சிபிஎஸ்இ தேர்வு மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்!

சிபிஎஸ்இ தேர்வு மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்!
Updated on
1 min read

த்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய 10 மற்றும் 12-ம் வகுப்புகளின் பொதுத் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரம் மாணவர்களையும் பெற்றோர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 12-ம் வகுப்பு பொருளியல் பாட வினாத்தாளும் 10-ம் வகுப்பு கணித வினாத்தாளும் தேர்வு நேரத்துக்கு முன்னதாகவே கசிந்து வாட்ஸப் வழியாகப் பரவியிருக்கின்றன. இந்நிலையில் எல்லா மாணவர்களுக்கும் மறு தேர்வு என்பது மாணவர்களுக்குத் தேவையற்ற மன உளைச்சல்களைத் தரும் தண்டனையாகவே இருக்கும். சிபிஎஸ்இ-யின் நிர்வாகக் கோளாறுகளுக்கு மாணவர்களா பலியாவது?

மூன்று ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோல வினாத்தாள் கசிந்த சம்பவம் நடந்தது. அப்போது மத்திய கல்வித் துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி, இனி இப்படி நடக்காதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். வினாத்தாள் ரகசியம் காக்கப்படும், தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னால்தான் கருவூலத்திலிருந்து வினாத்தாள் எடுக்கப்படும் என்றெல்லாம் வாக்குறுதி தந்தார். அந்த வாக்குறுதிகளை கல்வித் துறை பின்பற்றவில்லை என்பது தற்போது நிரூபணமாகியிருக்கிறது.

தற்போதைய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் வாக்குறுதி அளித்தபடி இதற்குக் காரணமானவர்களை உடனடியாகக் கண்டுபிடித்து கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும். அதேசமயம் எல்லா மாணவர்களும் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்பது கொடூரமான செயல். முந்தைய வினாத்தாளைப் போல அல்லாமல் இது கடினமாகிவிட்டால் மாணவர்களின் கதி என்ன? தேர்வெல்லாம் முடிந்துவிட்டது இனி சற்று இளைப்பாறலாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்ட மாணவர்கள் மீண்டும் அமர்ந்து கவனத்தைக் குவித்து புதிய தேர்வுக்குத் தங்களைத் தயார் செய்வது உளவியல்ரீதியாகவே மிகவும் சிக்கலானது. மாணவர்களின் மனநிலை குறித்த அக்கறையோடு மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் மறுதேர்வு குறித்த முடிவுகளை எடுத்திருக்க வேண்டும்.

தேர்வில் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதுதான் வினாத்தாள் கசிவுகளுக்குப் பின்னாலிருக்கும் காரணம். ஆண்டுத் தேர்வைப் போலவே, கற்கும் காலத்தில் மாணவர்களின் ஆர்வத்தையும் திறமைகளையும் மதிப்பிடும் அகமதிப்பீட்டு முறைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது ஆண்டுத் தேர்வு குறித்த மாணவர்களின் அச்சத்தையும் பதற்றத்தையும் போக்கும். மாணவர்களின் கற்கும் திறன், கற்பனா சக்தி, சமயோசிதம் ஆகியவற்றையும் மதிப்படும் வகையில் புதிய தேர்வு முறைகள் பாரபட்சமில்லாமல் நடத்துவதற்கான ஆய்வுகள் அவசியம்.

தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே முக்கியம் என்ற நிலை மாறினால்தான் இந்தியாவில் சுய அறிவும் ஆய்வு மனப்பான்மையும் உள்ள மாணவர்கள் இன்னும் அதிகளவில் உருவாக முடியும். இல்லாவிட்டால், சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகள்தான் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் உருவாவார்கள். அவ்வப்போது மதிப்பிட்டாலும் ஆண்டுதோறும் மதிப்பிட்டாலும் அந்த முறையானது நேர்மையானது, மோசடிக்கு இடம் தராததாக இருப்பது முக்கியம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in