

இ
ந்த ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேசச் சந்தையில் சரிந்த கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை, சமீபத்திய வாரங்களில் வேகமாக உயர்ந்துவருகிறது. பிப்ரவரி தொடக்கத்தில் ஒரு பீப்பாய் 62 டாலர்களுக்கு விற்ற எண்ணெய் இப்போது மேலும் 10 டாலர்கள் கூடிவிட்டது. 2014-க்குப் பிறகு இப்போது உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மேற்காசியாவில் பதற்றம் ஏற்பட்டு எண்ணெய் விலை அதிகரித்துவருகிறது.
ஒரு பீப்பாய் விலை 70 டாலர்களைத் தாண்டிவிட்டதால் ‘ஒபெக்' (எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி நாடுகள் அமைப்பு) தனது லட்சியத்தை எட்டிவிட்டது, உற்பத்தியான எண்ணெய் தேங்காமல் விற்கப்படுகிறது என்று சர்வதேச எரிபொருள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது. பிப்ரவரிக்குப் பிறகு மார்ச் மாதத்தில் 2,01,000 பீப்பாய் அளவுக்கு எண்ணெய் உற்பத்தியை ‘ஒபெக்' குறைத்தது. இருந்தும் மார்ச் மாதத்தில் எண்ணெய் உற்பத்தி 1,80,000 பீப்பாய்கள் அதிகரித்தது. இதற்குக் காரணம் ‘ஒபெக்' அமைப்பில் இல்லாத அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விலை அதிகரிப்பைப் பயன்படுத்திக்கொண்டு அதிக வருவாய் ஈட்ட முற்பட்டதுதான்.
2014-ல் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது உற்பத்தி வரி உள்ளிட்ட தீர்வைகளை மத்திய அரசு அதிகமாக்கியது. விலை மேலும் உயர்ந்தபோதும்கூட தீர்வைகளைக் குறைக்க மத்திய அரசுக்கு மனமில்லை. எனவேதான் பெட்ரோல், டீசல் இப்போது வரலாறு காணாத அளவுக்கு சில்ல றை விலைக்கு விற்கப்படுகிறது.
“கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலையைத் தகுந்த காரணமின்றி ‘ஒபெக்' நாடுகள் உயர்த்தக் கூடாது; எண்ணெயை வாங்கிப் பயன்படுத்தும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதாரத்துக்கு அது பாதிப்புகளை ஏற்படுத்தும்” என்று ஒபெக் நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார் மோடி. அதேசமயம், உலகிலேயே பெட்ரோல், டீசலை அதிகம் இறக்குமதிசெய்யும் நாடுகள் என்ற வகையில் சீனாவும் இந்தியாவும் சேர்ந்து கூட்டுபேரம் பேசி விலையைக் குறைத்து வாங்கும் என்ற தகவலும் வெளியானது.
எண்ணெய் விலை உயர்வின் பாதிப்பை மத்திய அரசு உண்மையாக உணர்வதாக இருந்தால், உற்பத்தி வரியைக் குறைக்க வேண்டும். எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தும் பொறுப்பிலிருந்து முழுதாக விலகவேண்டும். அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களும் நஷ்டப்படக் கூடாது, அரசுக்கும் உற்பத்தி வரி மூலம் வருவாய் பெருகவேண்டும் என்ற அரசின் நிலையால்தான் விலையுயர்வை மக்கள் சுமக்க நேர்கிறது.