

குடியாட்சி என்கிற கட்டுமானத்துக்கு ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்கிற கருத்துதான் அடித்தளம். அதைப் பொருட்படுத்தாமல் ஆளுக்கு ஒரு நீதி அளிக்கப்படும் நிலையை நோக்கிச் சமூகம் நகர்த்தப்படுகிறதோ என்கிற ஐயத்தை அண்மையில் நிகழ்ந்த இரண்டு குற்ற நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ளன.
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் அதிநவீன வசதிகளைக் கொண்ட கார் ஒன்று, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இளம் பொறியாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். 17 வயதுச் சிறுவன் மதுபோதையில் அந்தக் காரை ஓட்டிவந்ததாகச் செய்திகள் வெளியாகின. சிறுவனின் தந்தை, கட்டுமானத் துறையில் பெரும்புள்ளி. விசாரணையில், சிறுவனின் ரத்த மாதிரி குப்பைத்தொட்டியில் வீசப்பட்டதும் அவனுடைய ரத்த மாதிரிக்குப் பதிலாக அவனது தாயின் ரத்த மாதிரி வைக்கப்பட்டதும் தெரிய வந்தது. இந்த மோசடி தொடர்பாகச் சிறுவனும் அவனது பெற்றோரும் அதற்கு உடன்பட்ட மருத்துவர்களும் ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர். விபத்தை ஏற்படுத்தியதாகக் காவல் துறையிடம் சரண் அடையும்படி வற்புறுத்தி, தங்களது ஓட்டுநரைக் கடத்தியதாகச் சிறுவனின் தாத்தா மீதும் வழக்குப் பதிவானது.
அடுத்தது, முன்னாள் பிரதமர் தேவகெளடாவின் பேரனும் கர்நாடகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல், தன் வீட்டுப் பணியாளர் உள்படப் பல பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்ததாகவும் அதை அலைபேசியில் பதிவுசெய்து மிரட்டியதாகவும் கூறப்படும் நிகழ்வு. ஹசன் தொகுதி எம்பி-யாக இருந்த பிரஜ்வல், 2024 தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலுக்கு மறுநாள்தான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. உடனடியாக அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார்.
இதுவரை பிரஜ்வல் மீது வீட்டுப் பணியாளர் உள்ளிட்ட மூன்று பெண்கள் புகார் செய்துள்ளனர். அவரது தந்தை ரேவண்ணாவும் தன்னை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக அப்பணியாளர் கூறியுள்ளார். இதற்கிடையே பிரஜ்வலின் தாய் பவானி, அந்தப் பணிப்பெண்ணைக் கடத்தியதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளானார். பிரஜ்வலை இந்தியாவுக்குக் கொண்டுவரும்படி கர்நாடக முதல்வர் சித்தராமையா, பிரதமர் மோடிக்கு இரண்டு முறை கடிதம் எழுத வேண்டியிருந்தது. ஒரு மாதத்துக்குப் பிறகு ஜெர்மனியிலிருந்து பெங்களூருக்கு வந்த பிரஜ்வல் கைது செய்யப்பட்டார்.
இரு வழக்குகளிலும் குற்றம்சாட்டப்பட்டோரின் குடும்பங்கள் குற்றத்தை மறைக்க முழுமூச்சாகச் செயல்பட்டுள்ளன. பிரஜ்வல், ஹசன் தொகுதியில் தோல்வி அடைந்திருந்தாலும் அவரது சித்தப்பா குமாரசாமி வென்று பாஜக கூட்டணி அரசில் கேபினட் அமைச்சராகிவிட்டார். புணே சம்பவத்தில், சிறுவனுக்கு ஆதரவாக வழக்கை நடத்தும்படி தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ சுனில் திங்ரே காவல் துறைக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அவருக்காகத் துணை முதல்வர் அஜித் பவார் பேச வேண்டிய அளவுக்குப் பல நிகழ்வுகள் அரங்கேறின. இப்படியான சம்பவங்களில், குற்றவாளிகள் தங்கள் அரசியல், பொருளாதாரப் பின்புலத்தை வைத்துத் தப்பித்துக்கொள்வதைப் பார்க்க முடிகிறது.
புணே கார் விபத்து சம்பவத்தில் மருத்துவத் துறை, காவல் துறை எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் தங்கள் சுயலாபத்துக்காகக் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரியது. சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டிய பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே இது போன்ற அவலங்களைக் களைய முடியும்.
இரு சம்பவங்களிலும் தொடர்புடைய அனைவரும் சட்டரீதியில் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். 100 கோடி பேரில் ஒருவருக்கு நீதி மறுக்கப்பட்டாலும், நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை மீது படிந்த கறையாகவே அது இருக்கும்.