ஆணாதிக்கத் திமிர் அழிய வேண்டும்
கர்நாடக மாநிலத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற மூன்று சம்பவங்கள், சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க மனோபாவத்தைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகின்றன. குடகு மாவட்டத்தில் உள்ள மலைக் கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுப் பெண், அவர் படித்த பள்ளியில் பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சிபெற்ற ஒரே மாணவி.
தேர்வு முடிவுகள் வெளியான நாளன்று அவருக்கும் 33 வயதுடைய பிரகாஷ் ஓம்காரப்பா என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. தகவல் அறிந்த காவல் துறையினர், மாணவிக்கு 18 வயது நிறைவடையும்வரை திருமணம் செய்துவைக்கத் தடை விதித்தனர். ஆத்திரமடைந்த பிரகாஷ், மாணவியின் தலையைத் துண்டித்துக் கொடூரமாகக் கொலைசெய்திருக்கிறார்.
இந்தச் சம்பவத்துக்குச் சில வாரங்கள் முன்பு ஹூப்ளியைச் சேர்ந்த கல்லூரி மாணவியை அவரது காதலர் ஃபயஸ் கத்தியால் குத்திக் கொன்றார். ஃபயஸின் தவறான நடவடிக்கைகளால் அவரிடமிருந்து அந்த மாணவி விலகியதால், ஆத்திரத்தில் அவர் கொலை செய்தார்.
பெங்களூருவைச் சேர்ந்த 25 வயது இளம்பெண்ணை, 46 வயதான சக ஊழியர் குத்திக்கொன்றார். இருவருக்கும் இடையே உறவு இருந்துவந்த நிலையில், அந்தப் பெண் உறவை முறித்துக்கொண்டதால் இந்தக் கொலை நிகழ்ந்துள்ளது.
பெண்ணின் நிராகரிப்பு, தவிர்ப்பு, உறவை முறித்துக்கொள்ளுதல் போன்றவையே இந்தக் கொலைகளுக்குக் காரணமாக முன்வைக்கப்படுகின்றன. ஒரு பெண் தன்னை நிராகரிப்பதை ஆணாதிக்க மனதால் எளிதாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
அதைத் தன் ஆண்மைக்கு விடப்படும் சவாலாகவே ஆண் மனம் தவறாகக் கருதுகிறது. உணர்வெழுச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் கொலைசெய்யும் அளவுக்குத் துணிகிறது. காதலின் பெயரால் நிகழும் அமில வீச்சு போன்றவற்றுக்கும் இந்த ஆணாதிக்க மனோபாவமே அடிப்படை.
ஹூப்ளி சம்பவம் அரசியலாக்கப்பட்டு ‘லவ் ஜிகாத்’ முத்திரை குத்தப்பட்டது இன்னொரு கொடுமை. நடைமுறையில் உள்ள சட்டங்கள் எதிலும் ‘லவ் ஜிகாத்’ என்கிற சொல் வரையறுக்கப்படவில்லை என்று 2020இல் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தபோதும், அந்தக் கொலைக்கு மதச் சாயம் பூசப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் மாணவியின் மரணத்துக்குக் கண்டனம் தெரிவித்து அந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம் சமூக வணிகர்கள் ஒரு நாள் கடையடைப்பில் ஈடுபட்டனர். மற்றபடி, மற்ற இரண்டு பெண்களின் கொலைக்குப் பெரிய அளவில் கண்டனங்கள்கூட எழவில்லை.
காதல் - உறவு தொடர்பான கொலைகளில் கொல்லப்பட்ட பெண்கள் அந்தத் தண்டனைக்கு உரியவர்கள்தான் என்கிற ஆணாதிக்க மனோபாவம் பாலின பேதமின்றிப் பலருக்கும் இருக்கிறது. ஆணை மறுப்பது பெண்ணின் உரிமையல்ல; அப்படி மறுப்பவர்கள் தண்டனைக்கு உள்ளாவது சரிதான் என்று காலம்காலமாகத் தவறாகச் சொல்லப்பட்டும் உணர்த்தப்பட்டும் வந்ததன்
விளைவு இது.
விளம்பரங்கள், திரைப்படங்கள், நெடுந்தொடர்கள் என மக்களை நேரடியாகப் பாதிக்கும் அம்சங்களில் பெண் வெறுப்புச் சிந்தனைகள் தொடர்ச்சியாக வெளிப்படுவதும் இதற்குக் காரணம். அப்படியான படைப்புகளை வரைமுறைப்படுத்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். பள்ளி அளவிலேயே ஆண்-பெண் உறவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாடத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியதும் அரசின் கடமை.
சமூகத்தில் ஆண்-பெண் உறவுநிலை குறித்த புரிதலை எல்லா நிலைகளிலும் ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இதுபோன்ற கொலைகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதும் தண்டனைகள் கடுமையாக்கப்படுவதும் அவசியம்.
