குத் தனிச் சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். தமிழ்நாடு சமூக நீதி மண் என்னும் பெருமித முழக்கங்களுக்கு அதுவே நியாயம் சேர்க்கும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in