

நடைபெற்றுக்கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலில், ஜனநாயகத்தைக் கேலிக்குள்ளாக்கும் வகையில் நிகழ்ந்துவரும் சம்பவங்கள் மிகுந்த சோர்வளிக்கின்றன. குஜராத்தின் சூரத் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனு தொழில்நுட்பக் காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, பிற வேட்பாளர்களும் வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றுவிட்டதால் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இது கடும் விமர்சனத்துக்கு வழிவகுத்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காந்தி பம், கடைசி நேரத்தில் வேட்பு மனுவைத் திரும்பப் பெற்று, பாஜகவில் இணைந்திருக்கிறார்.
பாஜக கொடுக்கும் அழுத்தம்தான் இதற்கெல்லாம் காரணம் எனக் காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. நிலத் தகராறு தொடர்பான வழக்கு உள்படத் தன் மீது மூன்று வழக்குகள் இருப்பதாக வேட்பு மனுவிலேயே அக்ஷய் காந்தி குறிப்பிட்டிருந்தார். இந்தச் சூழலில் நிலத் தகராறு வழக்கில், கொலை முயற்சிக்கான இ.த.ச. 307 சட்டப் பிரிவு சில நாள்களுக்கு முன்னர் சேர்க்கப்பட்டதாகக் காங்கிரஸ் சுட்டிக்காட்டியிருக்கிறது.
ஆனால், தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் காங்கிரஸ் கட்சி அதிகப் பணம் வசூலிப்பதாகவும் அந்த அதிருப்தியில்தான் அக்ஷய் காந்தி இந்த முடிவை எடுத்தார் என்றும் பாஜகவினர் வாதிடுகின்றனர். “பண பலத்தால் இந்தத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை அக்ஷய் காந்தி என்னிடமிருந்து தட்டிப்பறித்தார்” என இந்தூர் காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் கூறியிருப்பது இந்த விமர்சனத்துக்கு வலுசேர்க்கிறது.
வேட்புமனு நிராகரிக்கப்பட்ட கையோடு நிலேஷ் கும்பானி தலைமறைவானது, வேட்பு மனுவைத் திரும்பப் பெற்ற அக்ஷய் காந்தி பாஜக தலைவர்களால் காரில் அழைத்துச் செல்லப்பட்ட விதம் ஆகியவை அரசியல் நாடகத்தின் அவல அரங்கேற்றங்கள். இது ஜனநாயகத்துக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் என்று எதிர்க்கட்சிகள் சொல்வது புறந்தள்ளத்தக்கது அல்ல.
மறுபுறம், சூரத்திலும் இந்தூரிலும் நடந்திருப்பவை பாஜக மீது மக்கள் வைத்திருக்கும் ஆழமான அன்பைக் காட்டுவதாகவும், காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது அக்கட்சியினர் நம்பிக்கை இழந்துவிட்டதன் சாட்சியம் இது என்றும் பாஜகவினர் கூறிவருகின்றனர். கூடவே, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து பாஜகவுக்குப் பலர் தாவிவருவது, அக்கட்சியினரின் கொள்கைப் பிடிப்பு குறித்த கேள்வியை எழுப்புகிறது.
வழக்குகளில் தொடர்பில்லாத, கறைபடியாத வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் அரசியல் கட்சிகள் இன்னும் தீர்க்கமாகச் செயல்பட வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது. பிற கட்சிகளைச் சேர்ந்த, குற்ற வழக்குப் பின்னணி கொண்டவர்களைத் தங்கள் கட்சியில் இணைப்பதன் மூலம் ஊழலுக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை பாஜக இழந்துவருவதாக எழும் விமர்சனங்களும் முக்கியமானவை.
வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வுசெய்யப்படுவது இது முதல் முறையல்ல. அருணாசலப் பிரதேசச் சட்டமன்றத் தேர்தலில் 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வானது சமீபத்திய உதாரணம். சுதந்திர இந்தியாவில் இதுவரை 35 பேர் இவ்வாறு நாடாளுமன்றத்துக்குத் தேர்வுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
அவர்களில் பெரும்பான்மையானவர்கள் காங்கிரஸார்தான். இதற்கு முன்னர், 2012இல் நடந்த கன்னோஜ் மக்களவை இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் டிம்பிள் யாதவ் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டார்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு, பெரும் அரசியல் கொந்தளிப்புக்கு நடுவில் இவ்வாறு நிகழ்ந்திருப்பதுதான் விமர்சனத்துக்கு வழிவகுத்திருக்கிறது. அரசியலில் குறைந்தபட்ச அறத்தைக்கூடப் பேணாத கட்சிகள், மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழந்துவிடும் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது!