பலி ஆடுகளா இந்திய இளைஞர்கள்?

பலி ஆடுகளா இந்திய இளைஞர்கள்?
Updated on
2 min read

ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டுப் போர் முனையில் உயிரிழக்கும் அவலம் தொடர்வது மிகுந்த வேதனையளிக்கிறது. உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டிருந்த மேலும் இரண்டு இந்திய இளைஞர்கள் கொல்லப்பட்டிருக்கும் தகவல் உறுதிசெய்யப்பட்டிருக்கும் நிலையில், ரஷ்ய ராணுவத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வேண்டும் என்னும் குரல்கள் வலுத்திருக்கின்றன.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரைச் சேர்ந்த தேஜ்பால் சிங் (29), அடையாளம் உறுதிசெய்யப்படாத இன்னொருவர் என ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிந்துவந்த இருவர், உக்ரைன் போர் முனையில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் தேஜ்பால் சிங், மார்ச் 12ஆம் தேதியே உயிரிழந்துவிட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

உக்ரைன் போர் முனையில் ரஷ்ய ராணுவத்தைச் சேர்ந்த இந்தியர்கள் உயிரிழப்பது புதிதல்ல. ஏற்கெனவே, குஜராத்தின் சூரத் நகரைச் சேர்ந்த அஷ்வின்பாய் மங்குகியா (23) ஜனவரி 27ஆம் தேதியும், ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அஃப்சான் (31) பிப்ரவரி 21ஆம் தேதி அன்றும் உக்ரைன் போர் முனையில் கொல்லப்பட்டனர். அவர்கள் ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர்களாகவே சேர்க்கப்பட்டிருந்தனர்; எனினும், போர் முனைக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டு, அங்கு பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தியா, இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் பல்வேறு விதங்களில் ஏமாற்றப்பட்டு, ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர். சுற்றுலா விசாவில் செல்பவர்கள்கூட, ரஷ்ய ராணுவத்தில் பணி வாய்ப்பு இருப்பதாகப் பிறர் சொல்வதைக் கேட்டு ராணுவத்தில் சேர்ந்துவிடுகின்றனர். போர்முனை தவிர்த்த பிற வேலைகளே வழங்கப்படும் என அங்கு அவர்களை அனுப்பிய பயண ஏற்பாட்டு முகவர்கள் தவறாக வழிநடத்தியிருக்கின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 100க்கும் மேற்பட்டோர் இவ்வாறு ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் ஏறக்குறைய 30 பேர் தங்களை மீட்குமாறு மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்தை அணுகியிருக்கின்றனர்.

இவ்விஷயத்தில் ரஷ்ய ராணுவத்தின் செயல்பாடுகள் இரு நாடுகளின் கூட்டுறவுக்கு இணக்கமானதாக இருக்காது என்று சுட்டிக்காட்டியிருக்கும் இந்தியா, இந்தியர்களைப் படையில் சேர்த்துக்கொள்வதை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்றும் கோரியிருக்கிறது. எனினும், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான உறுதிப்பாடு அரசிடமிருந்து இன்னமும் வெளிப்படவில்லை.

மக்கள்தொகையில் உலகிலேயே முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவில், இளைஞர்கள் (15-29) அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். ஆனால், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பது தொடர்பாகக் கடந்த பத்தாண்டுகளில் மத்திய அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று விமர்சிக்கப்படுகிறது. ஆனால் மோடி அரசின் பொருளாதார நடவடிக்கைகளின் விளைவுகள் குறித்த அறிக்கை ஒன்று மோடியின் பத்தாண்டு ஆட்சிக் காலத்தில் 514 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது.

மேலும் கடந்த பத்தாண்டுகளில் பணியாளர் வருங்கால வைப்பு நிதிக் கணக்குகள் 167% அதிகரித்திருப்பதை வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பதற்கான சான்றாக மத்திய அரசு சுட்டிக்காட்டுகிறது. அதே நேரம் .அக்னிபத் திட்டத்தின் காரணமாக ராணுவத்தில் பணிபுரியும் வாய்ப்பையும் ஆர்வத்தையும் ஏராளமான இளைஞர்கள் இழந்துவருகின்றனர். போர் முனையில் உயிரிழந்த தேஜ்பால் சிங், இந்திய ராணுவத்தில் சேர முயன்றவர் என்று தெரியவந்திருக்கிறது.

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை, தொடக்கம் முதலே கொண்டிருக்கும் இந்தியா, அந்நிய மண்ணில் வஞ்சகமாகப் போர் முனையில் தனது குடிமக்கள் பலியிடப்படுவதைத் தடுக்க இன்னும் தீவிரமாகச் செயல்பட்டாக வேண்டும். கூடவே, இந்தியர்களுக்கு உள்நாட்டிலேயே பணிவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான கொள்கை முடிவையும் எடுக்க வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in