

பி
ரேசில் முன்னாள் அதிபர் லூயி இனாசியோ லூலா ட சில்வா ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்டிருப்பது அந்நாட்டின் அரசியல் நெருக்கடியைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. தொழிலாளர் கட்சித் தலைவரான லூலா, வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், தகுந்த ஆதாரம் இல்லாமல் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது தொழிலாளர்கள் கட்சிக்கு மட்டுமல்லாமல், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் அதிர்ச்சியளித்திருக்கிறது.
ஒரு கட்டுமான நிறுவனம் கொடுத்த அடுக்ககத்தை லஞ்சமாகப் பெற்ற லூலா, அதற்கு ஈடாக அந்த நிறுவனத்துக்கு அரசு ஒப்பந்தத்தை வழங்கினார் என்று அரசு குற்றம்சாட்டியது. ஆனால், தகுந்த ஆதாரங்கள் அரசிடம் இல்லை. அந்த நிறுவனத்தின் மீது அரசு தொடுத்த வழக்கிலிருந்து விடுபட அதன் அதிகாரிகளில் ஒருவர், இப்படியொரு குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறார். வீடு கட்டும் ஒப்பந்தம் அதிக விலைக்கு ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதையே ஆதாரமாகக் கொண்டு அவருக்கு சிறை தண்டனை விதித்திருக்கிறது நீதிமன்றம்.
பிரேசிலில் சர்வாதிகார ஆட்சி நடந்தபோது ஒரு தொழிற்சங்கத் தலைவராக அஞ்சாமல் செயல்பட்டவர் லூலா. பிரேசில் அதிபராக 2003 முதல் 2011 வரையில் பதவிவகித்த அவர், தொழிலாளர்கள் நலன் சார்ந்து உறுதியான பல நடவடிக்கைகளை எடுத்தார். தொழிலாளர்கள், ஏழைகளின் ஆதரவு இவருக்கு உண்டு. லூலாவின் வளர்ச்சியை விரும்பாதவர்கள், குறிப்பாக அரசு – நீதித் துறையினர் அவருடைய கட்சிக்காரர்களின் ஊழல்களைத் தீவிரமாக விசாரித்து தண்டனை தரத் தொடங்கினர். தனது பதவிக்காலத்துக்குப் பிறகு தில்மா ரூசுஃப் என்பவரை அதிபராக்கினார் லூலா. அவரும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தொழிலாளர் கட்சியின் 13 ஆண்டு கால ஆட்சி இப்படி ஊழல் வழக்குகளால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
தன் மீதான வழக்கின் மேல்முறையீடு விசாரிக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு வரும் வரை தன்னைக் கைதுசெய்யக் கூடாது என்றும், அதிபர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்றும் லூலா விடுத்த வேண்டுகோளை பிரேசில் நீதித் துறை நிராகரித்துவிட்டது. மேட்டுக்குடிகளும் ராணுவமும் அரசின் உயர் அமைப்பில் உள்ள பலரும் லூலா மீண்டும் அதிபராவதை விரும்பவில்லை. பிரேசில் நாட்டு மக்கள் கடுமையான பொருளாதார, வாழ்வாதாரப் பிரச்சினைகளைச் சந்தித்துவருகின்றனர். மக்களுடைய ஆதரவைப் பெறாத, தேர்ந்தெடுக்கப்படாத பிரதிநிதிகள் இப்போது ஆட்சியில் இருக்கின்றனர். ஜனநாயகமும் இல்லை. இந்நிலையில், லூலாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறை தண்டனை பிரேசிலின் எதிர்காலத்தை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியிருக்கிறது.