இடஒதுக்கீடு: உச்ச வரம்பு மட்டுமே அளவுகோலா?

இடஒதுக்கீடு: உச்ச வரம்பு மட்டுமே அளவுகோலா?
Updated on
2 min read

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் அளவை 50%லிருந்து 65% ஆக அதிகரித்த பிஹார் அரசின் நடவடிக்கைக்கு பாட்னா உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பது இடஒதுக்கீடு குறித்த விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

1992இல் இந்திரா சாஹ்னி எதிர் இந்திய அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, மாநில அரசுகளும் மத்திய அரசும் வழங்கும் இடஒதுக்கீட்டுக்கு 50% என்னும் உச்ச வரம்பை நிர்ணயித்தது. தமிழ்நாட்டில் மட்டும் 69% இடஒதுக்கீட்டுக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிதிஷ் குமார் தலைமையிலான பிஹார் அரசு 2022இல் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தியது. அதன் முடிவுகள் வெளியான பிறகு இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 12%லிருந்து 18% ஆகவும்; மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு (Extremely Backward Castes) 18%லிருந்து 25% ஆகவும்; பட்டியல் சாதியினருக்கு 16%லிருந்து 20%; பட்டியல் பழங்குடியினருக்கு 1%லிருந்து 2% எனவும் இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் வகையில் இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது பிஹார் அரசு.

இதற்கு எதிராக கெளரவ் குமார் என்பவரும் வேறு சிலரும் தொடர்ந்த வழக்கு பாட்னா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஒட்டுமொத்த மக்கள்தொகையில் பல்வேறு சமூகங்களின் விகிதத்தின் அடிப்படையில் அவற்றுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருக்கிறதே அன்றி அந்தந்தச் சமூகங்கள் அரசுப் பணிகளில் போதுமான பிரதிநிதித்துவம் பெற்றிருக்கின்றனவா என்கிற அடிப்படையில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்னும் மனுதாரர் தரப்பு வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கான 10%யும் சேர்த்து ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டின் அளவு 75% என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

எந்த ஒரு சமூகப்பிரிவுக்கும் இடஒதுக்கீடு வழங்குவது அல்லது இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிப்பதற்கு முன் அது சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்டிருப்பதையும், அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அரசுப் பணிகளில் போதுமான பிரதிநிதித்துவம் பெறவில்லை என்பதையும் தரவுபூர்வமாக நிறுவ வேண்டும். மாறாக, வெறும் அரசியல் நோக்கங்களுக்காக இடஒதுக்கீட்டைப் பயன்படுத்துவது இடஒதுக்கீட்டின் ஆன்மாவைச் சிதைத்துவிடும். இந்தப் பின்னணியில்தான் தேசிய அளவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்து சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன. ஆனால் இது அரசியல் நோக்கங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாகச் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அதே நேரம் ‘அசாதாரணச் சூழல்களில்’ இடஒதுக்கீடு அளவை 50%க்கு மேல் அதிகரிப்பதற்கு இந்திரா சாஹ்னி தீர்ப்பு அனுமதிக்கிறது. பழங்குடியினர் போல தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்கள் சமமான வாய்ப்புகளைப் பெறுவதற்குச் சில சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவது அவசியம் என்பதை அந்தத் தீர்ப்பு அங்கீகரிக்கிறது. பல சமூக வளர்ச்சிக் குறியீடுகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் பிஹார் போன்ற மாநிலத்தில் மாநில அரசு தனது நிர்வாகம் மற்றும் சட்டமியற்றும் அதிகாரங்களைப் பயன்படுத்தி சமூக நீதித் திட்டங்களை விரிவுபடுத்துவதை மறுக்க முடியுமா என்பது கேள்விக்குரியது. வரலாற்றுரீதியாக வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகள் ஒவ்வொன்றையும் இடஒதுக்கீடு உச்ச வரம்பு என்னும் காரணத்தை மட்டும் வைத்து தடுப்பது எந்த அளவுக்கு சரியானதாக இருக்கும் என்பதையும் நீதிமன்றங்கள் பரிசீலிக்க வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in