

ஜம்மு - காஷ்மீரில் பேருந்தில் சென்ற புனித யாத்திரைப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுக்கொண்ட தருணத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், கடும் கண்டனங்களையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.
உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் அண்மையில் ஆன்மிகப் பயணமாக காஷ்மீர் சென்றிருந்தனர். ஜூன் 9ஆம் தேதி, ஜம்மு பிராந்தியத்தின் ரியாஸி மாவட்டத்தில் உள்ள சிவ கோரி கோயிலுக்குச் சென்றுவிட்டு, கத்ராவில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் சென்றபோது, திர்யாத் கிராமத்தின் அருகே மாலை 6.30 மணி அளவில் அவர்கள் பயணம் செய்த பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் நிலைகுலைந்த பேருந்து, அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்று வயதுக் குழந்தை உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் குறித்துத் தேசியப் புலனாய்வு முகமை தீவிர விசாரணை நடத்திவருகிறது. மத்திய உள் துறை அமைச்சகமும் இந்த விசாரணையை உன்னிப்பாகக் கவனித்துவருகிறது.
இந்தத் தாக்குதலுக்குக் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாட்டு அமைப்பு உள்ளிட்டவை கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த தருணத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது, காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டதாகக் கூறப்பட்ட வாதத்தைக் கேள்விக்கு உள்ளாகியிருப்பதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி, மும்பை போன்ற நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜூன் 29இல் அமர்நாத் யாத்திரை தொடங்கவிருக்கிறது; உச்ச நீதிமன்ற உத்தரவின்படி செப்டம்பர் மாதத்துக்குள் காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படவிருக்கிறது. இந்தத் தருணத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடப்பது கவலைக்குரியது.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. உள்ளூரில் உள்ள சிலரின் துணையுடன் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்கள் குறைந்திருந்தாலும், அண்டை நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகளின் ஊடுருவல்களும் தாக்குதல்களும் தொடர்வதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். 2022 மே 13இல் இதே பகுதியில் புனித யாத்திரைப் பயணிகள் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, கலவர பாதிப்பிலிருந்து இன்னும் முழுமையாக வெளிவராத மணிப்பூர் மாநிலத்தில், முதல்வர் பிரேன் சிங்கின் பாதுகாப்பு வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்து பஞ்சாபுக்குள் ட்ரோன் மூலம் ஆயுதங்கள், போதைப் பொருள்கள் கடத்தப்படும் சம்பவங்களும் தொடர்கின்றன.
மீண்டும் பிரதமராகப் பதவியேற்றிருக்கும் மோடிக்குப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்திருக்கும் நிலையில், “இந்தியர்களின் நலனையும், பாதுகாப்பையும் மேம்படுத்துவதுதான் எங்கள் முன்னுரிமையாக எப்போதும் இருக்கும்” எனப் பாகிஸ்தான் தலைவர்களுக்குப் பதில் அளித்திருக்கிறார் பிரதமர் மோடி. அந்த மனவுறுதி செயலிலும் காத்திரமாக வெளிப்பட வேண்டும்!