எகிப்து அதிபர் தேர்தலும் பெயரளவிலான ஜனநாயகமும்!

எகிப்து அதிபர் தேர்தலும் பெயரளவிலான ஜனநாயகமும்!
Updated on
1 min read

கிப்து அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பதவியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் அப்துல் ஃபட்டா எல் சிசி. 97.08% வாக்குகளைப் பெற்று மிகப் பெரிய வெற்றியை அவர் பெற்றிருந்தாலும், இந்தத் தேர்தல் பெயரளவில் மட்டுமே ஜனநாயகமானது என்று கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் நெருக்கடிக்கு உள்ளாகிப் போட்டியிலிருந்து விலகினர். ஒருவர் மட்டும் அவரை எதிர்த்து நின்றார். ஆனால், அவரே சிசி ஆதரவாளர்தான் என்பது மிகப் பெரிய நகைமுரண்.

தொடர்ந்து 30 ஆண்டுகளாக ஹோஸ்னி முபாரக் நடத்திய சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக, அரபு வசந்தத்தின் ஒரு பகுதியாக 2011-ல் தலைநகர் கெய்ரோவின் தாரீர் சதுக்கத்தில் மக்கள் எழுச்சி தொடங்கியது குறிப்பிடத்தக்கது. முன்னாள் ராணுவத் தளபதியான சிசி, 2013-ல் முஸ்லிம் சகோதரத்துவம் அமைப்பின் ஆட்சியை அகற்றியவர். 2014-ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று எகிப்தின் அதிபரானார்.

சமீபத்திய தேர்தலின்போது, அரசுக்கு எதிரான கருத்துகள் விவாதிக்கப்படுகின்றனவா என்று அரசு உன்னிப்பாகக் கவனித்தது. பல்வேறு கெடுபிடிகள் அமலாக்கப்பட்டன. வாக்குப் பதிவும் மிகக் குறைவுதான். 41.5% வாக்குகள்தான் பதிவாகின. அதேசமயம், சிசிக்கு மக்களிடையே ஆதரவே இல்லை என்றும் கூறிவிட முடியாது. அரசியல் சித்தாந்தங்கள், தனிமனித உரிமைகள் எப்படியாக இருந்தாலும் சரி, 'நிலையான ஆட்சி தேவை' என்று கருதியவர்கள் அவருக்கு ஆதரவாகவே வாக்களித்திருப்பார்கள்.

2011-ல் எகிப்து மக்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ய என்னென்ன காரணங்கள் இருந்தனவோ அவை இப்போதும் அப்படியே நீடிக்கின்றன. பொருளாதாரரீதியிலான பிரச்சினைகளும் அரசியல்ரீதியிலான ஒடுக்குமுறைகளும் தொடர்கின்றன. 2016-ல் எகிப்து அரசு அமல்படுத்திய செலாவணி மதிப்புக் குறைப்பு, மின்சாரத்துக்கு வழங்கிய மானியங்கள் ரத்து ஆகியவற்றால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பன்னாட்டுச் செலாவணி நிதியத்திடமிருந்து பெரிய தொகையைக் கடனாகப் பெறுவதற்கு ஈடாக இந்த நடவடிக்கையை எடுத்ததாக சிசி அரசு சப்பைக்கட்டியது. ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டது தொடர்பாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் முபாரக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். அதே சமயம், 2013-ல் அதிபர் பதவியிலிருந்து முகம்மது மோர்சியை விலக்கப் போராடியவர்கள் மீது நீண்டகால தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதிபர் சிசி தன்னுடைய இரண்டாவது பதவிக்காலத்திலாவது வெளிப்படையாகச் செயல்படுவதுடன், தான் செய்யும் செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றே எகிப்து மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அடிப்படையான ஜனநாயக உரிமைகளை மீட்பது, எதிர்க் கட்சிகளுக்கு மரியாதை அளிப்பது ஆகியவை மிகவும் அவசியம். அரபு நாடுகள் வட்டாரத்திலேயே பெரிய நாடான எகிப்து, பிற நாடுகளுக்கு நல்ல உதாரணமாகத் திகழுமா என்பது சிசி அரசின் நடவடிக்கைகளைப் பொறுத்தது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in