இனி கட்சிக்கு வெளியே உரையாடல் தொடரட்டும்!

இனி கட்சிக்கு வெளியே உரையாடல் தொடரட்டும்!
Updated on
1 min read

ஹை

தராபாதில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது மாநாட்டில் அனைத்துத் தரப்பினரும் ஏற்கும் விதத்திலான அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒற்றுமை காக்கப்பட்டிருக்கிறது. சீதாராம் யெச்சூரி மீண்டும் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 2019 மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாமா, கூடாதா என்பது பிரதான பேச்சாக இருந்துவந்த நிலையில், ‘காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணியோ, தொகுதி உடன்பாடு உள்ளிட்ட ஏற்பாடுகளோ இல்லாமல்’ என்ற வரைவுத் தீர்மான வாசகம், ‘காங்கிரஸ் கட்சியுடன் அரசியல் கூட்டணி இல்லாமல்’ என்று திருத்தப்பட்டு ஏற்கப்பட்டிருக்கிறது. அதாவது, ‘கூட்டணி கிடையாது; தேர்தலுக்குப் பிந்தைய புரிந்துணர்வு செயல்பாடு இருக்கலாம்’ என்பதாக இதைப் புரிந்துகொள்ளலாம். இது தங்களுடைய நிலைக்குக் கிடைத்த வெற்றி என்று இரு பிரிவினரும் கூறிக்கொள்கின்றனர். கூடுதலாக எதிர்க்கட்சிகளின் தரப்புக்கு வலு சேர்ப்பதும் ஆகும்.

முன்னதாக, பிரகாஷ் காரத் தலைமையிலான பெரும்பான்மைப் பிரதிநிதிகள், ‘காங்கிரஸுடன் கூட்டணி வேண்டாம்’ என்று கூறிவந்தனர். ‘பாஜகவைப் பதவியிலிருந்து அகற்ற மிகப் பெரிய கூட்டணி அமைய வேண்டும், அதற்காக காங்கிரஸுடனும் கூட்டணி வைத்துக்கொள்ளப் பரிசீலிக்கலாம்’ என்று சீதாராம் யெச்சூரி ஆதரவாளர்கள் கூறிவந்தனர். தற்போது அரசியல் கூட்டணி இல்லை என்றதால் தேர்தல் கூட்டணியும் இல்லை என்பதே அர்த்தம் என்று காரத் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ‘தொகுதி உடன்பாடு - தேர்தல் கூட்டணி இல்லாமல்’ என்ற வாசகங்கள் விலக்கப்பட்டுவிட்டதால் தேவைக்கேற்ப அத்தகைய நிலையை எடுக்கவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்று யெச்சூரி ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

காங்கிரஸையும் பாஜகவையும் முற்றுமுதலாக சமதளத்தில் வைத்திட முடியாது என்பது எப்படியோ முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. இது 2019 சூழலில் பெரிய குழப்பங்கள் உருவாவதைத் தடுக்கும். ஒப்புக்கொள்ளப்பட்ட பொது விவகாரங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட பிற மதச்சார்பற்ற கட்சிகளுடன் நாடாளுமன்றத்தில் இணைந்து செயல்பட கட்சியின் இந்த அரசியல் கொள்கை வழிவகுக்கிறது; வகுப்புவாதத்துக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடவும் அது களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. தவிர, சமீப காலத்தில் கட்சிக்குள் உண்டாக்கிவந்த மனப் பிளவுகளுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும்.

அரசியல் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றுவதில் இரு தரப்புகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள சமரசம் வலுவானதுதானா என்பதை வரவிருக்கும் காலம் சொல்லிவிடும். காங்கிரஸுடன் தொகுதி உடன்பாடு செய்துகொள்ளவோ, தேர்தல் முடிவுகள் தெரிந்த பிறகு இணைந்து செயல்படவோ அரசியல் தீர்மானம் தடையாக இருக்கப்போவதில்லை. ஆனால், தேர்தலுக்கு முந்தைய உறவை எப்படிக் கையாளப்போகிறார்கள் என்பது முக்கியமானது. எப்படியும் தேர்தலுக்கு முன் ஒரு மாற்று உத்தியை இடதுசாரிகள் நாட்டு மக்கள் முன் கொண்டுவர வேண்டும். இனி, மாற்று உரையாடல் கட்சிக்கு வெளியே தொடரட்டும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in