

கா
ஷ்மீர் மாநிலம் கதுவாவில் எட்டு வயது சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இரட்டை நாக்குடன் பேசிவருகிறது பாஜக. இவ்விவகாரத்தில் ஜம்மு பகுதியில் பாஜக காட்டும் முகமும் தேச மக்களுக்குக் காட்டும் முகமும் ஒன்றுக்கொன்று முரணானவை. கதுவா சம்பவத்தையொட்டி நாடு முழுக்க எழுந்த எதிர்க்குரல்களையடுத்து இதுகுறித்துப் பேசினார் பிரதமர். “பெண்கள் மீதான வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை இருக்கும்” என்று உறுதியளித்தார். ஆனால், கட்சிக்குள் அவர் என்ன செய்தார்? இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆதரவாக இந்து ஏக்தா மஞ்ச் எனும் அமைப்பு நடத்திய ஊர்வலத்தில், பாஜகவைச் சேர்ந்த, லால் சிங், சந்தர் பிரகாஷ் ஆகிய இரண்டு அமைச்சர்கள் கலந்துகொண்டனர். ஆனால், இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க பாஜக ஆர்வம் காட்டவேயில்லை.முதல்வர் மெஹ்பூபா முஃப்தி கொடுத்த நெருக்கடியின் காரணமாக, பதவி விலகுமாறு அவர்கள் இருவரையும் கேட்டுக்கொண்டது, காஷ்மீர் கூட்டணி அரசில் பங்கேற்றிருக்கும் பாஜக. எனினும், அவர்கள் இருவர் மீதும் எந்தத் தவறும் இல்லை என்பதைப் போலத்தான் காட்டிக்கொள்கிறது. இருவரும் பதவி விலகிய கையோடு அவர்களுக்குப் பதிலாக வேறு இருவரை அமைச்சர்களாக்கிவிட்டது.பாலியல் வல்லுறவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று உறுதியளிக்கும் பிரதமர் நரேந்திர மோடி, கதுவா சம்பவத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்க முயன்ற பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?
இந்தப் பிரச்சினை காரணமாக, கூட்டணியில் முறிவு ஏற்படுவதை மெஹ்பூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சியோ(பி.டி.பி.) பாஜகவோ விரும்பவில்லை. நில அடிப்படையிலும், மத அடிப்படையிலும் இரு வேறு துருவங்களாக இருக்கும் இந்தக் கட்சிகள் கூட்டணியில் நீடிக்க இரண்டு காரணங்கள். தேசிய மாநாட்டுக் கட்சியை ஓரங்கட்ட வேண்டும் என்பது பி.டி.பி.யின் நோக்கம். பாஜகவைப் பொறுத்தவரை ஒரே நோக்கம் காங்கிரஸை ஓரங்கட்டுவது.
கூட்டணி உடைவது தங்கள் எதிரிக் கட்சிகளுக்குச் சாதகமாகிவிடும் என்ற ஒரே காரணத்தால் பி.டி.பி. – பாஜக கூட்டணி தொடர்கிறது. அரசியல் கணக்குகள் எப்படியோ போகட்டும். ஆட்சியில் இருப்பவர்கள் எல்லோருக்கும் பொதுவானவர்களாக அக்கறையுடன் செயல்பட வேண்டும் இல்லையா? பிரதமர் என்பதைத் தாண்டி பாஜக கூட்டணி ஆளும் மாநிலம் என்ற வகையிலும் கூடுதல் பொறுப்பு இந்த விஷயத்தில் மோடிக்கு இருக்கிறது. நடவடிக்கைகளை சொந்தக் கட்சியிலிருந்து அவர் தொடங்க வேண்டும்!