வள்ளுவர் சொன்னதை மறக்க வேண்டாம்!

வள்ளுவர் சொன்னதை மறக்க வேண்டாம்!
Updated on
1 min read

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சி ஆகியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற்றிருந்தாலும் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியும் 220க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்றுள்ளது. இரண்டு கூட்டணிகளுக்கும் கெளரவமான எண்ணிக்கையிலான தொகுதிகளை வழங்கியிருப்பதன் மூலம், இந்தியாவின் பிரம்மாண்டமான ஜனநாயகம் சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறது.

ஜனநாயகத்தின் எஜமானர்களான வாக்காளர்கள் பாஜகவுக்குச் சொல்லும் செய்தி இதுதான்: ‘இரண்டு முறை ஆட்சியில் இருந்தபோது என்னவெல்லாம் நல்ல முடிவுகளை எடுத்துச் செயல்படுத்தினீர்களோ, அந்தச் செயல்பாடுகள் தங்கு தடையின்றி தொடர்ச்சியாக நடந்தேறி முழுமையாக முற்றுப் பெறுவதற்காகவே இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அதேவேளை, தட்டிக் கேட்க எதிர்க்கட்சிகளே இல்லை என்கிற நிலை ஜனநாயகத்துக்கு ஆபத்து என்பதால், கூட்டணி ஆட்சி அமைந்து கூட்டணிக் கட்சிகளின் மனமொத்த ஆதரவுடன் முடிவுகளை எடுக்கும் வகையில், கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்த பெரும்பான்மை வழங்கப்பட்டுள்ளது.

வலுவான எதிர்க்கட்சிகள் இருக்கும்போதுதான் ஜனநாயகம் ஆரோக்கியமாகத் தழைக்க முடியும் என்பதை உணர்ந்து, நல்ல முடிவுகளைத் தொடருங்கள். பழிவாங்கும் நோக்கம் சிறிதும் இல்லாத ஆரோக்கியமான அரசைத் தாருங்கள்.

தொடர்ந்து மூன்றாம் முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை உங்களுக்கு அளித்திருப்பதே, கடந்த இரண்டு ஆட்சிகளுக்கு நாங்கள் தந்த நல் தீர்ப்புதான் என்ற செய்தியை ஆக்கபூர்வமாக உள்வாங்கிக்கொண்டு, நாட்டு நன்மைக்கான பணிகளைத் தொடருங்கள்.

அரசியல் ஆதாயம் கருதி விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்துதல், விமர்சனங்களைப் புறந்தள்ளி அதிரடி முடிவுகளை எடுத்தல், மத வெறுப்பைத் தூண்டும் அரசியலை முன்னெடுத்தல் போன்ற எதிர்மறை அணுகுமுறைகளைக் கைவிட வேண்டும்’ என்பதே தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தும் கருத்து.

தேர்தலின் இறுதிக்கட்டத்தில் குமரிமுனைக்கு வந்து, நரேந்திர மோடி வணங்கிவிட்டுச் சென்ற வள்ளுவப் பெருந்தகையின் ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் / கெடுப்பார் இலானும் கெடும்’ என்னும் குறளை இந்த நேரத்தில் நினைவூட்டுகிறோம்!’.

இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் ஊடகக் கணிப்புகளைப் பொய்யாக்கும் விதத்தில் கணிசமான தொகுதிகளில் வென்றிருக்கின்றன. இந்தக் கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில் அமர நேரும் பட்சத்தில், மக்கள் அவர்களுக்கு விடுத்திருக்கும் செய்தி இதுதான்: ‘கடந்த ஒரு தசாப்தமாக மக்களவையில் வலுவான எதிர்க்கட்சிகள் இல்லை என்கிற குறையை இந்தத் தேர்தலில் போக்கிவிட்டீர்கள்.

மக்கள் பிரச்சினைக்காக முன்னே நிற்பது நல்லதுதான். அதேவேளையில், பாஜக அரசு எதைச் செய்தாலும் எதிர்ப்பது என்கிற அணுகுமுறையை இந்த முறை நீங்கள் கைவிட்டாக வேண்டும். அபாண்டமான குற்றச்சாட்டுகள், எதிர்மறை அரசியல் நகர்வுகள் போன்றவற்றைத் தவிர்த்து, புதிதாக அமையும் கூட்டணி அரசு சரியான திசையில் செல்வதை - வாக்காளர்களின் சார்பில் - நீங்கள்தான் உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என்னும் பெருமையை இந்தியா தக்கவைத்துக்கொள்ள முடியும்!’

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in