

மேற்கு ஆசிய நாடான குவைத்தில் தொழிலாளர் வசிப்பிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட 46 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்களின் நிலை குறித்த கவலையையும் இந்தச் சம்பவம் ஏற்படுத்தியிருக்கிறது.
குவைத்தின் மங்காவ் பகுதியில் ‘கேம்ப் 4’ என்கிற 6 மாடிக் கட்டிடத்தில் 196 தொழிலாளர்கள் தங்கியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஜூன் 12ஆம் தேதி அதிகாலை 4.30 மணி அளவில், அக்கட்டிடத்தின் தரைத்தளப் பகுதியில் பாதுகாப்புக் காவலர்களின் அறையில் மின்கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட தீ, அதனருகில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்களுக்குப் பரவி விபத்து நிகழ்ந்திருக்கிறது. இந்த கோரச் சம்பவத்தில், ஒரே நேரத்தில் தப்பிக்க முயன்று நெரிசலில் சிக்கியே பலர் உயிரிழந்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
எதிர்பாராத விபத்துதான் தொழிலாளர்களின் மரணத்துக்கு முதன்மைக் காரணம் என்றாலும், தப்பிக்கவே வழியின்றி அவர்கள் உயிரிழக்கக் காரணம், பல்வேறு தரப்பில் நிலவிய அலட்சியமும் விதிமீறல்களும்தான் என்பதில் சந்தேகம் இல்லை. இரு படுக்கையறைகளும் ஒரு வரவேற்பறையும் உள்ள வீடுகளைக் கொண்ட இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், ஒரு வீட்டில் நான்கு பேர் தங்குவதற்குத்தான் அனுமதி உண்டு. 6 மாடிக் கட்டிடமான இதில் 49 வீடுகள் இருந்தால்தான் 196 பேரைத் தங்கவைக்க முடியும். ஆனால், இதில் அவ்வளவு வீடுகள் இருக்க வாய்ப்பில்லை என்றும், ஒரே வீட்டில் அதிகமான தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.
விபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள, தப்பிப்பதற்கான எந்த அடிப்படை வசதியும் அந்தக் கட்டிடத்தில் இல்லை. வெளியேறுவதற்கான தரைத்தள வழி பூட்டப்பட்டு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மேல்தளத்துக்குச் செல்வதற்கான கதவும் பூட்டப்பட்டிருந்ததாக உயிர் பிழைத்தவர்களின் வாக்குமூலத்தின் வழி அறிந்துகொள்ள முடிகிறது. இந்த மாதிரியான கட்டிடத்துக்கு அனுமதி நல்கிய நகராட்சி நிர்வாகிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை குவைத் அரசு எடுத்துள்ளது.
இந்தத் தொழிலாளர் வசிப்பிடத்தை, குவைத்தின் பிரபலக் கட்டுமான நிறுவனமான என்பிடிசி வாடகைக்கு எடுத்திருந்தது. இந்த நிறுவனம், கேரளத்தைச் சேர்ந்த கே.ஜி.ஆப்ரகாமுக்குச் சொந்தமானது எனச் சொல்லப்படுகிறது. இதனடிப்படையில், இந்நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். லாபத்தை மட்டுமே முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட கட்டிட உரிமையாளரும் என்பிடிசி நிறுவனத்தாரும் இதே அளவு இந்தத் தவறுக்குப் பொறுப்பானவர்கள். சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குவைத் அரசு உறுதியளித்திருக்கிறது.
இந்தியப் பொருளாதாரத்தில் கணிசமான பங்கு வகிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழிட வசதியும் உரிமைகளும் கேள்விக்கு உரியவையாக உள்ளன. குறிப்பாக, இந்தியத் தொழிலாளர்கள் அதிக அளவில் வாழும் வளைகுடா நாடுகளில் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது. குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் ஒரு புகாராவது இது தொடர்பாகப் பெறப்படுகிறது. இது தொடர்பாக இந்தியத் தூதரகம் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். வளைகுடா நாடுகளில் தொழிலாளர்களின் வசிப்பிடம், வேலை பாதுகாப்பு, உரிமைகள் போன்றவற்றை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட அரசுகளுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டியதும் மிக அவசியம்.