

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தச் சம்பவம் அரசு இயந்திரத்தின் தோல்வியையும் ஏற்கெனவே நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்களிலிருந்து அரசு பாடம் கற்காததையும் அலட்சியத்தையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
கருணாபுரத்தில் ஒரு துக்க நிகழ்வுக்குச் சென்ற இடத்தில் கள்ளச்சாராயத்தைக் குடித்ததில் 164 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இவர்களில் நான்கு பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த மரணங்களுக்கு, சாராயத்தில் கலந்திருந்த மெத்தனால் வேதிப்பொருளே காரணம் என்பது தெரிய வந்திருக்கிறது. கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த கோவிந்தராஜ் என்கிற கண்ணுக்குட்டி, அவருடைய மனைவி உள்பட பத்துக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பணியிட மாற்றம், காவல் கண்காணிப்பாளர் தற்காலிகப் பணி நீக்கம் என்பன போன்ற நடவடிக்கைகள் அரசுத் தரப்பில் துரிதமாக எடுக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை, உயிரிழந்தவர்களின் வாரிசுகளின் கல்விச் செலவை அரசே ஏற்பது உள்ளிட்ட நிவாரணங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். விரும்பத்தகாத ஒரு நிகழ்வு நடைபெற்ற பிறகு அரசின் வழக்கமான நடவடிக்கைகளாகவே இவை அமைந்துள்ளன. மாறாக, இதுபோன்ற ஒரு நிகழ்வே நடைபெறாமல் தடுப்பதுதான் ஓர் அரசின் நிர்வாகத் திறனுக்குச் சான்று. கள்ளச்சாராய மரணங்கள் ஆளும் திமுக அரசுக்கு ஓர் அவப்பெயர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
மேலும், கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் அரசு நிர்வாகத்தின் தோல்வியும் வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக, 2023இல் செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்த பிறகு, அரசு நிர்வாகம் படித்த பாடம் என்ன என்கிற கேள்வி அழுத்தமாக எழுகிறது. சென்னை உயர் நீதிமன்றமும் இதைச் சுட்டிக்காட்டியுள்ளது. கள்ளக்குறிச்சியின் மையப் பகுதியிலேயே கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், காவல்துறையின் மதுவிலக்குப் பிரிவினரின் செயல்பாடுகள் விமர்சனத்துக்கு வழிவகுத்திருக்கின்றன.
அரசியல், அதிகார மட்டத்தின் துணையோடுதான் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறது என்று எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் எளிதில் புறந்தள்ளிவிட முடியாதவை. ஆட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கிய இந்த விவகாரத்தைத் திமுக அரசு தீவிரமாகக் கருதினால், இதிலுள்ள அரசியல் தொடர்புகளை அம்பலப்படுத்த வேண்டும்; சம்பந்தப்பட்டவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். அப்போதுதான் அரசின் நடவடிக்கைகளில் பாரபட்சம் இல்லை என்பது வெளிப்படும்.
எப்போதும் அரசின் மீதான கூர்மையான விமர்சனங்கள் அரசு செம்மையாகவும் தவறுகளிலிருந்து பாடம் கற்கவும் உதவும். ஆனால், அதிமுக ஆட்சியின்போது ஒரு தவறு நடந்தால் கடுமையாகக் கண்டிப்பவர்கள், திமுக ஆட்சியில் நடந்தால் அமைதியாக இருப்பது ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்கிற நிலைதான். மிகப் பெரிய அளவில் கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்த பிறகும் சமூகச் செயல்பாட்டாளர்கள் தொடங்கி பல்வேறு தரப்பினரிடமும் அமைதி நிலவியது பெரும் சோகம்.
தமிழ்நாட்டில் 2023, 2024 எனத் தொடர்ச்சியாகக் கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், கள் இறக்க உள்ள தடையை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளும் வலுப்பெற்றுள்ளன. அண்டை மாநிலங்களில் கள் இறக்கவும் விற்கவும் அனுமதி உள்ள நிலையில், உயிரிழப்பைத் தடுக்கும் என்கிறபட்சத்தில், கள் பற்றி விரிவாக ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு அரசும் முன்வர வேண்டும்.