பாலியல் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்!

பாலியல் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்!

Published on

கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.பி-யும் முன்னாள் பிரதமர் தேவ கெளடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா, அவருடைய தந்தையும் சட்டமன்ற உறுப்பினருமான ரேவண்ணா ஆகியோர் மீது எழுந்துள்ள பாலியல் வல்லுறவு, கடத்தல் உள்ளிட்ட புகார்கள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. அரசியல் தலைவர்கள் இப்படியும் நடந்துகொள்வார்களா என்னும் கேள்வியையும் அவை எழுப்பியிருக்கின்றன.

அரசியல் செல்வாக்கும் பொருளாதார வலுவும் கொண்டவர்களில் ஒரு சிலர், பெண்கள் மீதான பாலியல் குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருவதன் சமீபத்திய உதாரணமாக பிரஜ்வல் - ரேவண்ணா விவகாரம் அமைந்துள்ளது. இதில் ரேவண்ணா கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், ஜெர்மனிக்குத் தப்பிச் சென்ற பிரஜ்வலைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவரது முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது நம்பிக்கையளிக்கிறது. கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலம் முதல் நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அக்கட்சி போட்டியிடும் இன்றைய காலகட்டம் வரை இப்படியான குற்றங்களில் பிரஜ்வல் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

அதிகாரத்தில் இருக்கிறவர்கள் பெண்களுக்கு இழைக்கும் குற்றங்களுக்குச் சட்டபூர்வமான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அதுதான் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். ஆள்வோர் மீதான நம்பிக்கையை மக்களிடையே வலுப்படுத்தும். மாறாக, சட்டத்தின் பிடியில் இருந்து குற்றவாளிகள் தப்பிப்பதும் பதவி, அதிகாரம் என வலம்வருவதும் பாதிக்கப்பட்டோர் நீதிக்காக நீண்ட காலம் காத்திருப்பதும் சட்டத்தின் மீதான அவநம்பிக்கையை ஏற்படுத்துவதுடன் பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கும்.

ஹாசன் தொகுதிக்கு வாக்குப்பதிவு முடிந்துவிட்ட பிறகு, பெண்களிடம் பிரஜ்வல் முறைதவறி நடந்துகொண்ட ஆயிரக்கணக்கான காணொளிகள் வெளியாகியிருக்கும் நிலையில், அரசும் காவல் துறையும் அவற்றை மிகுந்த பொறுப்புடனும் கவனத்துடனும் அணுக வேண்டியது அவசியம். அந்தக் காணொளிகளில் இடம்பெற்றிருக்கும் பெண்களின் பாதுகாப்புக்கும் கண்ணியத்துக்கும் அரசு பொறுப்பேற்க வேண்டும். தவறும்பட்சத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களது குடும்பம் - பொதுச்சமூகத்தின் புறக்கணிப்புக்கும் இழிசொல்லுக்கும் ஆளாக்கப்படக்கூடும்.

பிரஜ்வல் மீது புகார் அளித்த இளம்பெண்ணை பிரஜ்வல்லின் தந்தை ரேவண்ணா கடத்தியதாக வெளியான செய்திகள் இன்னும் அதிர்ச்சி தருகின்றன. பாலியல் புகார் அளிக்க முன்வரும் பெண்களை முடக்கும் இந்த அட்டூழியம் கடுமையான கண்டனத்துக்குரியது. அதிகாரத்தில் இருப்பவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் பெண்கள் தங்களுக்கு நீதி கிடைக்காது; அதிகாரமும் செல்வாக்கும் கொண்டவர்களுக்கு எதிராகத் தங்களால் போராட முடியாது என்று முடங்குவதைப் பொதுச் சமூகம் தடுத்து நிறுத்த வேண்டும். இதுபோன்ற பெரும் தடைகளையும் அச்சுறுத்தலையும் தாண்டித்தான் ஒன்றிரண்டு பேர் புகார் அளிக்க முன்வருகிறார்கள். அவர்களையும் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி அப்புறப்படுத்த நினைப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

பாலியல் குற்றம் ஒவ்வொன்றுமே கவனத்துடன் கையாளப்பட வேண்டியது என்கிற நிலையில், அதிகாரத்தில் இருப்பவர்கள் இழைக்கிற பாலியல் குற்றங்களில் சட்டமும் நீதித் துறையும் எவ்விதச் சார்புமின்றிச் செயல்பட வேண்டியது அவசியம். தாமதமாக வழங்கப்படும் நீதி, மறுக்கப்படும் நீதிக்குச் சமம் என்பது எக்காலத்துக்கும் பொருந்தும். பிரஜ்வல் மீதான குற்றத்தை அரசியல் நேரத்துப் பகடைக்காயாகத் திசைதிருப்பாமல், அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் நீதி கிடைப்பதை அரசும் நீதி வழங்கும் அமைப்புகளும் அவர் சார்ந்திருக்கும் கட்சியும் உறுதிப்படுத்த வேண்டும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in