சாதி மறுப்புத் திருமணங்கள்: திட்டவட்டமான சட்டப் பாதுகாப்பு வேண்டும்

சாதி மறுப்புத் திருமணங்கள்: திட்டவட்டமான சட்டப் பாதுகாப்பு வேண்டும்
Updated on
2 min read

திருநெல்வேலியில், சாதிமறுப்புத் திருமணம் செய்துவைத்ததால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சாதிமறுப்புத் திருமணம் செய்துகொள்பவர்கள் தாக்கப்படுவது, ஆணவப் படுகொலை செய்யப்படுவது என்பன போன்ற அவலங்கள் தொடர்ந்துவரும் நிலையில், சாதிமறுப்புத் திருமணம் செய்துகொள்வோருக்குச் சட்டப் பாதுகாப்பு அளிக்கும் அரசியல் கட்சிகள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இது தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் சாதி ஆணவப் போக்கின் அபாயத்தை உணர்த்துகிறது.

வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த மதன் குமார், உதய தாட்சாயினி ஆகிய இருவரும், எதிர்ப்புகளுக்கு மத்தியில் திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியினரின் துணையுடன் அண்மையில் திருமணம் செய்துகொண்டனர். இத்தகவலை அறிந்த உதய தாட்சாயினியின் உறவினர்கள் அங்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். இதில், அக்கட்சி அலுவலகத்தின் கண்ணாடி, நாற்காலிகள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டன. தாக்குதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் மணப்பெண்ணின் தாய், தந்தை உள்பட 13 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தத் தாக்குதலுக்கு அதிமுக, புதிய தமிழகம், மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. “சுயமரியாதை இயக்கம் தழைத்தோங்கிய தமிழ்நாட்டில், இன்றளவும் சாதியத் தீண்டாமையால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனைக்குரியது” என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியிருக்கிறார். தேசியக் கட்சி அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சிக்கே இந்த நிலை என்றால், சாதி ஆணவக் குற்றங்களை எதிர்த்துச் சமூகப் பணியாற்றும் அமைப்புகள், தனி மனிதர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கப்போகிறது என்கிற கேள்வியும் மிக முக்கியமானது. ஆணவக் கொலைகள் அதிகம் நடைபெறும் மாநிலமாகவும், சாதிமறுப்புத் திருமணங்கள் குறைவாக நடைபெறும் மாநிலமாகவும் தமிழ்நாடு மாறிவருவதைச் சமூகச் செயல்பாட்டாளர்கள் கவலையுடன் சுட்டிக்காட்டிவருகிறார்கள்.

இதுபோன்ற காதல் திருமணங்களில், சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் / உறவினரின் உணர்வுகள் புரிந்துகொள்ளத்தக்கவைதான். ஆனால், திருமண வயது வந்தவர்கள் தங்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் திருமணம் செய்துகொள்வதில் சட்டரீதியாக எந்தத் தடையும் இல்லை என்னும் நிலையில், இவ்விஷயத்தில் நிதானத்துடன் நடந்துகொள்வது அவசியம். காதல் திருமணங்களில் பொருளாதாரப் பின்னணியைவிடவும் சாதி வேறுபாடுதான் பெற்றோர்களால் முதன்மையாக முன்னிறுத்தப்படுகிறது. அது மோசமான வன்முறையாகவே வெளிப்படுகிறது.

ஆணவக் கொலைகளைத் தடை செய்யத் தனிச்சட்டம் வேண்டும் என்கிற குரல்கள் தொடர்ந்து ஒலித்துவருகின்றன. சாதிமறுப்புத் திருமணங்களை அரசு இலவசமாக நடத்தி வைக்க வேண்டும்; இணையரில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

சாதி என்பது நமது அடையாளம் எனப் பேசும் அரசியல் தலைவர்கள் தமிழ்நாட்டில் உண்டு. எனினும், சாதி அரசியலை முன்னெடுக்கும் அரசியல் கட்சிகளைத் தவிர, பெரும்பாலான கட்சிகள் சாதி ஆணவப் போக்குக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் பொதுவெளியில் கொண்டிருக்கின்றன. இந்த நிலைப்பாட்டை வலுப்படுத்த வேண்டும் எனில், அரசுதான் சாதிமறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணையாக நிற்கும் அரசியல் கட்சியினர் / செயல்பாட்டாளர்களுக்கும் உரிய சட்டப் பாதுகாப்பை வழங்க வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in