

கா
ல்நடை விற்பனையில் கொண்டுவரப்பட்ட நிபந்தனைகளுடன் கூடிய தடையை மத்திய அரசு விலக்கிக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை. மாநில அரசுகளுடன் ஆலோசிக்காமலும், கால்நடைச் சந்தைகளின் அமைப்பு, வயதான கால்நடைகளைப் பராமரிப்பதில் விவசாயிகளுக்குள்ள சிரமம் என்று எதைப் பற்றியுமே சரியான புரிதல் இல்லாமலும் கடந்த ஆண்டு இந்தத் தடையைப் பிறப்பித்தது சுற்றுச்சூழல், வனங்கள், பருவ மாறுதல்களுக்கான அமைச்சரகம்.
கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச்செல்லும்போது துன்புறுத்துவதைத் தடுக்கவும், கால்நடைச் சந்தைகளை வரைமுறைப்படுத்தவும் புதியவிதிகள் அமல்படுத்தப்படுவதாகக் காரணம் சொன்னது மத்திய அரசு. உண்மையில் அது பாஜகவின் கலாச்சாரக் கொள்கையான பசு பாதுகாப்பை மறைமுகமாகவும் கொடூரமாகவும் அமல்படுத்துவதற்கான கருவியாகவே கையாளப்பட்டது. பசு குண்டர்கள் அதையே சாக்காக வைத்துக்கொண்டு, கால்நடைகளைக் கொண்டுசெல்பவர்களை அடித்துக் கொன்று அராஜகங்களில் ஈடுபட்டனர்.
பலமுறை பலர் சொல்லியும் கூட மத்திய அரசு உண்மைகளை உணர மறுத்ததுடன் முரட்டுப் பிடிவாதமாக இருந்தது. சிறு விவசாயிகளால் வயதான கால்நடைகளைப் பராமரிக்கவும் முடியாமல், விற்பதற்கும் முடியாமல் படும் அவதி அம்பலமான பிறகுதான் தனது தவறை அரசு உணர்ந்திருக்கிறது. அத்துடன் இறைச்சிக் கூடங்களுக்குக் கால்நடைகள் கிடைக்காததால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தது, தோல் பதனிடும் தொழிலுக்கு ஏற்பட்ட பின்னடைவு, இவற்றால் ஒட்டுமொத்தமாக கிராமப்புற பொருளாதாரத்துக்கும், ஜிடிபிக்கும் ஏற்பட்ட பின்னடைவு ஆகியவை பற்றி அரசுக்கு உறைத்தது.
கால்நடை வியாபாரத்தில் தலையிட்டதல்லாமல் எதைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக் கூடாது என்று நிர்பந்திக்கவும் தொடங்கியது அரசு. கால்நடைச் சந்தையில் விற்பவர்களை மட்டுமல்ல, வாங்குகிறவர்களையும் அலைக்கழிக்கும் விதத்தில் விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்யும் நடைமுறை கட்டாயப்படுத்தப்பட்டது. இனி இது அவசியமில்லை.
பிற மாநில எல்லையாக இருந்தாலும் 25 கிலோ மீட்டருக்குள்ளும், பக்கத்து நாட்டு எல்லையாக இருந்தாலும் 50 கிலோ மீட்டருக்குள்ளும் கால்நடைச் சந்தைகள் அமையக் கூடாது என்ற நிபந்தனையும் இப்போது நீக்கப்பட்டிருக்கிறது. வதைக்கூடங்கள் அருகில் கால்நடைச் சந்தை கூடாது என்ற நிபந்தனையும் கைவிடப்பட்டிருக்கிறது. கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும்போதும் வெளியூர்களுக்குக் கொண்டு செல்லும்போதும் துன்புறுத்தக் கூடாது என்ற நிபந்தனை தக்கவைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
அரசு விதித்த நிபந்தனைகளால் பசுக்கள், எருதுகள், காளைகள், ஒட்டகங்கள் விற்கப்பட முடியாமல் தேங்கின. ஏழை விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். எந்த ஒரு சமூகத்தினருக்கு எதிராகவும் அரசு செயல்படுகிறது என்ற கண்ணோட்டம் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்வதுதான் அரசின் முக்கியக் கடமை. புரிதல் இல்லாத தனது உத்தரவால் அரசு கற்றுக்கொண்டிருக்கும் இந்தப் பாடம் அதைத்தான் உணர்த்துகிறது!