ரயில் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்

ரயில் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்
Updated on
2 min read

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி அருகே ஜூன் 17 அன்று காலையில் நடைபெற்ற ரயில் விபத்து, நாட்டையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. திரிபுரா மாநிலம் அகர்தலாவிலிருந்து சேல்டா மாவட்டத்துக்குச் சென்றுகொண்டிருந்த கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு ரயிலின் பின்னால், அதே தடத்தில் அசாம் மாநிலத்திலிருந்து வந்த சரக்கு ரயில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மிக வேகமாக மோதியதில், பயணிகள் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டு, சரக்கு ரயிலின் சில பெட்டிகள் நொறுங்கின.

மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வனி வைஷ்ணவ், விபத்துப் பகுதியைப் பார்வையிட்டு, விபத்துக் குறித்து முறையாக விசாரணை மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு ஒருவருக்கு ரூ.2,00,000, காயமடைந்தோருக்கு ஒருவருக்கு ரூ.50,000 நிவாரணத் தொகையாக வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டோரும் அவர்களின் குடும்பத்தினரும் அவநம்பிக்கை கொள்ளாதவண்ணம், மத்திய அரசு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், இப்படியான விபத்துகளைத் தவிர்ப்பதில் ரயில்வே துறை தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் குரல்கள் எழுந்திருக்கின்றன.

சரக்கு ரயில் இயக்கத்தில் ஏற்பட்ட தனிமனிதத் தவறு இந்த விபத்துக்கு முதன்மைக் காரணம் என முதற்கட்டமாகத் தகவல் வெளியாகியுள்ளது. விபத்துப் பகுதிக்கு முன்னதாக ஓரிடத்தில் சிக்னல் பழுதடைந்திருந்ததாகவும் அதைக் கடக்க ராணிபத்ரா என்னும் ரயில் நிலையத்தில் பெற வேண்டிய எழுத்துபூர்வ அனுமதியைப் பயணிகள் ரயில் மட்டுமே பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. சரக்கு ரயிலும் அதே போல் அனுமதி பெற்றிருந்தால், பொருத்தமான வேகத்தில் செல்லும்படி அதன் ஓட்டுநருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கலாம்; இந்த விபத்தும் தவிர்க்கப்பட்டிருக்கலாம். சிக்னல் பழுதடைந்துள்ள வழித்தடத்தில் ரயிலைத் தானாகவே நிறுத்தக்கூடிய ‘கவச்’ அமைப்பு இல்லாததும் இந்த விபத்துக்கு இன்னொரு காரணம். காலை 5.50 மணிக்குக் கண்டறியப்பட்ட சிக்னல் பழுது, விபத்து ஏற்பட்ட காலை 9.30 மணி வரை ஏன் சரிசெய்யப்படவில்லை என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

2023இல் ஒடிஷா மாநிலத்தில் பாலாசோர் என்னுமிடத்தில் நிகழ்ந்த மிகக் கோரமான ரயில் விபத்தில் 295 பயணிகள் உயிரிழந்தனர். அதையொட்டி ரயில் விபத்துகள் குறித்த ஓர் அறிக்கை, மத்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலரால் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது. 2017-2021 காலக்கட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்துகளை முன்வைத்து, அறிக்கையில் முக்கியமான சில காரணிகள் கூறப்பட்டிருந்தன. பொறியாளர் உள்ளிட்ட பணியாளர் பற்றாக்குறை, வழித்தடங்களை ஆய்வு செய்வதில் தேக்க நிலை, விபத்துகள் குறித்து அறிக்கை சமர்ப்பிப்பதில் தாமதம், முடிவெடுப்பதில் தாமதம், அடிப்படைத் தேவை அல்லாதவற்றுக்கு அதிகச் செலவு செய்வது உள்பட 10 பிரச்சினைகள் இருப்பதாக அறிக்கை தெரிவித்தது.

இத்தகைய சூழலுக்கு ரயில்வே துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சரக்கு ரயில் ஓட்டுநர்கள் உள்படப் பணியாளர்களுக்குப் போதிய ஓய்வு கிடைக்கும் சூழல் உள்ளதா என்பது போன்ற கேள்விகளும் எழுகின்றன. மத்திய அரசுடன் எதிர்க் கட்சிகள் உடன் நிற்க வேண்டிய இந்தப் பிரச்சினையில், மத்திய அரசும் பொறுப்பாகச் செயல்பட்டு ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in