வெளிநாடுகளில் இணைய மோசடி: தமிழர்களைக் காப்பது அவசியம்

வெளிநாடுகளில் இணைய மோசடி: தமிழர்களைக் காப்பது அவசியம்
Updated on
2 min read

கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ் போன்ற தெற்காசிய நாடுகளில் வேலைவாய்ப்பு என்கிற பெயரில், கட்டாயத்தின்பேரில் தமிழர்கள் பலர் இணைய மோசடிகளில் ஈடுபட வைக்கப்படுவதாக தமிழ்நாடு - அயலகத் தமிழர் நலத் துறை ஆணையம் தெரிவித்திருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

இந்திய இணையக் குற்றப் பிரிவுக் காவல் துறையின் அறிக்கையின்படி, இந்தியர்களைக் குறிவைத்து நடத்தப்படும் இணைய மோசடிகளில் 50% இந்தத் தெற்காசிய நாடுகளிலிருந்துதான் நடைபெறுகின்றன. எனவே, அம்மாதிரியான வேலைவாய்ப்பைக் கவனத்துடன் பரிசீலிக்கும்படி ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ஐடி வேலை என்கிற வாக்குறுதியுடன், முகவர்கள் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அவர்கள் தாய்லாந்திலிருந்து சட்ட விரோதமாக லாவோஸுக்குக் கடத்தப்பட்டு, கட்டாயப்படுத்தி இணைய மோசடிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்தியர்களின் சமூக வலைதளப் பக்கத்தைப் பயன்படுத்தி, அதன் வழியே தனிப்பட்ட தகவல்களைப் பெற்று, மோசடி செய்யுமாறு அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இவர்கள் எல்லாரும் சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இணைய மோசடியில் ஈடுபட மறுத்தவர்கள் சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் இந்தியத் தூதரகம் வழியே மீட்கப்பட்டுள்ளனர்.

இன்றைக்குப் பரவலாகப் புழக்கத்தில் இருக்கும் இணையவசதியை முறைகேடாகப் பயன்படுத்தி, மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பது அதிகரித்துவருகிறது. இந்த முறைகேட்டை ஒரு தொழிலாகவே பலர் நடத்திவருகிறார்கள். மைக்ரோசாஃப்ட் நிறுவன அறிக்கையின்படி, உலக அளவில் இணைய மோசடிக்கு ஆளாகும் நாடுகளில் இந்தியா 5ஆவது இடத்தில் இருக்கிறது.

‘காஸா - குளோபல் ஆன்ட்டி ஸ்கேம்’ அறிக்கையின்படி, இந்தியாவில் ஒரு நபருக்கான இணைய மோசடி இழப்பீடு என்பது சராசரியாக வெறும் 11 ரூபாய்தான். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இன்று பலருக்கும் இருக்கிறது. இந்த ஆர்வத்தை மூலதனமாகக் கொண்டுதான் இந்த இணைய மோசடி நடைபெறுகிறது.

வேலைவாய்ப்பு மோசடியும் இதே அடிப்படையில்தான் நடைபெறுகிறது. ‘ஜாப் ஹன்ட் இணையதள’ அறிக்கையின்படி, இந்தியர்கள் 56 சதவீதம் பேர் இம்மாதிரியான வேலைவாய்ப்பு மோசடிகளில் ஏமாறுகிறவர்களாக இருக்கிறார்கள். உணவு விடுதிகளுக்குப் போலி மதிப்பீட்டு நட்சத்திரக்குறியீடு வழங்குவதையும் ஒரு வேலையாகச் செய்கிறார்கள். இதற்கு ஒரு முறைக்கு ரூ.200 வரை வழங்கப்படுகிறது.

ஆனால், கூடுதல் வருமானத்துக்குப் பணம் கட்டச் சொல்லி மோசடி செய்கிறார்கள். இதுபோல், இணையம்வழி எளிமையாகச் சம்பாதிப்பது எனப் பல மோசடிகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அந்த மோசடிகளைச் செய்வதற்கான வேலையாள்களையும் மோசடி மூலமே தேர்வுசெய்கிறார்கள் என்பதுதான் இன்னும் அதிர்ச்சிக்கு உரியது.

வெளிநாட்டில் அதிகச் சம்பளத்தில் வேலை என்றதும் - உரிய அனுபவம் இல்லாத நிலையில் - முறையாக விசாரிக்காமல் வேலைவாய்ப்பைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள பிரச்சினை இது. மேலும், வளைகுடா நாடுகளுக்கும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்லக் கைக்காசு செலவழிக்க வேண்டியிருக்கிறது; தெற்காசிய நாடுகளுக்கு இலவச விமான டிக்கெட் போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளும் இதற்குப் பின்னால் உள்ள காரணம்.

இப்படியான சூழல்களில், இந்த வேலைவாய்ப்புகள் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட நாடுகளில் இருக்கும் இந்தியத் தூதரகத்தை அணுகித் தெளிவுபெறலாம். இந்த நாடுகளுக்கு இந்தியர்களை அனுப்பும் முகவர்களை தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. மத்திய அரசும் இம்மாதிரியான முகவர்களின் விஷயத்தில் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in